நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - I
May 17 , 2019 2019 days 34373 0
இந்திய நாடு உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் நாடாகும்.
இருப்பினும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மிகவும் அவசியமானதாகும்.
1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்ந்த போதிலும், ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த சமயத்தில் அதன் மகிமையை இழந்திருந்தது.
சுதந்திரமடைந்த பிறகு, இந்தியாவில் உயர் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல சீர்திருத்தங்களை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.
அந்த நேரத்தில் இந்தியாவானது தொழிற்புரட்சியின் முன்னணியில் இல்லை என்பதை அவர் தெளிவாக புரிந்திருந்தார்.
எனவே இந்தியாவில் உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடித்தளம்
1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாளன்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research-CSIR) எனும் தன்னாட்சி அமைப்பு செயல்பாட்டிற்கு வந்தது.
ஆரம்ப காலத்தில் கீழ்க்காணும் 8 தேசிய அளவிலான ஆய்வகங்கள் CSIR-ன் கீழ் தொடங்கப்பட்டன.
தேசிய வேதியியல் ஆய்வுக் கூடம் – புனே
தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடம் – புதுடெல்லி
தேசிய உலோகவியல் ஆய்வுக் கூடம் – ஜாம்ஷெட்பூர்
மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் – ஜார்க்கண்ட்
மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் – லக்னோ
மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் – கொல்கத்தா
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் – தமிழ்நாட்டின் காரைக்குடி
மேற்கண்ட அனைத்து நிறுவனங்களும் 1940 – 1950க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் தொடங்கப்பட்டன.
தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதற்காக பேராசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட 22 பேர் கொண்ட குழுவினால் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (Indian Institute of Technology-IIT) உருவாக்கும் திட்டம் உருவானது.
1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் நாள் மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) திறக்கப்பட்டது.
1950-களின் பிற்பகுதி மற்றும் 1960-களின் முற்பகுதிகளில் பம்பாய், மெட்ராஸ், கான்பூர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் மேலும் பல இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
1954 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆணை மூலம் அணுசக்தி ஆற்றல் துறை (Department of Atomic Energy-DAE) நிறுவப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களுக்காக 1958 ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation-DRDO) சோவியத் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.
விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக்குழு
இந்திய விண்வெளித் திட்டத்தினை உருவாக்குவதற்காக டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையின் கீழ் விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு (Indian National Committee for Space Research - INCOSPAR) 1962 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக (Indian Space Research Organisation-ISRO) இது மாற்றியமைக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது (Department of Science & Technology-DST) 1971 ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறுவப்பட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்தத் துறையானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.
நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்பான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான முதன்மை துறையாக இது செயல்படுகின்றது.
ஐந்தாண்டுத் திட்டங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டக் குழுவானது முதலீட்டு அளவை முடிவு செய்தல், முன்னுரிமைகளைப் பரிந்துரைத்தல், விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கிடையே நிதிகளைப் பிரித்து வழங்குதல் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கிடையே வளங்களைப் பிரித்து வழங்குதல் ஆகிய பணிகளை செய்கிறது.
ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பது இதன் பிரதானமான பொறுப்பாகும்.
இது ஏறக்குறைய அனைத்து ஐந்தாண்டுத் திட்டங்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியே வகுத்தது.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) திறமையான நபர்களைக் கண்டறிய திறன் வாய்ந்த மனிதவளக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
தொழில்நுட்பத்தில் திறன்மிகு நபர்களின் தன்னார்வ பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இத்திட்டம் அதன் இலக்கை அடையத் தவறியது.
பின்னர் இந்த திறன் விவரங்களானது 1961 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்துப் பெறப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் போது (1961-66) அரசானது ஈர்த்தல் மற்றும் உந்துதல் என இருவகையான ஆய்வுகளை உருவாக்கத் திட்டமிட்டது.
கல்வியியல் துறையில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் ஈர்த்தல் வகை ஆராய்ச்சியாகும்.
தொழிலகங்கள் மற்றும் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் உந்துதல் வகை ஆராய்ச்சியாகும்.
நான்காவது மற்றும் ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் (1969-1974 & 1974-1979) CSIR-ன் கட்டுப்பாட்டிற்கு வெளியில் இயங்கும் பின்வரும் இரு அறிவியல் அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி வாரியம்.
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டக் காலமானது (1985 -1990) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கான தாயாக கருதப்படுகிறது.
இந்தக் காலத்தில் தான் நானோ தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் இதர பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன.
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது (1992 -1997) அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவற்றைத் தவிர இதர போர்த்தி றன் சாராத அறிவியல் & தொழில்நுட்ப பகுதிகள் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டை தனியார் மயமாக்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1992-1997) கல்வி மற்றும் தொழில்துறைகளின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால் ஆறாவதுத் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஏற்பட்ட தவறை நிவர்த்தி செய்ய தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இடைமுக நிறுவனம் (Industrial Science and Technology Interfacing Institution -ISTIIS) உருவாக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் தான் சர்வதேச அறிவியல் திட்டங்களில் குறிப்பாக செர்ன் (European Organisation for Nuclear Research-CERN) என்ற அமைப்பிற்கு அணுசக்தித் துறையானது கணிசமான அளவில் பங்களிப்பை அளித்தது.
இந்த பங்களிப்பானது சர்வதேச அறிவியல் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு புகழடையச் செய்யப் பட்டது.
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-2012) அரசானது அந்த பத்தாண்டுக் காலத்தை (2010-2020) புத்தாக்கத்திற்கான பத்தாண்டாக அறிவித்தது.
மேலும் இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பாலினச் சமநிலையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியின் மிக முக்கியப் பிரச்சினை என்பது “அறிவுடையோர் வெளியேற்றம்” என்பதாகும்.
பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டமானது (2012-2017) புத்தாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அறிவுடையோர் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
மேலும் இது கீழ்க்காண்பவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றது.
R &D துறையில் தேசிய அளவிலான வசதிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டு வளர்ச்சியை வலியுறுத்துதல்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் (கூட்டு முறையில்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்தல்.