TNPSC Thervupettagam

திஹேக் சர்வதேச நீதிமன்றம்... ஒரு அலசல்!

February 22 , 2019 2132 days 1408 0
  • இந்தியாவைப் பொருத்தவரை அதன் நீதி வழங்கும் உச்சபட்ச அமைப்பு என்றால் அது உச்சநீதிமன்றம் தான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகக் கருதப்படும்.
  • இது தனியொரு நாடு எனும் விதத்தில் சரி. ஆனால் இப்போது இந்தியாவுக்கும் அதன் அண்டைநாடுகளுக்கும் இடையில் ஏதேனும் பகை அல்லது எல்லைப் பங்கீட்டில் உடன்பாடின்மை என்று ஏதேனும் விவகாரங்கள் எழுந்தால் அப்போது இருநாட்டு உச்சநீதிமன்றங்களையும் தாண்டி அவை ஒரு பொதுவான நீதிமன்றத்தை நாடி தங்களுக்கிடையிலான பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே சர்வதேச நீதிமன்றம்.
  • சர்வதேச நீதிமன்றத்திற்கு வெகு சமீபத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ள வழக்கு கடந்த இருவருடங்களுக்கும் மேலாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடுமையான குடைச்சலை உண்டாக்கிய குல்பூஷன் ஜாதவ் வழக்கு.
குல்பூஷன் ஜாதவ் வழக்கைப் பற்றிய சிறு குறிப்பு...
  • இந்தியாவைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
  • அவர் இந்தியா சார்பாக பாகிஸ்தானில் ஊடுருவி உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்.
  • இந்தியா அதை ஏற்கவில்லை. ஜாதவ் சார்பாக போதிய அளவு விசாரணை நடத்தாமல் பாகிஸ்தான் நீதிமன்றம் சர்வாதிகாரத் தனமாக முடிவெடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்ததை ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் என இந்தியா கருதியது.
சர்வதேச நீதிமன்றம்
  • இந்தியாவின் கோரிக்கையின் படி தற்போது குல்பூஷன் ஜாதவ் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள சமகாலத்தில் அதன் மீதான விசாரணையும் தொடங்கப்பட்டு விட்டது.
  • சர்வதேச நீதிமன்றம் என்பது ஐநா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு.
  • இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான திஹேக்கில் அமைந்துள்ளது.
  • திஹேக் சர்வதேச சட்ட அகாதெமி அமைந்திருக்கும் அமைதி மாளிகையை அதனுடன் இணைந்து சர்வதேச நீதிமன்றமும் பகிர்ந்து கொண்டுள்ளது.
அமைதி மாளிகை
  • உலக அமைதியின் சின்னமாக நெதர்லாந்து நாட்டின் திஹேக்கில் அமைக்கப்பட்டுள்ளது இந்த மாளிகை.
  • உலகில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இம்மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது.
  • அவ்வகையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் அமைதி நிலவச் செய்வதில் இந்த அமைதி மாளிகையின் பணி குறிப்பிடத்தக்கது.
  • அமைதி மாளிகையின் தனிச்சிறப்பே அதனுள் அமைந்திருக்கும் சர்வதேச நீதிமன்றம் தான்.
  • அமைதி மாளிகை கட்டப்பட்டதே சர்வதேச நீதிமன்றம் இயங்க தோதாக ஒரு அமைப்பு தேவை என்பதால் மட்டுமே.
  • இந்த மாளிகை அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது 1913 ஆகஸ்டு 28 ஆம் தேதி முதல் 1899 ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கையின் படி உலகில் போரற்ற சமூகத்தை உருவாக்க வேண்டி உறுப்பு நாடுகளின் சம்மதத்தின் பேரில் இந்த நீதிமன்றம் ஆண்ட்ரூ டிக்சன் வைட் என்பவரது பெருமுயற்சியினால் ஆன்ட்ரூ கார்னிஜியால் நிர்மாணிக்கப்பட்டது அமைதிமாளிகை.
  • இம்மாளிகைக்கு 2014 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பாரம்பரியச் சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது
சர்வதேச நீதிமன்றம் – நீதிபதிகள்
  • இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் பதவி வகிப்பர்.
  • ஒவ்வொருவருக்குமான பதவிக்காலம் என்பது 9 ஆண்டுகள்.
  • ஐநா சபையின் பொதுக்குழுவும், பாதுகாப்புக் குழுவும் இணைந்து இவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
  • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து நீதிபதிகள் என்ற அளவில் தேர்தல் நடைபெறும்.
  • பதவியில் இருக்கும் போதே நீதிபதிகளில் எவரேனும் ஒருவர் இறப்பர் எனில், அவருக்கு மாற்றாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
  • ஒரே நாட்டிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடத் தகுதியான உறுப்பினர்களின் பட்டியல்...
இந்த அமைப்பு தொடங்கியதிலிருந்து இன்று வரை, பாதுகாப்புக் குழுவில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டைச் சார்ந்த நீதிபதிகளை நியமித்துக் கொண்டிருக்கின்றன.
  • சீனா மட்டும் சில ஆண்டுகாலத்திற்கு தன் நாட்டு நீதிபதியை இந்தக் குழுவில் அங்கம் வகிக்கச் செய்யவில்லை.
  • ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, ஃப்ரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நீதிமன்றம் துவக்கப்பட்ட வருடத்திலிருந்தே தங்களது நாட்டு நீதிபதிகளை தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
  • புவிப்பிரிவு அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் இருக்குமென்றாலும் இதற்கென்று சட்டப்பூர்வமான விதிகள் ஏதும் இல்லை.
  • இந்த அமைப்பின் சட்டப்படி, நாட்டில் அடிப்படையில் இல்லாமல், உயர்ந்த குணங்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • இங்கு பதவியில் உள்ள நீதிபதிகள் பிற நீதிமன்றங்களில் பணியாற்றக்கூடாது என்பது விதி.
  • நீதிபதிகளில் ஒருவரை ஏதேனும் குற்றச்சாட்டின் காரணமாக பதவியில் இருந்து நீக்க வேண்டுமெனில் அதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகளின் வாக்குகள் அவசியம் தேவை.
  • சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளின் தன்மைகள் மற்றும் நிலையைப் பொருத்து தற்காலிகமாக நீதிபதிகள் இணைந்து கொள்ளலாம்.
  • அதிகபட்சமாக ஒரு வழக்கிற்கு பதினைந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியும். நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒரே மாதிரியோ அல்லது வேறுபட்டோ இருக்கலாம். வேறுபட்டு இருந்தால், அதிகம் பேரின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். சமஅளவில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால், தலைமை நீதிபதியின் முடிவே இறுதியானது.
  • ஐநா சபை சட்டத்தின் 93 வது ஷரத்தின் படி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர். ஐநா சபையில் இல்லாத நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். சுவிட்சர்லாந்தும், நவுருவும் ஐநா சபையில் இல்லாத போதே இதன் உறுப்பினராகச் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புக் குழுவும் சர்வதேச நீதிமன்றமும்...
  • ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். உறுப்பினர் இந்த தீர்வை ஏற்காத நிலையில், இது பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
  • ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு எதிராகவோ, அவற்றின் நட்பு நாடுகளுக்கு எதிராகவோ நீதிபதி தீர்ப்பளித்தால், அந்த தீர்ப்பை தடுப்பு வாக்கின் மூலம் தடை செய்ய முடியும்.
  • சில வழக்குகளில் இது நிகழ்ந்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கும், பாதுகாப்புக் குழுவிற்கும் எதிரெதிர் கருத்துகள் இருந்தால், இறுதி முடிவு பாதுகாப்புக் குழுவிற்கு சாதகமாகவே இருக்கும்.
உலக நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தை எந்தெந்த விவகாரங்களுக்காக அணுகுகின்றன?
  • நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்னைகளுக்காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதங்களின் போதும் அத்தகைய பிரச்னைகளில் நீதிபெறவும் இருநாடுகளுக்கிடையே அமைதி நிலவச் செய்யவும் உலகநாடுகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுகின்றன.
  • கடல் எல்லை சார்ந்த பிரச்னைகள், உலகநாடுகளுக்கிடையிலான கடல் எல்லைக் கோட்பாடுகள் மற்றும் பயன்பாடுகளில் பிரச்னைகள் வரும்போதும் அத்தகைய பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள உலகநாடுகள் சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றன.
  • உலக நாடுகளுக்கிடையிலான போர் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மீறப்படும் போதும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகி அதற்கான தீர்வுகள் பெறப்படுகின்றன.
  • ஐநா சபையின் உறுப்பு நாடுகளின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளின் பால் ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் ஐநா சபைக்கு அவற்றைக் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. உதாரணமாக உறுப்பு நாடுகளுக்கிடையிலான போர்களின் போது மனித உரிமை மீறல்கள் நிகந்திருந்தால் அவை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு அதில் தலையிட உரிமை உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தில் இதுவரை விசாரிக்கப்பட்ட வழக்குகள்...
  • 1949 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலும் மொத்தம் உறுப்புநாடுகள் மற்றும் உலகநாடுகள் மூலமாக தம்மை வந்தடைந்த 168 க்கும் மேற்பட்ட வழக்குகளை இதுவரை சர்வதேச நீதிமன்றம் விசாரித்துள்ளது. அவற்றில் பல வழக்குகளில் சமத்காரமான தீர்ப்புகளை வழங்கி தன் மீதான நம்பகத் தன்மையையும் நிலைநிறுத்தியுள்ளது ICJ (International Court Of Justice).
  • மேற்கண்ட 168 வழக்குகள் தவிர மேலும் பல நிலுவையில் இருக்கும் வழக்குகளும் உண்டு. அவற்றுக்கான தீர்ப்புகள் வழங்கப்படுதல் என்பது அவ்வழக்குகளுக்கான விசாரணை நடைபெறும் விதத்தைப் பொருத்தது.
  • சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வழக்குகள் பெரும்பாலும் நாடுகளுக்கிடையிலான எல்லைத் தகராறுகள், அல்லது நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் வண்ணம் அண்டை நாடுகளின் செயல்பாடுகள் இருப்பின் அதை அடக்கவும், கண்டிக்கவும் வழக்கு தொடுக்கப்பட்டு அவற்றை உள்நாட்டு நீதிமன்றங்களில் தீர்த்துக் கொள்ள முடியாது எனும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் கதவுகளை உலகநாடுகள் தட்டுகின்றன.
உதாரணத்திற்கு;
  • வடகொரியா, தென்கொரியா சச்சரவுகள்
  • இந்தியா, பாகிஸ்தான் எல்லைத் தகராறு
  • ஈரான், ஈராக் வளைகுடா நாடுகள் தொடர்பான எண்ணெய் ஆளுமைத் தகராறுகள்
  • சிரியா, பாலஸ்தீன போர் விவகாரங்கள்
  • இலங்கை போரின் போதான மனித உரிமை மீறல் விவகாரங்கள் போன்ற விஷயங்களில் சர்வதேச நீதிமன்றத்தின் தலையீடு வேண்டப்பட்டிருக்கிறது.
 
  • சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் இந்தியர் ஒருவரும் உள்ளார்.
  • அவரது பெயர் தல்வீர் பண்டாரி.
  • இவர் இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி: தினமணி

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்