இந்திய மருத்துவரான தராவத் மாதவன் நாயர் ஒரு அரசியல்வாதியும் திராவிட இயக்கத்தின் ஒரு முக்கிய அரசியல் ஆர்வலரும் ஆவார்.
இவர் தியாகராய செட்டியார் மற்றும் நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து நீதிக் கட்சியைத் தொடங்கினார்.
இளமைக் கால வாழ்க்கை
1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் மதராஸ் மாகாணத்தில் திரூருக்கு அருகில் பாலக்காட்டின் ஒரு தராவத் குடும்பத்தில் நாயர் பிறந்தார்.
இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துப் பின்பு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
ஆனால் அந்தப் படிப்பை முடிக்கும் முன்னரே ஐக்கியப் பேரரசின் எடின்பர்க்கிற்கு அவர் சென்றார்.
சமஸ்கிருத மற்றும் மலையாள அறிஞரும் இவரின் சகோதரியுமான தராவத் அம்மாளு அம்மாள் 63 நாயன்மார்களின் வாழ்க்கையை மலையாளத்தில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்.
ஐக்கியப் பேரரசில்
இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பை (B., Ch.B.) முடித்துப் பின்னர் 1896 ஆம் ஆண்டில் கட்டாயப் பாரம்பரிய மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டிருந்த தனது முதுகலைப் படிப்பையும் (M.D) முடித்தார்.
இவர் ஐக்கியப் பேரரசில் தங்கியிருந்த காலகட்டத்தில் எடின்பர்க் மாணவர் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்தார்.
பின்னர் அவர் எடின்பர்க் இந்தியக் கூட்டமைப்பின் தலைவராகவும், எடின்பர்க் பல்கலைக்கழக சுதந்திரச் சங்கம் மற்றும் பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் இவர் எடின்பர்க் பல்கலைக்கழக சுதந்திரச் சங்கத்தின் “தி ஸ்டூடண்ட்” எனும் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இவர் இந்தியா திரும்புவதற்கு முன்னதாக, தாதாபாய் நௌரோஜியின் தலைமையில் செயல்பட்ட லண்டன் இந்தியச் சங்கத்திற்குச் செயலாளராகவும் பின்னர் அதன் துணைத் தலைவராகவும் சிறிது காலம் லண்டனில் பணியாற்றினார்.
மேலும் இவர் பிரிட்டிஷ் மருத்துவச் சங்கம், ராயல் ஆசியச் சமூகம், தேசிய சுதந்திர மன்றம் மற்றும் ராயல் சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
செயல்பாடுகள்
1904 ஆம் ஆண்டில் மதராஸில் இந்திய மருத்துவர்களுக்கான இதழான “ஆன்டிசெப்டிக்” எனும் இதழ் நாயரால் நிறுவப்பட்டு 1919 ஆம் ஆண்டு இவரின் மறைவு வரை அந்த இதழ் இவரால் தொகுக்கப் பட்டது.
முதலாம் உலகப் போரின் போது இவர் S.S. மதராஸ் எனும் மருத்துவமனைக் கப்பலின் அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவராகப் பணியாற்றினார். மேலும் அதன் துணை நிலை அதிகாரியாகவும் (லெப்டினன்ட்) அவர் நியமிக்கப்பட்டார்.
போரின் முடிவிற்குப் பின்னர் கெய்சர் – இ - ஹிந்த் பதக்கமும் இவரின் மறைவிற்குப் பின்னர் போர்ச் சேவைக்கான பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது.
1917 ஆம் ஆணடு பிப்ரவரி 26 முதல் “நீதி” எனும் செய்தித் தாள் வெளிவரத் தொடங்கியது. 1919 ஆம் ஆண்டு தனது மறைவு வரை நாயர் அதன் தலைமைப் பதிப்பாசிரியராக இருந்தார்.
இந்த செய்தித்தாளில் இவர் இந்திய தேசிய இயக்கத்தில் உள்ள அவரின் எதிர்ப்பாளர்களையும் தன்னாட்சி இயக்கத்தின் ஆதரவாளர்களையும் தாக்கி எழுதினார்.
மேலும் நாயர் அன்னிபெசன்டின் பிரம்மஞான சபையின் நடவடிக்கைகள் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவரின் தீவிர விமர்சகரும் எதிர்ப்பாளருமாவார்.
அரசியல் மற்றும் நிர்வாகம்
1904 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரை நாயர் மதராஸ் மாநகராட்சியில் திருவல்லிக்கேணியின் சார்பில் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
1908 ஆம் ஆண்டில் தொழிலாளர் ஆணையத்தின் உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
இவர் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் மோசமான நிலையைக் கண்டித்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததோடு அவர்களின் வேலை நேரத்தைக் குறைக்கவும் பரிந்துரை செய்தார்.
மேலும் இவர் தனது கண்டனத்தையும் பரிந்துரைகளையும் லண்டனில் உள்ள இந்தியாவிற்கான அரசுச் செயலரிடம் தனிப்பட்ட முறையில் சமர்ப்பித்தார்.
1912 முதல் 1916 வரை நாயர் மதராஸ் மாகாணத்தின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காலத்திலிருந்தே, இந்திய தேசியக் காங்கிரசுடன் தொடர்பில் இருந்த இவர் 1917 ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகினார்.
1907 ஆம் ஆண்டில் வட ஆற்காட்டில் சித்தூர் மாவட்டக் காங்கிரசிற்கு அவர் தலைமை தாங்கினார்.
1898 மற்றும் 1899 ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மருத்துவச் சேவையில் உள்ள இந்திய மருத்துவ அதிகாரிகளின் அப்போதைய நிலைமையை அவர் கடுமையாக கண்டித்ததோடு அவர்கள் சரி சமமாக நடத்தப்பட வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்தார்.
1916 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சட்டமன்றங்களுக்கானத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த போது இந்திய தேசியக் காங்கிரசில் உள்ள சாதி அடிப்படையிலான பாரபட்சங்களே தனது தோல்விக்கான காரணங்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
இந்திய தேசியக் காங்கிரசில் பிராமணர்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதாக நாயர் கருதினார்.
அன்னிபெசன்ட்டால் தொடங்கப்பட்ட தன்னாட்சி இயக்கத்தை இவர் கடுமையாக எதிர்த்தார்.
மீள் இணைப்பு
1912 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சி ஆணையத்தில் இரண்டு விதமான குழுக்கள் இருந்தன.
பிராமணரல்லாதோர் குழுவிற்கு சர் பிட்டி தியாகராய செட்டியார் தலைமை தாங்கினார்.
மற்றொரு குழுவிற்கு டி.எம். நாயர் தலைமை தாங்கினார்.
இந்த இரு குழுவினரும் பிராமணரல்லாதோராக இருந்த போதிலும் அவைக் கூட்டங்களில் இதன் இரு தலைவர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்த இரண்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்திருந்தால் பிராமணரல்லாதோர் இயக்கத்தினை வேகமாக முன்னேற்றலாம் என்பதனை நடேச முதலியார் உணர்ந்தார்.
இதனால் தான் நடேச முதலியாரால் இவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளைச் சரி செய்ய முடிந்தது.
திராவிட இயக்கம்
1909 ஆம் ஆண்டில் P. சுப்பிரமணியம் மற்றும் M. புருஷோத்தம் எனும் இரு மதராஸ் நகர வழக்கறிஞர்களால் பிராமணரல்லாதோர் சங்கமானது தோற்றுவிக்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்படும் வரை தியாகராய செட்டியார் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அதிருப்தி அடைந்த பிராமணரல்லாத அதிகார வர்க்கத்தின் உறுப்பினர்களான சரவணப் பிள்ளை, G. வீராச்சாமி நாயுடு, துரைசாமி நாயுடு மற்றும் நாராயண சாமி நாயுடு ஆகியோரால் மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்பட்டது C. நடேச முதலியார் அதன் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1912 ஆம் ஆண்டிலேயே (அக்டோபர்) மதராஸ் ஒருங்கிணைந்த லீக் ஆனது மதராஸ் திராவிடச் சங்கம் என மறுபெயரிடப்பட்டது.
திராவிடம் எனும் சொல் ஒரு அரசியல் அமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
பின்னாளில் பனகல் ராஜா என்றழைக்கப்பட்ட பனகந்தி ராமராயநிங்கார் அதன் தலைவராகப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த அமைப்பின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக மதராஸ் திராவிடச் சங்கமானது “திராவிட இல்லம்” எனும் விடுதியை நடத்தியது.
சாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக விடுதிச் சலுகைகள் கிடைக்கப் பெறாத பிராமணரல்லாத மாணவர்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டது.
1914 ஆம் ஆண்டில் மதராஸின் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடேசன் அத்தகைய விடுதிகளை நடத்தினார்.
1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தியாகராய செட்டியார் மற்றும் நாயர் உட்பட முப்பது பேர் கொண்ட குழுவின் கூடுகை ஒன்று நடத்தப் பட்டது.
பிராமணரல்லாதவர்களின் குறைகளை அறியப்படுத்த ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி செய்தித்தாள்களை வெளியிட தென்னிந்திய மக்கள் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.
தியாகராய செட்டியார் இந்த அமைப்பின் செயலாளரானார்.
“நீதி” எனும் பெயரிடப்பட்ட ஒரு செய்தித் தாளானது, 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் வெளிவரத் தொடங்கியது.
நாயர் இதன் முதல் ஆசிரியராக இருந்தார்.
இந்தக் கூடுகையானது மேலும் தென்னிந்திய தாராளவாதிகள் கூட்டமைப்பு எனும் ஒரு அரசியல் சங்கத்தினையும் உருவாக்கியது.
“நீதி” என்ற பத்திரிக்கையை இது வெளியிட்டதால் பின்னாளில் இந்தச் சங்கமானது “நீதிக்கட்சி” என பிரபலமாக அழைக்கப்பட்டது.
தியாகராயச் செட்டியார் 1917 ஆம் ஆண்டிலிருந்து 1925 ஆம் ஆண்டு தனது மறைவு வரை இந்தக் கூட்டமைப்பின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.
இடஒதுக்கீடு மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை வெகு சீக்கிரம் ஏற்றுக் கொள்வதன் மூலம் நீதிக் கட்சி அப்பிரச்சினைகளுக்கானத் தீர்வினைக் கோரியது.
திராவிடர் கழகத்தினை உருவாக்க நீதிக்கட்சியுடன் 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈவெரா பெரியாரின் சுய மரியாதை இயக்கமும் கைகோர்த்தது. இது பிராமண எதிர்ப்பு, வட இந்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு அமைப்புகளுக்கு உதவியது.
இறுதிக்காலம்
1919 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் நாள் லண்டனில் மாரடைப்பால் நாயர் காலமானார்.
இவரின் உடல் லண்டனின் கோல்டர்ஸ் கீரின் எனும் பகுதியில் உள்ள கல்லறைத் தளத்தில் தகனம் செய்யப்பட்டது. இது இன்றும் பல சுற்றுலாப் பயணிகளை அங்கு ஈர்க்கின்றது.
2008 ஆம் ஆண்டு இந்திய அரசானது இவரின் நினைவாக தபால் தலையொன்றை வெளியிட்டது.
சென்னையில் இவர் வாழ்ந்து மருத்துவம் பயின்றப் பகுதிக்கு இவரின் நினைவாக தியாகராய நகர் வழியாகச் செல்லும் முக்கியச் சாலைக்கு டாக்டர் நாயர் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவரின் சமூகச் சிந்தனைகள் மற்றும் சுயமரியாதைத் தத்துவங்கள் காரணமாக பெரியாரால் இவர் “திராவிட லெனின்” என்று அழைக்கப் பட்டார்.