TNPSC Thervupettagam

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

August 18 , 2018 2319 days 24701 0
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

- - - - - - - - -

  • இந்தியப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமானது 2005ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இதன் நோக்கம் அனைத்து பொது அலுவலகப் பணிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிப்பது ஆகும். மேலும் இது மக்களுக்காக தகவல் அறியும் உரிமையின் நடைமுறைத் திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
  • இச்சட்டம் முன்பு இருந்த தகவல் சுதந்திரச் சட்டம், 2002 ற்கு மாற்றாக இயற்றப்பட்டது.
  • இந்தச் சட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் ‘பொது அலுவலகத்திடமிருந்து (அரசின் கீழ் இயங்கும் அமைப்பு அல்லது அரசின் தன்னிச்சையான நிறுவனம்) தகவல் கோரினால், அந்த அலுவலகம்.
  1. துரிதமாக அல்லது 30 நாட்களுக்குள்
  2. எந்த ஒரு தனிநபரின் உயிர் அல்லது தனியுரிமை சம்பந்தமான தகவல் கோரினால் 48 மணி நேரத்திற்குள்]
  3. துணைப் பொதுத் தகவல் வழங்கும் அதிகாரியிடம் (Asst. PIO) தகவல் கோரப்பட்ட 35 நாட்களுக்குள்.
  4. மூன்றாவது நபர் தலையீட்டின் போது தகவல் கோரினால் 40 நாட்களுக்குள்
  5. பட்டியலிடப்பட்ட பாதுகாப்பு/புலனாய்வு நிறுவனங்களிடமிருந்து மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தகவல்களைக் கோரினால் 45 நாட்களுக்குள்
பதில் அளிக்க வேண்டும்.
  • பரவலான தகவல் பரிமாற்றத்திற்காக அனைத்து பொது அலுவலகங்களில் உள்ள தகவல்கள் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.
  • முதலாவது தகவல் பெறும் உரிமை விண்ணப்பத்தை ஷஹித் ராசா புருனே என்பவர் புனேயில் உள்ள காவல் நிலையத்தில் தாக்கல் செய்தார்.
  • டெல்லியில் முதலாவது தகவல் பெறும் உரிமை விண்ணப்பம் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்து 370 தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்தியாவில் அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டம் 1923 மற்றும் பிற சிறப்புச் சட்டங்கள் மூலம் தகவல்களை வெளிப்படுத்துதல் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இப்புதிய தகவல் அறியும் உரிமைச் சட்டமானது இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது.
அரசியலமைப்பு ஒப்புதல்
  • இந்தியாவின் உச்சநீதிமன்றமானது அரசியலமைப்பில் உள்ள ஷரத்து 19(1)(a)-ல் உள்ள பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றுடன் தகவல் அறியும் உரிமையும் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
தகவல் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் உள்ள உரிமைகள்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆனது ஒவ்வொரு குடிமகனுக்கும்
  1. அரசாங்கத்திடம் எந்தவொரு கேள்விகளையும் தகவல்களையும் கேட்டுப் பெற
  2. அரசாங்கத்தினுடைய எந்தவொரு கோப்புகளின் பிரதிகளையும் கேட்டுப் பெற
  3. எந்தவொரு அரசாங்கக் கோப்புகளையும் ஆய்வு செய்ய
  4. எந்தவொரு அரசாங்கப் பணி தொடர்பான பொருட்களின் மாதிரியையும் கேட்டுப் பெற அதிகாரம் அளிக்கிறது.
நோக்கம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என்று தனியே ஜம்மு காஷ்மீர் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  2009 நடைமுறையில் உள்ளது.
  • இந்த சட்டம் பின்வரும் அமைப்புகளை கட்டுப்படுத்தும்:
    • ஆட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை உள்பட அனைத்து அரசியலமைப்பு ஆணையங்களும்
    • நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பு
    • அரசாங்கத்திற்கு சொந்தமான (அ) அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிற (அ) அரசாங்க நிதியுதவி பெறுகிற அமைப்புகள் அல்லது ஆணையங்கள்.
    • கணிசமான அளவில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசாங்கத்தால் நிதி பெறும் அரசு சாரா நிறுவனங்கள்.
  • தனியார் அமைப்புகள் இச்சட்டத்தின் வரம்பெல்லைக்குள் நேரடியாக இடம் பெறாது.
  • சர்ப்ஜித் ராய் Vs டெல்லி மின்சார ஒழுங்கு முறை ஆணைய வழக்கு முடிவின் படி மத்திய தகவல் ஆணையமானது தனியார் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பெல்லைக்குள் உள்ளது என்பதை உறுதிபடுத்தியது.
  • 2014-ன் படி அரசாங்கத்திடமிருந்து 95 சதவீதத்திற்கு மேல் கட்டமைப்பு நிதியைப் பெறும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பெல்லைக்குள் உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் - விதி விலக்குகள்
  • பொதுத் தகவல் வழங்கும் அதிகாரி தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 11 விஷயங்கள் தொடர்பாக தகவல் அளிப்பதை மறுக்க முடியும்.
    • வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து ரகசியமான தகவலைப் பெற்றதையும்
    • நாட்டின் பாதுகாப்பு, போர்த்திறன், அறிவியல் மற்றும் பொருளாதார தகவல்கள் ஆகியவை தொடர்பாக
    • சட்டமன்றத்தின் சிறப்புரிமை மீறல் ஆகியவை தொடர்பாக
தகவல் அளிப்பதை மறுக்க முடியும்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பெல்லைக்குள் வராத 18 நிறுவனங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • எனினும் ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டால் தகவல் ஆணையம் தகவல் அளிக்க வேண்டும்.
நிர்வகிக்கும் அமைப்புகள்
  • தலைமைத் தகவல் ஆணையர் (CIC – Central Information Commissioner)
  • மத்தியத் தகவல் ஆணையர் குடியரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவார்.
  • மத்திய பொதுத் தகவல் அதிகாரிகள் – அனைத்து மத்தியத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பணியாற்றுவார்கள் (CPIO – Central Public Information Officers)
  • மாநிலத் தகவல் ஆணையங்கள் - மாநிலப் பொதுத் தகவல் வழங்கும் அதிகாரிகள் அனைத்து மாநிலத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பணியாற்றுவார்கள். (SPIO - State Public Information Officers)
  • பொதுத் தகவல் வழங்கும் அதிகாரியின் அலுவலகம் மாநில ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.
உள்ளடக்கம் மத்தியத் தகவல் ஆணையம்
  • மத்தியத் தகவல் ஆணையமானது
    • தலைமை தகவல் ஆணையர்
    • மத்திய தகவல் ஆணையர்கள் – 10 நபர்களுக்கு மிகாமல் – தேவைக்கேற்றவாறு.
ஆகியோரைக் கொண்டிருக்கும்.
  • குடியரசுத் தலைவர் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களை தேர்வுத் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிப்பார். இத்தேர்வுக் குழுவானது,
  1. பிரதம அமைச்சர் (தேர்வுக் குழுவின் தலைவர்),
  2. மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்,
  3. பிரதம அமைச்சரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சரவை மந்திரி ஆகியோர்களைக் கொண்டிருக்கும்.
  • தலைமைத் தகவல் ஆணையர் பதவியேற்ற நாளிலிருந்து 5 வருடங்களுக்கு பதவியில் இருப்பார். இவர் இரண்டாவது முறையாக இப்பதவிக்கு நியமிக்கப்படமாட்டார்.
  • ஊதியங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கும் படித்தொகைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
    • தலைமைத் தகவல் ஆணையர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நிகரானவர்.
    • பிற தகவல் ஆணையர்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையர்களுக்கு நிகரானவர்கள் ஆவர்.
மாநிலத் தகவல் ஆணையம்
  • மாநில தகவல் ஆணையமானது
  1. மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்
  2. தேவைக்கேற்ப பிற தகவல் ஆணையர்கள் (10 ஆணையர்களுக்கு மிகாமல்) ஆகியோரைக் கொண்டிருக்கும்.
  • மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்களை தேர்வுக் குழுவின் பரிந்துரையின் படி ஆளுநர் நியமிப்பார். இத்தேர்வுக் குழுவானது,
  1. முதலமைச்சர் (தேர்வுக் குழுவின் தலைவர்)
  2. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
  3. முதலமைச்சரால் நியமிக்கப்படும் அமைச்சரவை மந்திரி ஆகியோர்களைக் கொண்டிருக்கும்.
  • ஊதியங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கும் படித்தொகை மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
    • மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மாநிலத் தேர்தல் ஆணையருக்கு நிகரானவர்.
    • மாநில பிற தகவல் ஆணையர்கள் மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு நிகரானவர் ஆவர்.
கட்டணம்
  • மத்திய அரசாங்கத் துறைகளுக்கு கட்டணமாக ரூ.10 பெறப்படும்.
  • எனினும் வெவ்வேறு மாநில அரசுகள் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கின்றன.
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் தகவல் கோரி விண்ணப்பித்தால் கட்டணம் செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள்.
  • மத்திய அரசாங்கத் துறைகள் மீதான தகவல்களுக்கு ஒரு பக்கத்திற்கு ரூ.2 கட்டணமாக வசூலிக்கப்படும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
கோப்புகளை ஆய்வு செய்வதற்கான கட்டணம்
  • கோப்புகளை ஆய்வு செய்ய முதல் ஒரு மணி நேரத்திற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். (மத்திய அரசாங்க விதிகளின் படி)
  • இந்தக் கட்டணங்கள் அனைத்தும் பணமாகவோ வரைவோலையாகவோ வங்கிக் காசோலையாகவோ அல்லது பொது நிறுவனத்தின் பெயரிலான அஞ்சல் ஆணை மூலமாகவோ பெறப்படும்.
 

- - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்