TNPSC Thervupettagam

நவீன இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - III

July 22 , 2019 1808 days 8356 0

அணு சக்தித் துறை

  • இந்தியாவின் அணு சக்தி வளங்களை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்துவதற்காகவும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகவும் தேவையான வழிமுறைகளைப் பரிந்துரை செய்வதற்காக அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி வாரியம் 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாபாவின் தலைமையில் அணு சக்தி ஆராய்ச்சிக் குழு ஒன்றை அமைத்தது.
  • 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அணு சக்தித் துறையில் ஆராய்ச்சிக்காக ஆலோசனை மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பாபாவால் தலைமை தாங்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் அது நிறுவப்பட்டது.

  • 1948 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று அணு சக்தி மசோதாவை அன்றையப் பிரதமரான நேரு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அதுவே இந்திய அணு சக்திச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
  • 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அணு சக்தி ஆணையமானது அறிவியல் ஆராய்ச்சி துறையிலிருந்துப் பிரித்து தனியாக நிறுவப்பட்டு அதன் முதல் தலைவராக பாபா நியமிக்கப்பட்டார்.
  • இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்திற்குப் பின்னர் 1958 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் நாள் அணு சக்தி ஆணையத்தை அறிவியல் ஆராய்ச்சி துறையின் கீழ் அதிக நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் இந்திய அணு சக்தி ஆணையமாக மாற்றியது.

  • இது பின்வரும் ஆறு ஆய்வு மையங்களைக் கொண்டு உள்ளது.
    • பாபா அணு ஆராய்ச்சி மையம் – மும்பை
    • இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் - கல்பாக்கம் (தமிழ்நாடு)
    • ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையம் – இந்தூர்
    • நிலையற்ற ஆற்றல் சுழல் முடுக்கி (சைக்ளோட்ரான்) மையம் – கல்கத்தா
    • அணு தாதுக்களின் தேடல் மற்றும் ஆய்வுக்கான இயக்குநரகம் – ஐதராபாத்
    • அணு சக்தி கூட்டாண்மைக்கான உலகளாவிய மையம்
  • 1954 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் நாள் மும்பையின் டிராம்பேவில் அணு சக்தி உற்பத்தி அமைப்பு ஒன்று அணு சக்தி ஆணையத்தால் நிறுவப்பட்டது.
  • இது அணு உலை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1956 ஆம் ஆண்டு மே மாதம் டிராம்பேயில் ஆராய்ச்சி உலைகளுக்கான யுரேனியம் உலோக ஆலை மற்றும் எரிபொருள் தனிம கட்டுருவாக்க அமைப்பு ஆகியவற்றின் கட்டுமானப் பணி தொடங்கியது.
  • யுரேனியம் உலோக ஆலையானது 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு பிப்ரவரியில் எரிபொருள் தனிம ஆலையும் செயல்படத் தொடங்கியது.
  • டிராம்பே அணு சக்தி அமைப்பானது (1967ல் BARC எனவும் அழைக்கப்படும் பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையம் என மறுபெயரிடப்பட்டது) அதிகாரப் பூர்வமாக 1957 ஆம் ஆண்டு நேருவால் மும்பையில் திறந்து வைக்கப்பட்டது.
  • BARC மையத்தில் இந்தியாவின் முதல் அணு உலையான “அப்சரா” 1957 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது இங்கிலாந்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது.

  • 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று நேருவும் கனடா நாட்டு உயர் ஆணையரும் இணைந்து கனடா-இந்தியா கொழும்பு அணு உலைத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், கனடாவானது 40 மெகா வாட் சிரஸ் அல்லது கனடா இந்தியா உலை பயன்பாட்டுச் சேவைகள் (CIRUS - Canada India Reactor Utility Services) என்ற அணு உலையை உலைகளின் ஆரம்ப கட்ட உற்பத்தி மற்றும் பொறியியல் கட்டுமானம் உட்பட முழுவதும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வழங்கியது.
  • மேலும் இது இந்தியப் பணியாளர்களுக்கு அதன் செயல்பாட்டுப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கியது.
  • சிரஸ் உலையின் கட்டுமானப் பணியானது 1960 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது. 1960 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் முழு செயல்பாட்டுத் திறனை அடைந்ததன பிறகு இவ்வுலையானது 1961 ஆம் ஆண்டு ஜனவரியில் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
  • 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று இந்திய அரசானது இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தை மகாராஷ்டிராவின் தாராப்பூருக்கு அருகில் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப் படிவத்தை வெளியிட்டது.
  • இந்த அணுமின் நிலையமானது 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று செயல்நிலைப் படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் கட்டப்பட்ட முதல் வணிக ரீதியிலான அணுமின் நிலையம் இதுவேயாகும்.
  • கல்பாக்கத்தில் அமைந்துள்ள மதராஸ் அணுசக்தி மின் நிலையமானது இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே கட்டப்பட்ட அணுமின் நிலையமாகும்.
  • கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் தொடர்பாக அரசுகளுக்கிடையேயான ஒரு ஒப்பந்தமானது 1988 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ராஜீவ் காந்தி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மைக்கேல் கார்போச்சேவ் ஆகியோரால் இரண்டு அணு உலைகளை அமைப்பதற்காக கையெழுத்தானது.
  • இதன் கட்டுமானப் பணிகள் 2002 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று தொடங்கியது. இதன் முதல் அணு உலையானது 2013 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று முழு செயல்பாட்டு நிலையை அடைந்தது.
  • இதன் முதல் அணு உலையின் மின் உற்பத்தியானது 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று தொடங்கியது.

  • இந்தியாவின் முதல் அணு ஆயுதத் திட்டமானது 1967ல் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கப் பட்டது.
  • 1974 ஆம் ஆண்டின் மே 18 அன்று சிரிக்கும் புத்தர் என்றறியப்பட்ட தனது முதல் அணுக்கருப் பிளவு குண்டு வெடிப்புச் சோதனையை (பொக்ரான்-I) இந்தியா நிகழ்த்தியது.

  • முதல் அணுக்கரு இணைவு குண்டு வெடிப்புச் சோதனையை 1998 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள் (பொக்ரான் – 11) நிகழ்த்தப் பட்டது.
  • ஐந்து குண்டு வெடிப்புச் சோதனைகளை உள்ளடக்கிய இதில் முதல் அணு குண்டானது அணுக்கரு இணைவு அடிப்படையிலும் மீதமுள்ள நான்கு குண்டுகளும் அணுக் கரு பிளவு அடிப்படையிலும் செயல்படுபவை.
  • இந்தச் சோதனைகளானது 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் “சக்தி நடவடிக்கை” எனும் பெயரில் தொடங்கப்பட்டது.

  • இந்தச் சோதனைகளுக்குப் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.
  • 48 நாடுகளைக் கொண்ட அணு ஆற்றல் வழங்குவோர் குழுமமானது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் நாள் பிற நாடுகளிலிருந்து பொது உபயோகத்திற்கான அணு சக்தி தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் வாங்க அனுமதியளித்து ஒரு சிறப்புச் சலுகையை இந்தியாவிற்கு வழங்கியது.

  • இந்தியாவிற்கு அணு சக்தி ஏற்றுமதியை அனுமதிக்க அணு ஆற்றல் வழங்குவோர் குழுமம் ஒப்புக் கொண்ட பிறகு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் பொது உபயோக அணு சக்தி ஒப்பந்தத்தில் முதல் நாடாக பிரான்ஸ் கையொப்பமிட்டது.
  • இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதற்காக ஒரு முக்கியமான பொது உபயோக அணு சக்தி ஒப்பந்தத்தில் 2009 ஆம் ஆண்டு ஜீன் 15 அன்று இந்தியாவும் மங்கோலியாவும் கையெழுத்திட்டன.
  • இந்தியாவானது, இரு நாடுகளும் முன்னதாக ஒப்புக் கொண்ட ஒப்பந்தங்களைத் தவிர ரஷ்யாவுடன் ஒரு புதிய அணு சக்தி ஒப்பந்தத்தில் நவம்பர் 7, 2009 அன்று கையெழுத்திட்டது.
  • 2014 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒரு பொது உபயோக அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.
  • அணு சக்தியால் இயங்கும் தனது நீர்மூழ்கிக் கப்பலுக்கான அணு சக்தி ஆலையை வடிவமைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா உதவி இருக்கின்றது.
  • அணு சக்திப் பொருட்களின் கட்டமைப்பு பாதுகாப்பு மீதான ஒப்பந்தத்தை 2002 ஆம் ஆண்டு இந்தியா உறுதி செய்தது.
  • ஆனால் விரிவான சோதனை தடை ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையொப்பமிடவில்லை.
  • நாட்டில் புதிய அணு சக்தித் திட்டங்களை விரைவாக அமைப்பதற்கு வசதி செய்வதற்காக மத்திய அரசானது அணு சக்தித் திருத்த மசோதாவை 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
  • இந்த மசோதாவானது 1962 ஆம் ஆண்டின் அணு சக்திச் சட்டத்தை திருத்தம் செய்ய முயல்கிறது.
  • 2019 ஆம் ஆண்டின் மார்ச் 27 ஆம் தேதி அன்று இந்தியாவில் 6 அமெரிக்க அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையொப்பமிட்டன.
  • 2018 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவானது சுமார் 15 நாடுகளுடன் பொது உபயோக அணு சக்தி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் அனல் மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு அடுத்து மின் உற்பத்திக்க்கான 4 வது பெரிய ஆதாரமாக அணு சக்தி உள்ளது.

மூன்று நிலை அணு சக்தி திட்டம்

  • 1954 ஆம் ஆண்டு நவம்பரில் தேசிய வளர்ச்சிக்காக மூன்று கட்ட அணு சக்தித் திட்டத்தை “அமைதியான நோக்கங்களுக்காக அணு சக்தி மேம்பாடு” மீதான மாநாட்டில் ஹோமி பாபா சமர்ப்பித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 1958 ஆம் ஆண்டில் இந்திய அரசானது இந்த மூன்று நிலை
  • திட்டத்தை ஏற்றுக் கொண்டது.
  • இது தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள மோனோசைட் மணல்களில் காணப்படும் யுரேனியம் மற்றும் தோரியம் இருப்புகளைப் பயன்படுத்துவன் மூலம் நீண்ட கால அளவில் நாட்டின் எரிசக்தித் துறையில் சுதந்திரத்தை அல்லது தன்னிறைவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளவில் அறியப்பட்ட தோரியம் இருப்புகளில் சுமார் 25% என்ற அளவில் தோரிய இருப்பை இந்தியா கொண்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் உள்நாட்டு தொழில்நுட்பத்தினாலேயே உருவாக்கப்பட்ட முன்மாதிரி முதலுறு வேக ஈனுலையானது தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது.
  • இத்திட்டத்தின் முதல் நிலையில் இயற்கையான யுரேனிய எரிபொருளால் இயங்கும் அழுத்தப்பட்ட கனநீர் உலைகளானது மின் உற்பத்தியைச் செய்கின்றன. அதே நேரத்தில் புளுட்டோனியம்-239ஐ துணைப் பொருளாக அவை உருவாக்குகின்றன.

  • இரண்டாவது நிலையில், வேகமான ஈனுலைகளானது முதல் கட்டத்திலிருநது கிடைத்த எரிபொருள் மற்றும் இயற்கை யுரேனியத்தை மீண்டும் செயலாக்குவதன் மூலம் பெறப்பட்ட புளூட்டோனியம் 239க் கொண்டு தயாரிக்கப்பட்ட கலப்பு ஆக்சைடு எரிபொருளைப் பயன்படுத்தும்.
  • இப்போது புளூட்டோனியம்-239 ஆனது ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக அணுக்கருப் பிளவிற்கு உட்படுத்தப் படுகின்றது. அதே நேரத்தில் கலப்பு ஆக்சைடு எரிபொருளில் உள்ள யுரேனியம்-238 ஆனது கூடுதல் புளூட்டோனியம்-239 ஆக மாற்றப்படுகின்றது.
  • எனவே, இரண்டாம் நிலையில் வேகமான ஈனுலைகளானது ஆற்றலை உற்பத்தி செய்ய அவை எடுத்துக் கொள்ளும் எரிபொருள்களை விட அதிகமாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கையிருப்பு நிலையில் உள்ள புளூட்டோனியம் 239 ஆனது தோரியமாக கட்டமைக்கப் பட்டவுடன் அது உலையில் ஒரு மூடு பொருளாக அறிமுகப் படுத்தப்பட்டு மூன்றாம் நிலைக்குப் பயன்படுத்தப் படுவதற்காக யுரேனியம் – 233 ஆக அது மாற்றப் படலாம்.
  • மூன்றாம் நிலை உலை அல்லது மேம்பட்ட அணு சக்தி அமைப்பானது தோரியம் – 232 என்பதிலிருந்து யுரேனியம் - 233 வரை என்ற எரிபொருள் உலைகளின் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய தொடரை உள்ளடக்கியது.
  • இது அதன் ஆரம்பக் கட்ட எரிபொருள் நிரப்புதலுக்குப் பின்னர் மீண்டும் இயற்கையாகக் கிடைக்கும் தோரியத்தை மட்டுமே மீள்நிரப்புதல் செய்யக் கூடிய வகையில் கொள்கையளவிலான ஒரு வெப்ப ஈனுலையாகும்.
  • இந்த மூன்று நிலைத் திட்டத்தில் நேரடியான தோரியத்தின் பயன்பாட்டிற்கு நீண்ட கால தாமதம் இருப்பதால், நாடு இப்போது உள்ள மூன்று-நிலைத் திட்டத்திற்கு இணையாக தோரியத்தை நேரடியாகப் பயன்படுத்த அனுமதிக்கும் உலை வடிவமைப்புகளைத் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றது.

- - - - - - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்