TNPSC Thervupettagam

சாலைப் பாதுகாப்பு

May 29 , 2019 2052 days 1486 0
  • தேசிய சாலை பாதுகாப்பு வாரம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்பட்டபோது,  அப்பா எனக்கு வேணும், அப்பா கிட்ட என்ன கூட்டிட்டு போ என்ற மகளின் கதறல், பிணக்கிடங்கில் நின்ற அனைவரின் இதயத்தையும் ஈட்டியால் குத்திக் கிழித்தது. அந்தக் குழந்தைக்கு ஆறுதல் கூற அங்கு நின்ற யாருக்கும் தைரியம் இல்லை. ஆயிரம் கனவுகளுடன் வீடு நோக்கிச் சென்ற குடும்பத் தலைவன், முகம் கூடத் தெரியாமல் உருக்குலைந்து கிடந்தது, ஆயிரம் கேள்விகளை கண்முன்னே எழுப்பி நிற்கிறது.
சாலை விபத்து
  • இங்கே அவரின் இறப்புக்கு அவர்தான் காரணம் என்று சொல்லியும் தப்பிக்க முடியவில்லை. பிறப்பும், இறப்பும் வாழ்வின் எதார்த்தங்களே. எனினும், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு ஈடுகட்ட முடியாத, ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதற்கு எங்கே, எப்படி, யாரைப் பொறுப்பாக்குவது? பொறுப்பற்ற சமூகமா, விழிப்பற்ற தனிமனிதனா, இல்லை அரசா என்ற கேள்விகளைக் கொண்ட விவாதம் தேவைப்படுகிறது.
  • தமிழகத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 15,000 குடும்பங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரண ஓலங்கள் மாபெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஐ.நா. சபை 2011 முதல் 2020 வரை சாலைப் பாதுகாப்பு செயல் ஆண்டுகளாக அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் சாலைப் பாதுகாப்பு அறிக்கையின்படி (2018) ஆண்டுக்கு 5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். அதற்கும் மேலான எண்ணிக்கையில் மக்கள் படுகாயம் அடைகிறார்கள்.
  • மேலும், இந்த அறிக்கையின்படி 5 -29 வயது வரை உள்ள குழந்தைகளும், இளைஞர்களும் அதிகம் உயிரிழக்கின்றனர். எச்ஐவி/எய்ட்ஸ், காசநோய், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களில் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. மனிதர்கள் உயிரிழப்பதற்கான காரணங்களின் தரவரிசைப் பட்டியலில் சாலை விபத்துகள் 8-ஆம் இடத்தில் உள்ளன. தற்போது உலகளவில் சாலை விபத்துகளில் ஒரு லட்சத்துக்கு 18 பேர் உயிரிழக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் நிரந்தர வளர்ச்சி இலக்கின்படி, 2020-இல், இது 8-ஆகவும் 2030-இல் 6-ஆகவும்  குறைக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், இருக்கைப் பட்டை அணியாமல் பயணித்தல், வாகனம் ஓட்டும்போது  குழந்தைகளைக் கட்டுப்பாட்டுடன் வைக்காதிருத்தல் ஆகியவை அதிக சாலை விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
  • மேலும் தகுதியற்ற, அனுபவமற்ற, பார்வைக் குறைபாடுள்ள ஓட்டுநர்கள், ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறை மீறல்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுதல், சாலை விதிகளைப் பின்பற்ற மறுப்போர், செயல்படாத அல்லது தவறாகச் செயல்படும் சைகை விளக்குகள், சரியான முறையில் கட்டமைக்கப்படாத தரமற்ற சாலைகள், தடுப்புகள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகள், ஓட்டுவதற்குத் தகுதியற்ற வாகனங்கள், வாகனத்தின் விளக்குகளைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஓட்டுதல், சாலை விதிமுறைகளைப் பற்றிய சரியான அறிவின்மை ஆகியவை சாலைகளில் மாபெரும் மரண ஓலங்களை ஏற்படுத்துகின்றன.
  • தமிழகத்தில் இந்திய சராசரியைவிட 50% அதிக சாலை விபத்துகள் நிகழ்கின்றன. அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில்  இந்தியாவில் முதல்/ இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை, சாலை விபத்துகள் 37% அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரம்
  • 2016-இல் தமிழகத்தில், சாலை விபத்தில் ஒரு நாளைக்கு 47 நபர்கள் வீதம், 17,218 நபர்கள் உயிரிழந்துள்ளனர்; 2016-இல்  71,431 சாலை விபத்துகள் நடந்துள்ளன; அதில் 99,381 பேர் படுகாயமடைந்துள்ளனர். தமிழகத்தில் 13 .5 %, மகாராஷ்டிரத்தில் 5 % என்ற விகித அளவில் இரு சக்கர வாகன விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 3 முதல் 4 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள்.
  • லக்னௌவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின்  2013-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் வாரத்துக்கு 2,650 பேர் இறப்பதாகவும், 9,000 பேர் படுகாயமடைவதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆண்டில் 1,37,423 பேர் இறந்ததாகவும், 4,69,900 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1,40,000 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த விகிதத்தில் 2025-இல் ஆண்டுக்கு 2,50,000 பேர் இறப்பார்கள் எனவும் தெரிகிறது. இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 15 பேர் உயிரிழப்பதாகவும், 53 பேர் படுகாயமடைவதாகவும் தெரிகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து விபத்துகள் 3 %, உயிரிழப்புகள் 1 % என்ற விகித அளவில் அதிகரித்து வருகின்றன.
  • இந்தியாவில் சாலை விபத்துகளில் 30 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண்களே 2% இறக்கிறார்கள். மேலும் மே-ஜூன், டிசம்பர்-ஜனவரி மாதங்களில், கிராமப்புறங்களைவிட, நகர்ப்புறங்களில் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
  • தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் 2015-இன் அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 2% உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் 28.2%, மாநில சாலைகளில் 25% உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஓட்டுனர்களின் ஒழுங்கீனமே (78%) சாலை விபத்துக்குக் காரணம் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மற்ற நாடுகளில்
  • 141 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட சீனாவில், 2016-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பின்படி 2,56,180 பேர்களும்,132 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 2, 99, 091 நபர்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. சீனாவில் ஒரு லட்சத்துக்கு 2 நபர்களும், இந்தியாவில் 22.6 நபர்களும் உயிரிழப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
  • சீனாவில் தலைக்கவசம் அணிவதும், இருக்கைப் பட்டை அணிவதும்  கட்டாயமாக்கப்பட்டு சாலை விபத்து உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. சீனாவில் சாலை கட்டமைப்பு வசதிகள் மிகவும் நன்றாக உள்ளன. மேலும், அங்கு அதிக ஆபத்து ஏற்படும் சாலைகள் கண்டறியப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள்  தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.
  • சீனாவுடன் ஒப்பிடும்போது தலைக்கவசம் அணிவதும், கார்களில் பயணிக்கும் போது இருக்கைப் பட்டை அணிவதும் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இந்தியாவில்  குழந்தைகள் பாதுகாப்புக்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
  • சாலைப் பாதுகாப்பில் உலகின் தலைசிறந்த நாடாக விளங்கும் ஸ்வீடன், கடந்த 15 ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து மரணங்களை 66% குறைத்துள்ளது. ஸ்வீடனில் தற்போது ஒரு லட்சத்துக்கு 8 நபர்கள் மட்டுமே சாலை விபத்தில் இறக்கின்றனர். இதற்காக ஸ்வீடன் நாடாளுமன்றம்  விஷன் ஜீரோ என்ற தொலைநோக்கு கொள்கையைச் செயல்படுத்துகிறது. ஸ்வீடனில் காவல் துறையின் முயற்சிகளும், நீதிமன்றங்களின் செயல்பாடுகளும், ஊடகங்களின் பங்களிப்பும் ஒருங்கிணைந்து அமைந்துள்ளன.
  • மேலும் 1% வேக அதிகரிப்பானது 4% சாலை விபத்துகளை ஏற்படுத்துகிறது. வேகக் கட்டுப்பாடு சராசரியாக 5% குறைக்கப்படும்போது, 30%  உயிரிழப்பு குறைவதாக அறிக்கைகள் கூறுகின்றன. பல நாடுகளில் வேகக் கட்டுப்பாடானது, தானியங்கி கேமராக்களின் மூலமும், காவல் துறையின் கண்காணிப்பின் மூலமும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
மரணங்கள் 
  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் 5 முதல் 35% வரையிலான உயிரிழப்புகள்  ஏற்படுகின்றன. சரியாக தலைக்கவசம் அணிவது 42% உயிரிழப்பையும், சாலை விபத்தில் படுகாயம் அடைவதை  69 சதவீதமும் தவிர்க்கிறது. கார்களில் பயணிக்கும்போது இருக்கைப் பட்டை அணிவது 45 - 50% முன் இருக்கையில் இருப்போருக்கும், ஓட்டுநருக்கும், பின்னிருக்கையில் 25% நபர்களுக்கும் உயிரிழப்பைத் தவிர்க்கிறது. குழந்தைகள் கட்டுப்பாடுடன் கார்களில் பயணம் செய்வது உயிரிழப்பை 60%  தவிர்க்க உதவுகிறது.
  • இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சாலைப் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது மாபெரும் குற்றச்சாட்டாக உள்ளது. நகர்ப்புறங்களில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பும், மிதி வண்டி மற்றும்  இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்குப் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதியின்மையும் அதிக சாலை விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே, சாலையை சிறப்பாக புதிய தொழில்நுட்பங்களுடன் வடிவமைத்தல், பராமரித்தல், சிறப்பான போக்குவரத்து நிர்வாகம், வாகனங்களின் தரத்தை உயர்த்துதல், வேகக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துதல், கார்களில் இருக்கைப் பட்டை அணிவது மற்றும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதை குழந்தைகளுக்கும் கட்டாயமாக்குதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல், அறிவிக்கைப் பலகைகளை சரியான இடத்தில் அமைத்தல் போன்றவை சாலை விபத்துகளைப் பெருமளவில் குறைக்கும்.
  • விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதும் உயிரிழப்பைக் குறைக்க உதவும். இவர்களை அனுமதிப்போருக்கு இப்போது எந்த நடைமுறைச் சிக்கலும் இல்லை. இதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
  • இந்தியாவில் சாலை விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் பொது மக்களின் நலனுக்கு என்பதை அவர்களே ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் காவல் துறையும், நிர்வாகத் துறையும் மாபெரும் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
  • எனவே, சாலைப் பாதுகாப்புக்கு  போக்குவரத்துத் துறை, பொறியியல் துறை, சுகாதாரத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, காவல் துறை, நீதித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியே,  சாலை விபத்துகளைப் பெருமளவு குறைக்க உதவும். இதில் பொதுமக்களின் விழிப்புணர்வும், சமூகப் பொறுப்பும் உயிரிழப்பில்லா சாலைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நன்றி: தினமணி  (29-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்