TNPSC Thervupettagam

ஜாலியன்வாலா பாக் படுகொலை

April 13 , 2019 2099 days 4883 0
  • இந்தச் சம்பவமானது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் நடைபெற்றது.
  • இது அமிர்தசரஸ் படுகொலை எனப் பிரபலமாக அறியப்படுகிறது.

  • இந்த நாளானது சீக்கியர்களின் புத்தாண்டு எனப்படும் சீக்கியர்களின்  முக்கியத் திருவிழாவான பைசாகி தினமாகும்.
  • இது இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான அரசியல் குற்றங்களில் ஒன்றாகும்.
  • 7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தப் பூங்காவானது அனைத்துப் பக்கங்களிலும் சுவரால் சூழப்பட்டது. பிரபலமான இந்த பொதுப் பூங்காவின் பெயரினையடுத்து அதற்கு ஜாலியன்வாலா பாக் படுகொலை எனப் பெயரிடப்பட்டது.

  • சத்யபால் மற்றும் சாய்புதீன் கிச்லு ஆகிய இரு தேசியத் தலைவர்களை கைது செய்யப்பட்டதையும் நாடு கடத்தப்பட்டதையும் கண்டித்து ஒரு அமைதியான போராட்டத்திற்காக மக்கள் அன்றைய தினம் இங்கு ஒன்று திரண்டிருந்தனர்.

  • கர்னல் ரெஜினால்டு டயரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர் இந்த இந்தியர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  • மாலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த துப்பாக்கிச் சூடானது சுமார் பத்து நிமிடங்களுக்கு  நீடித்தது.

  • ஆங்கிலேயர்களின் அதிகாரப் பூர்வ விசாரணையின் போது 379 மரணங்கள் எனத் தெரிவித்திருந்த போதிலும் இறப்பின் எண்ணிக்கையானது சுமார் 1000 என்ற அளவில் காங்கிரஸால் கூறப்பட்டது.
  • அங்கு அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்தும் 120 இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன.

  • இது போன்ற ‘கேடு விளைவிக்கும்’ அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பது பாவம் என காந்தி அறிவித்தார்.

ரௌலட் சட்டம் – தூண்டிய பின்ணனி

  • ரௌலட் குழு என்பது 1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசால் ஆங்கிலேய நீதிபதியான சிட்னி ரௌலட்டைத் தலைமையாகக் கொண்டு தேசத் துரோகம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆகும்.
  • ரௌலட் குழுவின் உறுப்பினர்கள்
    • சிட்னி ரௌலட் – தலைவர்
    • J D V ஹோட்ஜ் – செயலர் (வங்காள பொதுப் பணி நிர்வாகத்தின் உறுப்பினர்)
    • பாசில் ஸ்காட் – உறுப்பினர் (பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி)
    • V. குமாரசுவாமி சாஸ்திரி – உறுப்பினர் (மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி)
    • வெர்னி லொவெட் – உறுப்பினர் (ஒருங்கிணைந்த மாகாணத்திற்கான வருவாய் வாரியத்தின் உறுப்பினர்)
    • C. மிட்டர் – உறுப்பினர் (வங்காள சட்ட மேலவை உறுப்பினர்)
  • இந்தியாவில் குறிப்பாக வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் அரசியல் பயங்கரவாதத்தினைப் பற்றி ஆய்வு செய்வதே ரௌலட் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
  • 1919 ஆண்டின் சட்டவிரோத மற்றும் புரட்சிக் குற்றங்கள் சட்டமானது பிரபலமாக ரௌலட் சட்டம் அல்லது கருப்புச் சட்டம் என அறியப்படுகிறது.

  • இது 1919 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் டெல்லியில் சட்ட மேலவையால் நிறைவேற்றப்பட்டது.
  • இது முதலாம் உலகப் போரின் போது இயற்றப்பட்ட இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 1915-ன் கீழ் இயற்றப் பட்ட நெருக்கடி நிலை நடவடிக்கைகளான காலவரையற்ற தடுப்புக் காவல், விசாரணையின்றி சிறையிலடைத்தல் மற்றும் நீதித் துறை ஆய்வு ஆகியவற்றை காலவரையறையின்றி நீட்டித்தது.
  • இது பத்திரிக்கைகளை முடக்குதலின் மூலம் அரசுக்கெதிரான சதிகளை தடுத்தல், அரசியல்வாதிகளை விசாரணையின்றி காவலில் வைத்தல் மற்றும் அரசுக்கு விரோதமாகச் செயல்படுவோரை தேசத் துரோகம் மற்றும் தேச விரோதக் குற்றம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிடியாணையின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்தல், ஆகியவற்றிற்கான அசாதாரணமான அதிகாரங்களை வைஸ்ராயின் அரசிற்கு அளித்தது.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாக முகமது அலி ஜின்னா பம்பாய் தொகுதியிலிருந்து தனது உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
  • மகாத்மா காந்தியும் இந்தச் சட்டத்தினைக் கடுமையாக விமர்சித்தார்.
  • தனிப்பட்ட அரசியல் குற்றங்களுக்காக அனைவரும் தண்டிக்கப்படக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்.
  • இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 06 ஆம் நாள் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • இந்தப் போராட்டமானது பரவலான மற்றும் பொதுவான அதிருப்தியை வெளிப்படுத்துவதன் தொடக்கத்தினைக் குறிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • பஞ்சாபில் இந்த எதிர்ப்பு இயக்கமானது மிகவும் வலுவானதாக இருந்தது.
  • ஏப்ரல் 10 ஆம் நாள் காங்கிரஸின் இரண்டு முக்கியத் தலைவர்களான சத்யபால் மற்றும் சைபுதீன் கிச்லு ஆகியோர் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர்.
  • தற்போதைய இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரமான தர்மாசாலாவுக்கு அவர்கள் அப்போது இரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

 பின் விளைவுகள்

  • 1919 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று இந்தப் படுகொலையைப் பற்றிய செய்தியை ரவீந்திரநாத் தாகூர் அறிந்தார்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தான் 1915-ல் பெற்ற ஆங்கிலேய அரசின் நைட்வுட் பட்டத்தினை 1919 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள் ரவீந்திரநாத் தாகூர் திருப்பியளித்தார்.

  • 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று இந்திய அரசானது ஹண்டர் குழு என பரவலாக அறியப்பட்ட ஒரு ஒழுங்குமுறை விசாரணைக் குழுவின் உருவாக்கத்தினை அறிவித்தது.
  • “சமீபத்தில் மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சனைகள் பற்றி விசாரணை நடத்துவது” என்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் கூறப்பட்டது.
  • டயரின் நடவடிக்கைகள் பல்வேறு உயரதிகாரிகளாலும் மன்னித்தருளப் பட்டதால் எந்தவொரு தண்டனையையோ அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கையையோ ஹண்டர் குழுவானது டயர் மீது சுமத்தவில்லை.
  • தொடக்கத்தில் பழமைவாதப் படைகளால் இவர் உயர்வாகப் புகழப்பட்டாலும் 1920 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கீழவையால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஓய்வு பெற வேண்டி கட்டாயப் படுத்தப்பட்டார்.
  • ஆனால் பிரபுக்களின் அவையானது (மேலவை) டயரைப் புகழ்ந்து ‘பஞ்சாபின் காப்பாளர்’ என வார்த்தைகள் பொறிக்கப்பட்ட வாளை அவருக்கு வழங்கியது.
  • உபயோகமற்ற இந்த விசாரணையும் பிரபுக்கள் அவையின் ஆரம்ப கால பாராட்டுக்களும் பரவலாக மக்களிடையே கோபத்தைத் தூண்டியது. இதுவே பின்னர் 1920-22 ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு வழி வகுத்தது.
  • அடக்குமுறை சட்டங்களுக்கான குழுவின் அறிக்கையை ஏற்று, 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசானது ரௌலட் சட்டம், பத்திரிக்கைச் சட்டம் மற்றும் இதர 22 சட்டங்களை திரும்பப் பெற்றது.

 உத்தம் சிங்கின் பழி வாங்கல்

  • 1912 முதல் 1919 வரை இந்தியாவின் பஞ்சாப்பின் துணை ஆளுநராக இருந்தவர் மைக்கேல் பிரான்சிஸ் ஓ’ டயர் ஆவார்.
  • இவர் அமிர்தசரஸ் படுகொலை தொடர்பான கர்னல் ரெஜினால்டு டயரின் நடவடிக்கையை ஒப்புக் கொண்டதோடு அது ஒரு சரியான நடவடிக்கை எனவும் கூறினார்.
  • துணை ஆளுநரான ஓ’ டயரால் காவல் அதிகாரியான டயருக்கு அனுப்பப் பட்ட தந்தியில் “உங்களது நடவடிக்கை சரியானது, துணை ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கிறார்” என குறிப்பிடப்பட்டது.
  • 1940 ஆண்டில் அவரின் 75-வது வயதில் லண்டனின் காக்ஸ்டான் மன்றத்தில் உத்தம் சிங் என்பவாரால் ஓ’ டயர் படுகொலை செய்யப்பட்டார்.

  • அங்கு கூடுகைக்கு தலைமையேற்றிருந்த இந்தியாவிற்கான அரசுச் செயலாளரான செட்லாண்ட் பிரபுவும் காயமடைந்தார்.
  • பின்னர் உத்தம்சி ங் விசாரணை செய்யப்பட்டு கொலையாளி என தீர்ப்பளிக்கப்பட்டு இலண்டனின் பெண்டன் வில்லி சிறையில் 1940 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிடப்பட்டார்.
  • இவர் காவலில் இருந்த போது பஞ்சாப்பின் மூன்று முக்கியமான மதங்களையும் அவரின் காலனித்துவ எதிர்ப்பு உணர்வையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தனது பெயரை ராம் முகமது சிங் ஆசாத் என்று பயன்படுத்தினார்.
  • இவர் சில சமயங்களில் ஷாஹித்-இ-ஆசம் சர்தார் உத்தம் சிங் எனவும் குறிப்பிடப்படுகிறார்.

  • 1995 ஆம் ஆண்டு இவருக்கு மரியாதை செலுத்துவதற்காக உத்தரகாண்டின் ஒரு மாவட்டத்திற்கு உத்தம் சிங் நகர் எனப் பெயரிடப்பட்டது.
  • இவரின் மறைவு தினமானது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பொது விடுமுறை தினமாகும்.
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமிர்தசரஸின் ஜாலியன்வாலா பாக்கில் இவரது சிலை நிறுவப்பட்டது.

நினைவுச் சின்னம்

  • இந்தியாவின் வரலாற்றில் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை மனதிற் கொண்டு 1920 ஆம் ஆண்டு ஜாலியன்வாலா பாக்கில் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டது.
  • 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தால் இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. இதனை அமெரிக்க கட்டிடக்கலைஞரான பெஞ்சமின் பொல்க் அந்த இடத்தில் கட்டினார்.

  • இது பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள புகழ்பெற்ற பொற்கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.

 

2019

  • 2019 ஏப்ரல் 13 அன்று நிகழ்ந்த படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு தினத்தினையொட்டி பிரிட்டனின் பிரதமரான தெரசா மே 2019 ஏப்ரல் 10 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
  • "நடந்த சம்பவத்திற்காகவும் அதனால் ஏற்பட்ட துன்பங்களுக்கும் நாங்கள் மனமார வருந்துகிறோம்"  எனவும் மே தெரிவித்தார்.
  • மேலும் அவர் இந்த சம்பவமானது இந்தியாவுடனான பிரிட்டனின் வரலாற்றில் ‘வருத்தமளிக்கக் கூடிய எடுத்துக்காட்டு’ என்ற ராணி எலிசபெத்தின் கூற்றினையும் மேற்கோளிட்டுப் பேசினார்.
  • 1961 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் அரசுப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்த ராணி இரண்டாம் எலிசபெத் இதனைக் குறித்து எந்தவொரு கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று இந்தியாவில் நடைபெற்ற ஒரு அரசு விருந்தில் இந்நிகழ்வைப் பற்றி அவர் பேசினார்.
  • 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று, ஜாலியன்வாலா பாக்கிற்கு வருகை தந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் 30 வினாடிகள் தனது மௌன அஞ்சலியைச் செலுத்தினார்.

  • 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதவியிலிருக்கும் முதல் பிரதமராக டேவிட் கேமரூன் இந்த தளத்தினைப் பார்வையிட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த படுகொலையானது பிரிட்டனின் வரலாற்றில் ஒரு வெட்கக் கேடான நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.
  • எனினும், கேமரூன் ஒரு அதிகாரப் பூர்வ மன்னிப்பைக் கோரவில்லை.

திருப்பு முனை

  • 1919 ஆம் ஆண்டானது இந்தியாவின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமான மகாத்மா காந்தியின் சகாப்தத்தைத் திறந்து வைத்ததன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஒரு திருப்பு முனையாக மாறியது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்