புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரி மாணவர்கள் தாக்கப்படுகின்றனர்.
காஷ்மீரி மாணவர்களும் வியாபாரிகளும் உத்தரகண்ட், ஹரியாணா, கர்நாடகம், ராஜஸ்தான், மகராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அவர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டு காஷ்மீருக்கு திரும்புகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் காஷ்மீரி மாணவர்கள் பலர் அடித்து விரட்டப்பட்டிருப்பதும், எல்லா காஷ்மீரிகளும் தீவிரவாதிகள் என்கிற கோஷத்துடன் அவர்கள் தாக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டிருப்பதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து காஷ்மீருக்குத் திரும்பும் மாணவர்கள் பஞ்சாபில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
அவர்களுக்கு அரசும் தன்னார்வ நிறுவனங்களும், உணவும் தற்காலிக உறைவிடமும் தந்து பாதுகாக்கிறது என்றாலும்கூட இப்படி அவர்கள் அடித்து விரட்டப்படுவது வேதனையளிக்கிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் எழுப்பப்படும் பழிவாங்கலுக்கான கோஷம், அர்த்தமற்றது.
பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் காஷ்மீரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலால், இந்தியாதான் பாதிக்கப்படுமே தவிர பயங்கரவாதிகளுக்கோ பாகிஸ்தானுக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
மாறாக, காஷ்மீரிகள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான மனோபாவம் மேலும் வலுக்கக்கூடும்.
சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதத்தில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அதிகமாக பாகிஸ்தானுக்குத் தரப்போவதில்லை என்று இந்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது, உணர்ச்சியைத் தூண்டுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர, நடைமுறையில் சாத்தியமல்ல.
இதுகுறித்து இதற்கு முன்னால், பலமுறை பேசியும் சிந்தித்தும் பார்த்தாகிவிட்டது.
சிந்து நதியின் உபரி நீரைத் தேக்கி வைப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அறிவிப்புகளை வெளியிடுவதால் என்ன லாபம் இருக்கப் போகிறது?
அதேபோல, பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் தரப்பிலும் பொதுமக்கள் மத்தியிலும் கோரிக்கை எழுப்பப்படுகிறது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதைத் தடை செய்வது அர்த்தமற்றது என்று கருத்துத் தெரிவித்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான சுனீல் காவஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தேசத் துரோகிகள் என்று வர்ணிக்கப்படுவது வேடிக்கையாகவும் வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.
அண்டை நாடான பாகிஸ்தான் அராஜகத்தில் ஈடுபட்டிருந்தாலும்கூட, அதை எதிர்கொள்வதற்கு முற்றிலுமாக உறவுகளைத் துண்டித்துக் கொள்வது என்பது தவறான ராஜ தந்திரம்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு தாம்தான் காரணமென்று ஜெய்ஷ் - ஏ - முகமது பயங்கரவாத அமைப்பு அறிவித்த பிறகும்கூட, ஜெய்ஷ் - ஏ - முகமதுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பது மிகப் பெரிய வேடிக்கை.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு, பகவல்பூரில் உள்ள ஜெஏஎம் தலைமை அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் பாவாத் சௌத்ரி,
ஜெஏஎம்-முடன் எந்தத் தொடர்பும் இல்லாத மதரஸாக்களை மட்டும்தான் அரசு தன்வசப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதில் எது உண்மை? எது பொய்? என்பது பாகிஸ்தானுக்குத்தான் வெளிச்சம்.
ஜெய்ஷ் - ஏ - முகமது தலைமையகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்திருப்பதாக
பாகிஸ்தான் அறிவித்திருப்பதன் பின்னணியில் உலக நாடுகளின் அழுத்தம் காணப்படுகிறது.
பாகிஸ்தான் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது.
அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையும், பயங்கரவாதத்துக்கு தீனி போடுவதால் சீர்குலைந்திருக்கும் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறது.
இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல் திட்ட அமைப்பு, பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது என்று அறிவித்திருக்கிறது.
ஐ.நா. சபையின் பாதுகாப்புக்குழு முதல்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுக்கு எதிராக காணப்படும் சூழலை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாகத் தனது மண்ணிலிருந்து அகற்றும் வரை, அந்த நாடு இப்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உலக வங்கியோ, சர்வதேச நிதியமோ உதவியளிக்காமல் தடுக்க வேண்டும். அதன்மூலம் மட்டுமே பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர முடியும்.
இதை விட்டுவிட்டு பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது, காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிந்து நதி உபரி நீரைத் தடுத்து நிறுத்துவது, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாமல் தவிர்ப்பது ஆகியவை பிரச்னைக்குத் தீர்வாகாது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.