TNPSC Thervupettagam

சர்வதேசத் தாய்மொழி நாள்: செந்தமிழே வணக்கம்

March 11 , 2019 2118 days 1237 0
  • மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்விக்காகவும் ஆண்டுதோறும் சர்வதேசத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. 2019-ம் ஆண்டைத் தொல்மொழிகளுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது.
  • தாய்மொழியின் அவசியமும் அருமையும் நமக்கு நன்கு தெரியும். ஏனெனில், நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் பெரும் போராட்டம் நடத்தி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம். முதல் மொழிப் போராட்டம் 1938-ல் தொடங்கி 1940வரை நடைபெற்றிருக்கிறது.
தாய்மொழிக்கான போர்
  • சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ல் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி, பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையை 1938 ஏப்ரல் 21 அன்று பிறப்பித்தார். இதை அடுத்து தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பு, இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்தும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன் (1939 ஜனவரி 15 அன்றும்), தாளமுத்து (1939 மார்ச் 11 அன்றும்) ஆகிய இருவர் உயிரை இழந்திருக்கிறார்கள். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
  • இந்த பிப்ரவரி 21தான் சர்வதேசத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் காரணம் நமது மொழிப் போர் அல்ல. அது வேறொரு வரலாற்றை முன்னிட்டுக் கொண்டாடப்படுகிறது. வங்க தேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலேயே சர்வதேசத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 கொண்டாடப்படுகிறது.
  • மேற்கு பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருந்த உருது 1948-ல் மொத்த நாட்டுக்குமான ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்க தேசம்) பெரும்பான்மையான மக்களால் வங்க மொழியே பேசப்பட்டது என்பதால் இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது. தாக்கா பல்கலைக் கழக மாணவர்களும் தாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 1952 பிப்ரவரி 21 அன்று நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
  • இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவுகூரும் வகையில் வங்கதேசம் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளைக் கொண்டாடியது. இந்த நாளை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பிப்ரவரி 21-ஐ மொழிரீதியான பன்மைத்துவத்தைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது. இந்த நாள்தான் சர்வதேசத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆட்சி மொழியும் பயிற்று மொழியும்
  • நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்குவந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும் அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
  • இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதே போல், மயிலாடுதுறை கல்லூரி மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இது போக இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
  • 1968-ம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது “இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார். இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி கல்லூரிக் கல்விவரை தமிழ் பயிற்று மொழி என்று அறிவித்தார்.
  • கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது. இன்னும் உலகில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் - புரிந்துகொள்ளும் தாய்மொழியில் கல்வி கற்க இயலாத நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை.
  • மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல, அது பண்பாட்டு அடையாளம். உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் சுமார் 6,000 மொழிகளிலும் 43 சதவீத மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இந்த மொழிகளில் பலவற்றைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்துக்குள்ளேயே இருக்கும்.
  • சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும் கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கிலுள்ளன. அதிலும் நூற்றுக்கும் குறைவான மொழிகளே நமது டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் நமது மொழி குறித்து நமக்கு எவ்வளவு கவனம் தேவை என்பதையே இந்த நாளில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்