TNPSC Thervupettagam

தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்பு - IV

April 22 , 2019 2090 days 2793 0
  1. கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயம்
  • கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூரில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும். மேலும் இது சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
  • இங்குள்ள கருவேல மரங்களின் வளர்ச்சியடைந்த காடுகள் பலவகையான புலம்பெயர் நாரையினங்களுக்கு அடைகாக்கும் தளமாக உள்ளன.

  • இந்த சரணாலயத்தின் காடுகளானது வெப்பமண்டல வறண்ட இலையுதிர் வகையைச் சேர்ந்ததாகும்.
  • இந்தச் சரணாலயமானது குளிர்கால புலம்பெயர் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை ஐபிஸ், கருப்பு ஐபிஸ், சிறிய வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு ஆகியவற்றிற்கு சிறந்த வாழ்விடத்தை வழங்குகிறது.

  • காலனித்துவ பறவைகளான நாரை இனங்களானது இங்கு அதிக அளவில் காணப்படுகின்றது. 170-க்கும் அதிகமான பறவையினங்கள் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
  • முட்புதர் காடுகளும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் அமைப்பாலும் இந்த காடுகளானது பெரிய அல்லது நடுத்தர உருவமுடைய பாலூட்டிகளின் வாழ்விற்கு உகந்ததாக இல்லை.
  1. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
  • சித்திரங்குடி கண்மாய் என்றறியப்படும் இந்த சித்திரங்குடி பறவைகள் சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சித்திரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
  • இது கஞ்சிரான்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
  • இந்த சரணாலயமானது பெரும்பாலும் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகளால் ஆனது.
  • அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்ககு இடைப்பட்ட காலங்களில் புள்ளி அலகு கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, சிறிய கொக்கு, பெரிய கொக்கு போன்ற நீர்ப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு புலம்பெயர்கின்றன.

  1. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
  • பல்வேறு வகையான பறவைகளின் வாழ்விடமான உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமானது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
  • இந்தச் சரணாலயத்தின் பல்வேறு வாழ்விடங்களில் அல்லியினங்கள், நாணல் புதர்கள் மற்றும் நீர்வாழ் புல் இனங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
  • பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏராளமான நீலத்தாடைக் கோழி, நத்தைக் குத்தி நாரை ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

  • மேலும் புலம்பெயர் பறவைகளான நாமக் கோழி, சாம்பல் நாரை, இராக் கொக்கு, செந்நாரை, சிறிய ரக நீர்க் காகம், பாம்புத் தாரா, கரைக் கொக்கு, வெண்கழுத்து நாரை போன்றவை இங்கு வருகை தருகின்றன.
  • நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இங்கு சுமார் 10,000 பறவைகள் கூடுகின்றன.

 

  1. டுவூர் பறவைகள் சரணாலயம்
  • வடுவூர் பறவைகள் சரணாலயமானது திருவாரூர் மாவட்டத்தின் வடுவூரில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.
  • ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து பல வெளிநாட்டுப் பறவைகளை ஈர்க்கும் இந்த நீர்ப்பாசன பகுதியானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் தண்ணீரைப் பெறுகின்றது.
  • பறவைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான மீன்களை இங்குள்ள பல ஏரிகள் வழங்குகின்றன.

  • ஒவ்வொரு ஆண்டும் 38 வகையான வெவ்வேறு பறவையினங்களைச் சேர்ந்த 20,000 பறவைகள் இந்தச் சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.
  1. கூந்தன்குளம் - காடங்குளம் பறவைகள் சரணாலயம்
  • 1994 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கூந்தன்குளம் - காடங்குளம் பறவைகள் சரணாலயமானது ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
  • இது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குனேரி வட்டத்திலுள்ள கூந்தன்குளம் எனும் குக்கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
  • இந்தச் சரணாலயமானது கூந்தன்குளம் மற்றும் காடங்குளம் ஆகியவற்றின் நீர்ப்பாசனப் பகுதியை உள்ளடக்கியதாகும்.
  • இது காடங்குளம் கிராம மக்கள் சமூகத்தால் நிர்வகிக்கப்பட்டு தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு வருடமும் 43 வகையான குடியிருப்பு மற்றும் புலம்பெயர் நீர்வாழ்ப் பறவையினங்கள் இங்கு வருகை தருகின்றன.

  • டிசம்பர் மாதத்தில் 100,000-க்கும் அதிகமான புலம்பெயர் பறவைகள் வருகை தந்து ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் அவற்றின் வடக்குப்புறத் தாயகத்திற்குத் திரும்பி விடுகின்றன.
  1. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
  • கரைவெட்டி பறவைகள் சரணாலயமானது அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.
  • ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கின்ற இந்த நன்னீர் ஏரியானது புல்லம்பாடி, கட்டலால் கால்வாய் ஆகியவற்றால் நிரப்பப்படுகின்றது.
  • இந்தச் சரணாலயமானது தமிழ்நாட்டில் புலம்பெயர் நீர்வாழ்ப் பறவைகளுக்கு உணவளிக்கும் ஒரு மிக முக்கியமான நன்னீர் தளமாகும்.

  • இது தமிழ்நாட்டில் உள்ள மற்ற பகுதிகளை விட அதிகபட்சமான நீர்வாழ் பறவைகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 188 இனங்களில் 82 இனங்கள் நீர்வாழ்ப் பறவையினங்களாகும்.
  • இந்தச் சரணாலயமானது பட்டைத் தலை வாத்து, ஊசி வால் வாத்து, வெள்ளை நாரை, நீலச்சிறகி, நீலச்சிறகு கிளுவை, வராலடிப்பான் மற்றும் உள்ளான் போன்ற புலம்பெயர் பறவைகளுக்குத் தாயகமாக உள்ளது.
  1. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
  • வெள்ளோடு பறவைகள் சரணாலயமானது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • அயல்நாட்டுப் பறவைகளின் தாயகமான இந்த மிகப்பெரிய ஏரியானது மிதமான அடர்த்தி கொண்ட புதர்களால் சூழப்பட்டுள்ளது.
  • இந்தச் சரணாலயமானது மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இது மிகப்பெரிய ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் அதனைச் சுற்றி காடுகள் ஏதுமில்லை.
  • இந்தச் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பறவையினங்கள் வருகை தருகின்றன. மேலும் அவற்றில் நீர்க் காகம், கிளுவை, ஊசிவால் வாத்து, கூழைக் கடா, பாம்புத் தாரா போன்றவை எளிதில் அடையாளம் காண முடிபவையாகும்.

.  

  1. மேலசெல்வனூர் - கீழசெல்வனூர் பறவைகள் சரணாலயம்
  • மேலசெல்வனூர் - கீழசெல்வனூர் சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தின் காயல்குடிக்கு அருகே அமைந்துள்ளது.
  • 1998 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தச் சரணாலயமானது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும்.
  • இது இராமநாதபுரத்தின் சிறந்த நாரைகள் அடைகாக்கும் தளமாக கருதப்படுகின்றது.
  • குளிர்காலத்தில் இந்தச் சரணாலயமானது 40 பறவையினங்களை ஈர்க்கின்றது.
  • யுரேசிய துடுப்பு வாய்ப் பறவை, மஞ்சள் மூக்கு நாரை, மற்றும் தோணிக் கொக்கு ஆகிய மூன்று பறவையினங்களும் இந்தச் சரணாலயத்தின் முதன்மை இனங்களாகும்.
  • கூழைக் கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை ஐபிஸ் மற்றும் வெள்ளைக் கொக்கு ஆகியவை இந்த சரணாலயத்தில் பொதுவாக வசிக்கும் பறவைகளாகும்.
  1. தீர்த்தங்கல் பறவை சரணாலயம்
  • தீர்த்தங்கல் பறவை சரணாலயமானது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது பல வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர் பறவைகளின் தாயகமாகும்.
  1. சக்கரக் கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம்
  • சக்கரக் கோட்டை ஏரி பறவைகள் சரணாலயமானது பொதுவாக இராமநாதபுரத்தில் விவசாயத்திற்கு நீர் சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்ப்பாசன ஏரி ஆகும்.
  • இது அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான வடகிழக்குப் பருவமழையினால் நிரப்பப் படுகின்றது.
  • இது பரவலான பறவையினங்களுக்கான முக்கியமான மற்றும் தனித்துவமான வாழ்விடமாகும்.
  • இந்தச் சரணாலயமானது 42-க்கும் மேற்பட்ட பறவையினங்களுக்கு சூழலியல் சார் நீடித்த வாழ்விடத்தை அளிக்கின்றது.
  • பருவ காலங்களில் 30 வகை இனங்களைச் சேர்ந்த சுமார் 5000 பறவைகளும் பலவகையான புலம்பெயர் பறவைகளும் உணவிற்காக இங்கு வருகின்றன.
  • மேலும் அரிய வகையான, அபாயத்திலுள்ள, அச்சுறு நிலையில் உள்ள பறவைகளான பெரிய நீர்க் காகம், செந்நாரை, செண்டு வாத்து, கிளுவை, பவழக் காலி, பச்சைக் காலி போன்றவற்றினையும் இச்சரணாலயம் கொண்டுள்ளது.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்