TNPSC Thervupettagam

ஜாலியன்வாலாபாக் 100!

April 13 , 2019 2099 days 1333 0
  • இந்திய விடுதலைப் போராட்டத்தின் வழிநெடுக பல திருப்புமுனைகள் இருந்திருப்பினும், தலைகீழ் மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வாக 1919-ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையைத்தான் குறிப்பிட வேண்டும்.
ஜாலியன்வாலாபாக் படுகொலை
  • ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயர், ஜாலியன்வாலாபாக் பூங்காவில் டாக்டர் கிச்சிலு போன்ற காங்கிரஸ் தலைவர்களின் பேச்சைக் கேட்பதற்காக கூடியிருந்த மக்களை குருவிகளைச் சுட்டு வீழ்த்துவதுபோன்று, காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொன்றதால் நாடே கொதிப்படைந்தது.
  • ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஒன்றரை மாதம் கழித்து மே 31-ஆம் தேதியன்று, ஆங்கிலேய ஆட்சியினரின் அட்டூழியத்தை வலுவாகக் கண்டித்து வைஸ்ராய் செம்ஸ்போர்டுக்கு நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கடிதம் எழுதினார்.
  • அத்துடன், தனக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த ராஜத்துவ மரியாதையையும் அனைத்து அங்கீகாரங்களையும் அந்தப் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் துறப்பதாக அறிவித்தார்.
காந்தியடிகள்
  • காந்தியடிகள் சென்னையிலிருந்த போது அகில இந்திய அளவிலான ரெளலட் சட்ட எதிர்ப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை  அறிவித்திருந்தார்.
  • பஞ்சாப் மாநிலத்தில் சைபுதீன் கிச்சிலு என்ற புகழ் மிக்க பாரிஸ்டரும், டாக்டர் சத்யபாலும் இந்தப் போராட்டத்துக்கு தலைமையேற்றனர். மகாத்மா காந்தி ஏப்ரல் 10-ஆம் தேதியன்று அமிர்தசரஸ் செல்ல ஆயத்தமானார்.
  • இதையறிந்த ஆங்கிலேய அரசு பம்பாய் நகரை விட்டு மகாத்மா காந்தி செல்லக்கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தது. அதை மீறி அமிர்தசரஸ் புறப்பட்ட காந்தியடிகளை பல்வால்  ரயில் நிலையத்தில் கைதுசெய்து, மறுபடியும் பம்பாய் நகருக்கே காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இருவர் கைது
  • அதே நாளில்தான் கிச்சிலு, டாக்டர் சத்யபால் ஆகிய இருவரையும் அமிர்தசரஸில் கைது செய்து தர்மசாலாவுக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். ரெளலட் சட்டஎதிர்ப்பு முழக்கத்தோடு தலைவர்களை விடுதலை செய்யக் கோரும் உணர்ச்சிமிக்க கோரிக்கையும் சேர்ந்து கொண்டது. அமிர்தசரஸ் நகர் முழுவதும் தன்னெழுச்சியுடன் கடையடைப்பு நடைபெற்றது. மக்கள் அணி திரண்டு காவல் துறைத் துணை ஆணையர் அலுவலகத்துக்கு தலைவர்களை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கையை எடுத்துச் சென்றனர்.
துப்பாக்கி சூடு
  • இடையிலேயே காவல் துறையால் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன்,  குதிரையிலிருந்து இறங்கிய இரண்டு ராணுவ வீரர்களால் எதிர்பாராத விதத்தில் சுடப்பட்டனர். அந்த இடத்திலேயே போராட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்தனர். இத்தனைக்குப் பிறகும் கூட்டம் அசரவில்லை. எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல்  மக்கள் மீது ராணுவ வீரர்கள் மறுபடியும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் 20 பேர் மடிந்தனர்.
  • துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்ட ஆவேசமும் செத்துக்கிடப்போரின் பரிதாபநிலை ஏற்படுத்திய கோபமும் மக்களை ஆங்கிலேயர்களுக்கெதிராகக் களமிறங்கும் சூழலுக்கு உந்தித் தள்ளியது. மக்கள் எதிர் நடவடிக்கையில் இறங்கினர். ஆத்திரமடைந்த கும்பல் மூன்று ஆங்கிலேயர்களை அடித்துக் கொன்றது. வங்கி தீக்கிரையாக்கப்பட்டது.
  • ஆங்கிலேய வங்கி மேலாளர் கொல்லப்பட்டார். மக்கள் எழுச்சி அடுத்தடுத்த கட்டமாகப் போராட்ட வடிவம் பெற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்த கவர்னர் ஓட்வயர், ஏப்ரல் 11-ஆம் தேதி அமிர்தசரஸ் நகரை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
  • அதே நாளில் ராணுவத் தளபதி ஜெனரல் டயர் அமிர்தசரஸ் நகருக்கு வந்து நகரை உடனடியாக தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஜாலியன்வாலாபாக் மைதானத்தில்அரசியல் கூட்டங்கள் உள்பட ஏதாவது ஒரு கூட்டம் நடைபெறுவது வழக்கம்தான்.
ஏப்ரல் 13 ஆம் தேதி
  • படுகொலைச் சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பொதுக்கூட்டத்தைப் பொருத்த அளவில் அது ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் நடக்கக் கூடாது என்பதற்கான முறையான முயற்சிகள் எதுவும் அரசால் எடுக்கப்படவில்லை. அரசு நினைத்திருந்தால் மைதானத்தை நோக்கி மக்கள் வருவதைச் சுலபமாகத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
  • மைதானத்தின் நுழைவாயிலில் ஓர் அறிவிப்பு வைத்திருக்கலாம். ஊரெல்லாம் ராணுவ வீரர்களை நிறுத்தியிருப்பதைப்போல மைதானத்தின் வாயில் பகுதியில் இரண்டு, மூன்று வீரர்களை நிறுத்தி உள்ளே நுழையக் கூடாது, அனுமதி இல்லை என்று வந்தவர்களிடம் சொல்ல வைத்திருக்கலாம்.
  • நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும் அவ்வாறு கூடினாலோ, கூட்டம் போட்டாலோ, ஊர்வலம் நடத்தினாலோ ஆயுதங்களைப் பயன்படுத்தி கலைக்கப்படும் என்றும் கடைசி நேரத்தில் ஜெனரல் டயர்  ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.
ஹண்டர் குழு
  • அதை ஒரு தாசில்தாரைக் கொண்டு தண்டோரா மூலம் அறிவிக்க கட்டளை பிறப்பித்தார். நகரின் 19 இடங்களில்அந்த தாசில்தார் தண்டோரா அறிவிப்புச் செய்ததாகவும் மக்கள் கூடியுள்ள நகரின் முக்கியப் பகுதிகளிலோ ஜாலியன்வாலாபாக் அருகிலோ அந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அதற்கு தாங்க முடியாத வெயில்தான் காரணம் என்றும் பின்னர் நடைபெற்ற ஹண்டர் கமிஷன் விசாரணையில் தெரிவித்தார்.
  • உளவுத் துறையின் மூலமும் காவல் துறை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளின் மூலமும் ஜாலியன்வாலாபாக் கூட்டம் பற்றியும் அதில் பங்கேற்கும் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் குறித்தும் துல்லியமாகத் தெரிந்துகொண்ட பின்னர்தான், தனது நடவடிக்கைக்கு ஆயத்தமானார் டயர்.
  • டயர் தனது படையில் ஆங்கிலேய சிப்பாய்களையோ பஞ்சாப் மாநில சீக்கியச் சிப்பாய்களையோ இடம்பெற வைக்கவில்லை. சந்தேகத்துக்கிடமின்றி விசு வாசமாக உள்ள கூர்க்கா படை வீரர்களையும் பலூசியப் படை வீரர்களையும் தேர்வு செய்து அழைத்துச் சென்றார். இவர்கள் யாரும் பஞ்சாப் மண்ணுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் என்பதுடன், பஞ்சாபி மொழி கொஞ்சமும் தெரியாதவர்கள்.
  • கூட்டம் நடக்கிற இடத்தில் ஒரு விமானத்தைப் பறக்க விட்டு கூட்ட அளவு குறித்து சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்பே கணக்கெடுத்துக் கொண்டார் டயர். உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே மைதானத்துக்கு வெளியே நகர் முழுவதும் தற்காலிகத் தடுப்புகளை பல இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்திருந்ததுடன் ஒவ்வொரு தடுப்புக்கு அருகிலும் சில சிப்பாய்களை தயார் நிலையில் நிற்க வைத்திருந்தார். இது, அனைத்துத் தயாரிப்புகளையும்  மீறி தப்பி வெளியே ஓடுவோரை ஆங்காங்கே சுட்டு வீழ்த்துவதற்கான ஏற்பாடாகும்.
  • சிப்பாய்களின் படைக்குத் தலைமையேற்று ஆயுதம் தாங்கிய  இரண்டு ராணுவ கார்களுடன் ஜாலியன்வாலாபாக்கை நோக்கி அணிவகுத்தார் டயர். குறுகிய பாதையில் கார்கள் உள்ளே செல்ல முடியாது என்பதால் கார்களை வெளியே நிறுத்திவிட்டு மைதானத்துக்குள் முதலில்நுழைந்தார் டயர்.
  • அவருடன் அணிவகுத்து வந்திருந்த சிப்பாய்கள் 100 பேரை பக்கத்துக்குப் பாதியான எண்ணிக்கையில் சற்று உயரமாக உள்ள கட்டுமானத்தில் மண்டியிட்ட நிலையில் நிற்கச் சொல்லி திரளாகத் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி ஃபயர் என்று உரத்த குரலில் உத்தரவிட்டார் டயர்.
எச்சரிக்கை
  • சுடுவதற்கு முன்பு கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு அறிவிப்போ, வானத்தில் சுடுவது போன்ற எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ சிறிதும் மேற்கொள்ளப்படவில்லை.
  • ஏறத்தாழ 20,000 பேர் அடர்த்தியாகக் கூடியிருந்த அந்த மனிதப் பெருங்கூட்டத்தின் மீது சற்றும் எதிர்பாராத நிலையில் குண்டுகள் சரமாரியாகப் பாய்ந்தன. உள்ளேயிருந்து வெளியே ஓடி வருவதற்கு ஒரே வழிதான் இருந்தது. அதுவும் மிகக் குறுகலானது. அங்கிருந்தவாறு ராணுவத்தினர் சுடுவதால் அந்த வழியையும் பயன்படுத்த முடியாது.
  • இதை விட்டால் மிகச் சிறிய சந்துகள் நான்கு உள்ளே இருந்தாலும், அவை முறையான பயன்பாட்டில் இல்லாதவை. எதிர்பாராத திடீர்த் தாக்குதலால் முற்றிலும் திக்குமுக்காடிப்போன  மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அந்தச் சந்துகளுக்கருகில் குவிந்தனர். மக்கள் குவியலாக இருந்த இடத்தில்தான் குறிபார்த்துச் சுடச்சொல்லி ஆக்ரோஷமாகக் கட்டளையிட்டார் டயர்.
  • மாலை 5 மணிக்குத் தொடங்கி, கொண்டுவந்த குண்டுகள் மாலை 15 க்கு தீர்ந்தவுடன் துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டது. சுமார் 1,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். 2,000 பேருக்கும் மேல் படுகாயமடைந்தனர்.
  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுச்சியும்  விழிப்புணர்வும் கொள்ளத் தொடங்கிவிட்ட இந்தியர்களை மரண அடிகொடுத்து மண்டியிடச் செய்வதற்கான திட்டமிட்ட நடவடிக்கையே ஜாலியன்வாலாபாக் படுகொலைச் சம்பவமாகும். பஞ்சாப் மாகாணத்துக்காக மட்டுமின்றி இந்தியாவின் ஒட்டுமொத்த எழுச்சியை அடக்கி ஒடுக்கி, தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் இந்த மண்ணில் நிலைக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறித்தனமான ஆங்கிலேய ஏகாதிபத்திய சிந்தனையின் விளைவே ஜாலியன்வாலாபாக் சம்பவமாகும்.
  • குறிப்பாக, அடக்கி விடலாம் என்று கருதிய ஆங்கிலேய ஆட்சியினர் அடங்கிப் போவதற்கும், ஆட்சியை இழப்பதற்கும் இந்த நிகழ்வு அடித்தளமிட்டது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சம்பவத்தைஇந்தியாவின் இன்னொரு இதிகாசம் என்று குறிப்பிடலாம்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்