- நீண்ட வரலாறும் நெடிய நிலப்பரப்பும் கொண்ட நாடு சீனாவாகும். தொன்மையில் பெருமை காணும் நாடுகளில் மாற்றங்கள் எளிதில் அமைவதில்லை.
மக்கள்தொகை, இயற்கை வளம், அரசியலமைப்பு, பொருளாதாரச் செழிப்பு, கல்வி மேம்பாடு, மகளிர் நலம் ஆகியவற்றை ஒரு நாட்டின் வளர்ச்சி அடிப்படையாகக் கொண்டது. மக்கள்தொகை இருந்தாலும் அவர்களை வழிநடத்தும் தலைவர்களின் அணுகுமுறையைப் பொருத்துத்தான் அந்த நாட்டின் எதிர்காலம் வடிவம் பெறும். ஒரு நாட்டின் உற்பத்தி அமைப்புகள், ஓய்வில்லாத உழைப்பு, செயல்களை அணுகும் முறை, ஆட்சியின் செயற்பாடுகள் முதலியன முதலிடம் பெறும்.
சீனர்கள்
- வாழ்வில் வெற்றிபெற, சீனர்கள் கடுமையாக உழைப்பவர்கள் என்பது உலகறிந்த உண்மை. வெடிகுண்டு வைத்து அச்சுறுத்துவதோ, பிறரை நடுங்க வைப்பதோ, சமய வெறுப்பை உருவாக்கவோ சீனர்கள் என்றும் முற்பட மாட்டார்கள். உலகில் அனைவருடனும் அமைதியான முறையில் வாழ்வதே முதல் நோக்கமாகும்.
சீனாவில் சுமார் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அனைவரும் ஒரே முறைப்பட்ட வாழ்வையே வாழ்கின்றனர். சீனர்களில் ஒருவரை நீங்கள் அழித்தால், அவரைப் போலவே ஐவர்களாக வெளிப்படுவோம் என்று சீனர்கள் கூறுவார்கள்.
- சீனர்கள் தமக்குள் ஒருவருக்கொருவரை ஈடு செய்ய முடியாதபடி இருக்கிறார்கள். சீனர்களுக்குத் தனிச் சிறப்புகள் என்று ஒன்றும் இல்லை; அறிவுத்திறன் மிக்கவர் என்று ஒருவரைக் கருதினால், அவரைவிட அறிவுத் திறன் மிக்கவர்கள் இவ்வுலகில் ஆயிரம் பேர் உள்ளனர். ஒருவரை வலிமையானவர் என்று கருதினால், உலகில் வலிமை மிக்க ஆயிரம் பேர் உள்ளனர். இந்த மனப்போக்கு சீனர்களுக்கு நிதானத்தைத் தருகிறது. "பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்ற தமிழ்ப் பாடல் நமக்கு நினைவுக்கு வருகிறது.
சீன மரபணுக்கள்
- உலகம் முழுவதையும் பல நூற்றாண்டுகளாக சீனர்கள் வலம் வந்துள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் பொருந்திக் கொண்டு வாழத்தக்க வகையில் சீன மரபணுக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கரப்பான்பூச்சிகளைப் போன்றவர்கள் சீனர்கள். இந்த உலகில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் அவர்களை விட்டு விடலாம்; சீனர்கள் அந்த இடத்தில் தங்களுக்கென்று ஒரு பகுதியை உருவாக்கிக்கொண்டு வாழத் தொடங்கி விடுவார்கள். சுற்றி உள்ள சூழ்நிலைக்கேற்ப சிறப்பாக வாழ்வது அவர்கள் இயல்பு; சீனர்களின் சிலர் புலம் பெயர்ந்து வாழ்வதுண்டு. ஆனால், சீனர்களுள் பலர் ஓரிடத்திலேயே தொடர்ந்து நிலையாக வாழ்ந்து வருவார்கள்.
- ஒரு தனி நபராக வெற்றி பெறுகிறோமா, இல்லையா என்பது குறித்து எவரும் வருந்தமாட்டார்கள். ஆனால், கூட்டு முயற்சியில் வென்றுள்ளோம் என்பதை அறிந்தால், அவர்கள் குடும்பம் பெருமிதம் கொள்ளும். வெற்றி வாய்ப்பைச் சிலர் இழக்க நேரிடலாம். இந்த உலகில் எவையும் நமக்கானதல்ல; வெற்றி வாகை நம்மைத் தேடி வர வேண்டுமென்று எவரும் எதிர்பார்ப்பதில்லை.
- வரும் சீனர்களுக்கு எவற்றையும் வழங்குவதில்லை. உழைத்துத்தான் உயர வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். வெற்றிக்கான முயற்சியில் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதை நன்கறிந்து, தொடர்ந்து முயற்சி செய்வதற்குச் சீனர்கள் தயங்குவதே இல்லை.
மிகக் கவனமாகக் கணக்கிட்டுச் செலவு செய்ய சிறு வயதிலிருந்தே சீனர்கள் கற்பிக்கப்படுகிறார்கள். சிக்கனம், அளவாகச் செலவு செய்தல், மீதத்தைச் சேமித்துக் காத்தல் பற்றி சீனர்களுக்குக் கற்பித்தது போல, வேறு எந்தச் சமுதாயமும் தங்கள் வீட்டில், பிள்ளைகளுக்குக் கற்பிப்பது இல்லை.
- பாலுக்காகவும், இடைத்துணிக்காகவும் எவ்வளவு செலவு செய்தார் என்பதைப் பிள்ளைகளிடம் தாய் அடிக்கடி கூறுவார்.
சமுதாயம்
- எந்த ஒரு சமுதாயமும் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய திறனை வளர்ப்பதில்லை.
உங்களுக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள் மற்றும் வாய் உள்ளதெனில், அவற்றை வைத்து நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கைகள் இல்லாதவர்கள் உங்களை விடச் சிறப்பாக செயலாற்றுவார்கள் என்று சிறு வயது முதலே பிள்ளைகளை நெறிப்படுத்துவார்கள்.
- மிகவும் வசதியான வாழ்வை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பது என்பது சீனர்களின் மரபணுக்களில் கலந்த ஒன்றாகும். ஆனால், ஒரு முறை இந்த உலகைச் சுற்றிப் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சீன நகரம் இருக்கும். சீனாவை விட்டு தாங்கள் வெளியேறினாலும் கூட, தாங்கள் ஆட்சி புரிவதற்கான மற்றொரு நாட்டை நாங்கள் தேடுவதில்லை.
- அனைவரின் நலனையும் கவனித்துக் கொள்வதற்காக மட்டுமே எங்களின் (சீன நாட்டின்) தலைவர்கள் இருக்கின்றனர் என்ற எண்ணம் உடையவர்கள்.
சீனர்கள் தங்களின் பணியை நிறைவேற்றி அதன் மூலம் கிடைக்கும் பயன்களை மட்டுமே அடைய விரும்புவார்கள். தங்களைப் போன்று சிந்தனையுடைய அனைத்து இன மக்களின் நட்பையும் பெறச் சீனர்கள் எப்போதும் விரும்புவார்கள்.
- கால வரலாற்றில், மிகக் குறைவான நேரத்தை மட்டுமே நாம் கடந்து செல்கிறோம். எனவே, நாம் நமது திறனை முழுமையாகப் பயன்படுத்தினால், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேற இயலும் என்பதே சீன வாழ்வின் அடிப்படையாகும்.
வாழ்நாள் என்பதே ஒரு வாய்ப்பாகும். சீனர்கள் தங்கள் நாட்டை தங்கள் வீடாகவே எண்ணி சிறப்பாக்கிக் கொள்கின்றனர்.
நன்றி: தினமணி (08-07-2019)