TNPSC Thervupettagam

ஐ.நா.வில் இந்தியா...

July 4 , 2019 2018 days 1723 0
  • இந்தியாவுக்கு சர்வதேச அளவில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் ராஜதந்திர ரீதியிலான வெற்றி ஒன்று போதிய கவனத்தைப் பெறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கைகூடும் நிலையை எட்டியிருக்கிறது.
பாதுகாப்புக் குழு
  • பத்து உறுப்பு நாடுகளைக் கொண்டது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு. அந்த பத்து உறுப்பினர்களில் ஐந்து உறுப்பினர்கள் நிரந்தர உறுப்பினர்கள். ஏனைய ஐந்து உறுப்பினர்கள் சுழற்சித் தேர்தல் மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த உறுப்பினர்கள் நிரந்தரமில்லாத உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த 55 நாடுகள் ஒருமனதாக 2021-22-க்கான நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவதை அங்கீகரித்திருக்கின்றன.
  • இந்தக் குழுவில் நிரந்தரமில்லாத பதவிக்கு விழைந்த ஒரே நாடு இந்தியாதான் என்பதும், அனைத்து நாடுகளும் இந்தியாவின் தேர்வை அங்கீகரித்திருக்கின்றன என்பதும் நமக்குக் கிடைத்திருக்கும் முதல்கட்ட வெற்றி.
  • அடுத்தகட்டமாக, ஐ.நா.வின் பொதுச்சபை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிரந்தரமில்லாத ஐந்து உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பினர்கள் நாடுகள் அந்தத் தேர்தலில் வாக்களிக்கும். 129 நாடுகளின் ஆதரவு இருந்தால்தான் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக முடியும். 1950-51 முதல் ஏழு முறை இதற்கு முன்னால் இந்தியா ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினர் குழுவில் பதவி வகித்திருக்கிறது.
2011-12-இல்
  • கடந்த 2011-12-இல் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த இந்தியாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. சுழற்சி முறையில் 2030-இல்தான் இந்தியாவுக்கு மீண்டும் பாதுகாப்புக்  குழு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாகவே 2021-22-இல் மீண்டும் பாதுகாப்புக் குழு உறுப்பினராகும் வாய்ப்புக்கு இந்தியா தனது முயற்சியைத் தொடங்கிவிட்டது. சர்வதேச அளவில் தீர்மானங்களை எடுக்கும் முதன்மையான குழுவாக ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு இருப்பதால் அதில் இந்தியா இடம்பெறுவது அவசியம் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
  • ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவால் சில சிறப்பான பணிகளில் ஈடுபட முடியும். நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை ஓரணியாகவும், ரஷியாவும் சீனாவும் இன்னொரு அணியாகவும் இருக்கும் நிலையில், அந்த இரண்டு அணிகளுடனும் இணைந்து செயல்படும் தகுதியும் உறவும் உள்ள ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகள் விரும்புவதற்கு அது ஒரு முக்கியமான காரணம்.
  • 2021-22-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இருக்க வேண்டிய நாடு ஆப்கானிஸ்தான். அதற்கான முயற்சியில் ஆப்கானிஸ்தான் ஈடுபட்டு வந்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவின் அடிப்படையில், நமது கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க ஆப்கானிஸ்தான் முன்வந்திருக்கிறது.
  • நம்முடனான இருநாட்டு உறவில் பல பிரச்னைகள் இருந்தாலும்கூட, இந்தியாவுக்கு ஆதரவு தர பாகிஸ்தான் முற்பட்டிருக்கிறது என்பது எதிர்பாராத திருப்பம். பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும்கூட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிற்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆதரிக்க முன்வந்திருக்கிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளின் முடிவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ராஜாங்க ரீதியிலான நட்புறவை இந்தியா மேம்படுத்திக்கொள்ள மிக முக்கியமான வாய்ப்பாக ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவுக்கான தேர்தல் அமையக்கூடும்.
ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு
  • ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் கடந்த ஏழு முறை இந்தியா பதவி வகித்தபோது, பல்வேறு பிரச்னைகளில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும், முடிவெடுக்காமலும் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறது. அதனால், துணிந்து எந்த முடிவையும் எடுக்காத உறுப்பினர் என்கிற அவப்பெயர் இந்தியாவுக்கு உண்டு.
  • பெரும் வல்லரசாகத் தன்னை உருவாக்கிக்கொள்ள முனையும் சீனா ஒருபுறமும், ஐ.நா. சபையின் மீதான தனது பொறுப்புகளையும், கடமைகளையும் குறைத்துக் கொள்ளும் மனநிலையில்அமெரிக்கா இன்னொருபுறமும் இருக்கும் காலகட்டத்தில் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்க இருக்கிறது.
  • இரண்டு அணிகளுடனும் நட்புறவை வைத்திருக்கும் இந்தியா, இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உலக வல்லரசுகளை இணைந்து செயல்பட வைக்கும் உறவுப் பாலமாக மாற வேண்டும். 2022-இல் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தால் அதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், நமக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம் என்பதுதான் அந்தச் சிறப்பு.
  • இந்தியாவைப் பொருத்தவரை, மக்கள்தொகை அடிப்படையிலும் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்கிற அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராகும் எல்லாத் தகுதியும் நமக்கு இருக்கிறது. இந்தியாவின் அடுத்தகட்ட முயற்சி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி: தினமணி (04-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்