நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. இதில் பலதரப்பட்ட அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. வளர்ந்துவிட்ட மேலை நாடுகளில் பெண்கள், முழுமையான அளவில் ஆண்களுக்குச் சரிசமமான வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்வதால் இந்தத் துன்புறுத்தல்கள் சற்று குறைவு.
பெண்களில் மகிழ்ச்சியான அன்னையாகவும், குடும்பத் தலைவியாகவும் வாழ்க்கை நடத்துவோர்கூட எவ்வளவு பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்தது. அமெரிக்காவின் இரண்டு ஆய்வாளர்கள் இது பற்றி ஓர் ஆராய்ச்சியை நடத்தித் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் குடும்பத்தில் பெண்கள் தொழிலாளர்கள் எனவும், அது மிகவும் கடினமான தொழில் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில், பண வசதி படைத்த உயர் குடும்பங்களில் திருமணமாகி, நல்ல வாழ்க்கையை நடத்தும் 393 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாம். அவர்களில் பெருவாரியான தாய்மார்கள், தங்கள் வாழ்க்கையை ஒரு கப்பலின் தலைவனாகப் பணி செய்து 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளனர்.
பெண்கள்
தங்கள் குடும்பத்தின் எல்லாப் பணிகளுக்கும் தலைமையேற்று, குழந்தைகளின் உணவு, உடைகள் அணிதல், கல்வி ஆகிய எல்லா தேவைகளுக்கும் பணி செய்து, தங்கள் வீட்டின் எல்லா நடவடிக்கைகளும் சரியாக நடக்க பொறுப்பேற்பதன் கடினத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு ஸ்லோ கில்லர்-மெதுவாகக் கொல்லும் நிலைமை என்பது பலரின் வாதம். தன்னை முழுமையாக ஈடுபடுத்தி குடும்பப் பணிகளைச் செய்வதால், தனக்குப் பிடித்த எந்த நடவடிக்கையையும் செய்து கொள்ளாத நிலைமையில் வாழ்வதாக நினைத்துக் கொள்கின்றனர் இந்தத் தரமான தாய்மார்கள். அவர்களது கணவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதும், தங்கள் மனைவியர் பொறுப்பானவர்கள் எனவும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள் எனத் திடமாக எண்ணுவதும் இந்த மனைவியருக்கும் குடும்பத்தின் எல்லோருக்கும் புரிந்த ஒரு விஷயம்.
ஆனால், இந்த மனைவியர் எவ்வளவு கடினமான வாழ்க்கையை வாழவேண்டியுள்ளது என்பது இவர்களில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
குழந்தைகளின் படிப்பை கவனித்து, தேவைப்படும் போது அவர்களின் படிப்பிற்கு உதவி செய்தல், அதாவது வீட்டுப்பாடங்களை அவர்கள் கற்கிறார்களா என மேற்பார்வை செய்தல் வேண்டும். இந்தத் தாய்மார்கள் ஒரு வேலையில் இருந்தால், அந்த வேலைக்குச் செல்லும்போது பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைத் தங்கள் காரில் கொண்டு போய் இறக்கிவிடவும், பள்ளி முடிந்தபின் பிள்ளைகளைப் பள்ளிகளில் இருந்து வீட்டிற்கு ஏற்றி வருவதும் முக்கியம். குடும்பத்தில் யாருக்கு எந்த உணவு நல்லது என்பதும், உடல்நலமில்லாத பிள்ளைகளுக்கும் கணவருக்கும் தேவையான வேளையில் மருந்துகளை அளிப்பதும் அவசியமான பணி.
மேலை நாடுகளில்
ஆக, தாய்மார்களே எல்லாம் என்பது திண்ணம். இது வளர்ந்துவிட்ட மேலை நாடு ஒன்றில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் உணர்த்தப்பட்டது எனினும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஒரு நாட்டில் நடந்தேறும் நடைமுறையும்கூட. நம் நாட்டில், நிலைமை மேலும் கடினம் எனலாம்.
உதாரணம்
கொல்கத்தா நகரின் ஓர் இளம் தாய் கூறுவது கவனிக்கத்தக்கது. நான் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். அந்தப் பணியுடன் சேர்த்து எனது குடும்பத்தின் எல்லா வேலைகளையும் செய்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.
குழந்தைகளை மட்டுமின்றி, என் மாமியார், மாமனார் ஆகியோரையும் கவனிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தூக்கமில்லாமல் தினமும் தவிப்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.
என் கணவர் தூங்கியபின்தான் நான் உறங்க முடியும். ஆனால், அவர் நீண்ட நேரம் முகநூலில் மூழ்கி, பின் தாமதமாகத்தான் உறங்கச் செல்வார். அதிகாலையில் நான் எழுந்துவிட வேண்டும். காரணம், குழந்தையைக் கவனித்து உணவுகளைத் தயாரித்து எல்லோருக்கும் பரிமாற வேண்டும் என்கிறார். இவற்றை எல்லாம் முடித்தபின் தனது அலுவலகப் பணிக்குச் செல்ல வேண்டும் என்கிறார்.
இது நமது இந்திய கலாசாரத்துடன் ஒட்டிப் பிறந்த ஒரு வாழ்க்கை நடைமுறை. இந்த இளம் தாய் தன் மாமியாரை கவனிக்கும் பணியைச் செய்ததுபோல்தான், இவருடைய மாமியார் அவருக்குக் கல்யாணமான புதிதில் அவருடைய மாமியாரை முழு அக்கறையுடன் கவனித்திருப்பார் என்பது நமது ஒப்புக்கொள்ளப்பட்ட கலாசாரம்.
ஆனால், நிறைய வளர்ச்சியடைந்த பின்னரும், நம் நாட்டில் பெண்கள் துயரப்படும் வகையில் பல இடங்களில் நடத்தப்படுவதும், அதைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் சரியான முறையில் அதைச் செய்யாததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆட்டோவில் செல்வது முதல் தனியார் மற்றும் பொதுத்துறை பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது சிறு வயது பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை ஆண்களால் கொச்சைப்படுத்தப்படுவதும் கண்டிக்கத்தக்கது. நின்று கொண்டு பயணம் செய்யும் பெண்களைத் தொட்டுக் கொண்டும், உரசிக் கொண்டும் பயணிப்பது முதல், கெட்ட விஷயங்களைப் பல இளைஞர்கள் ஓசைபட பெண்களுக்கு நடுவில் உரையாடுவதும் நடைமுறை வக்கிரங்கள்.
கல்லூரிகளில், பெண்களுக்குத் தனியாக விடுதிகள் அமைக்கப்படாமல், நிறைய இடங்களில் பெண்கள் தனியார் விடுதிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டியது கட்டாயம். அந்தப் பெண்கள் விடுதிகளில் பணம் அதிகம் செலுத்தினாலும், தேவையான வசதிகள் செய்யப்படாமல் தனியார் அமைப்புகள் லாபம் ஈட்டுவது சாதாரண நடைமுறை. தில்லியில் பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில், இரவு 8 மணிக்குள் மாணவிகள் வந்துவிட வேண்டும் என்ற விதி.
ஆனால், ஆண்கள் விடுதியில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. இரவில் எல்லா இடங்களிலும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு, சர்வ சாதாரணமாகப் பெண்கள் நடமாடும் இடமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா முதலிய நகரங்கள் உருவான பின்னரும் இதுபோன்ற ஓரின விதிகள் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலைமையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சரிசமமாக இருக்க முடியாது என்பதற்கு நமது மனநிலையே காரணம். இதனால், பாதிக்கப்படுவது பெண்களே.
உண்மை
முன்னேறிய பலரும் நினைவில் கொள்ளவேண்டிய அடிப்படை உண்மை, நமது முன்னேற்றத்துக்குக் காரணம் தாய்மார்கள் என்பதே. பெண்களை நம்மில் சிலர் துன்புறுத்துவதுபோல், பெண்களால் ஆண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியைக் கேட்டு பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நம்முடைய தாய்மார்களும், சகோதரிகளும் தான் தரமான குடும்பங்கள் உருவாகக் காரணம் என்பதை நினைவில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்தால், நாடு இன்னமும் வேகமாக வளர்ந்து முன்னேறும் என்பது நிச்சயம்.