TNPSC Thervupettagam

நவோதய பள்ளிக்கூடத் திட்டம்

February 11 , 2019 2116 days 1383 0
  • கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் ஜவாஹர் நவோதய வித்யாலயா பள்ளிக்கூடங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 49-க்கும் அதிகமான மாணவர்கள் நவோதய உறைவிடப் பள்ளிக்கூடங்களில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி அலையை எழுப்பியிருக்கிறது.
  • தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின, ஆதிவாசிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது பிரச்னையை மேலும் தீவிரமாக்குகிறது.

நவோதய பள்ளிக்கூடத் திட்டம் 

  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டமான நவோதய பள்ளிக்கூடத் திட்டம் 1986-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவோதய பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2012 முதல் இந்தப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில்99% மாணவர்களும், 12 வகுப்பில் 95% மாணவர்களும் வெற்றி அடைகிறார்கள் என்பதுடன் அவர்களில் பலரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மிகவும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களிலிருந்து சேர்த்துக் கொள்ளப்படும் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் ஜவாஹர் நவோதய உறைவிடப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் மாணவர்  தற்கொலைகள், தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருப்பதில் வியப்பில்லை.

2013 முதல்.....

  • 2013 முதல் நவோதய உறைவிடப் பள்ளிகளில் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தொடங்கியது என்றாலும், அது தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்தது 2015-இல்தான். தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தபோது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள நவோதய பள்ளிக்கூடங்களை நடத்தும் நவோதய வித்யாலய சமிதியிடம் தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது.
  • எல்லா நவோதய உறைவிடப் பள்ளிகளுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பி பிரச்னையின் காரணத்தை ஆய்வு செய்து தீர்வு காண நவோதய வித்யாலய சமிதி வலியுறுத்தியது.
  • மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து நவோதய உறைவிடப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள், உறைவிடக் கலாசாரத்துடன் ஒத்துப்போவதற்கு நேரம் பிடிக்கிறது. பெற்றோரையும் சுற்றத்தாரையும் பிரிந்து வாழ்வதும், புதிய சூழலும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதில் வியப்பில்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளும், பெற்றோரைச் சந்திக்க முடியாததால் ஏற்படும் மனக் கவலையும்கூட அந்த மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கின்றன.

மாணவர்கள் தற்கொலை

  • அந்த மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்க நவோதய பள்ளிக்கூடங்களில் தனியாக அமைப்பு ஏதும் இல்லாமல் இருப்பது மாணவர்கள் தற்கொலைக்கு முக்கியமான காரணம் என்று கருதப்படுகிறது. மாணவர்களிடம் விபரீதமான போக்கு காணப்படுவது, அவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பது கண்டறியப்படுவது ஆகியவற்றை அப்போதைக்கு அப்போது கண்காணித்து ஆலோசனை வழங்கும் முறை நவோதய பள்ளிகளில் இல்லை என்கிற உண்மையை இப்போதுதான் நவோதய வித்யாலய சமிதி உணர முற்பட்டிருக்கிறது.
  • நவோதய வித்யாலய சமிதியின் அறிவுறுத்தல்களும் கட்டளைகளும் எழுத்தில் இருக்கின்றனவே தவிர, செயலில் இருப்பதாகத் தெரியவில்லை. எந்தவொரு நவோதய உறைவிடப் பள்ளியிலும் முறையாகப் பயிற்சியுடன் கூடிய மனநல ஆலோசகர்கள் இல்லை.
  • மாணவர்களின் உணர்வுபூர்வமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் போக்கு பள்ளியின் தலைமையாசிரியருக்கும் உறைவிடக் கண்காணிப்பாளருக்கும் தரப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட 49 மாணவர் தற்கொலைகளில் 32 பேரின் தற்கொலைக்கு பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் உறைவிடக் கண்காணிப்பாளர்களும் மனம் சோர்ந்து  போயிருக்கிறார்கள்.

மாணவர்களின் மனநிலை

  • கல்வி கற்பித்தல் அல்லாத வேறு பல பொறுப்புகளை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் மனநிலை குறித்த பிரச்னைகளைக் கையாள முடியாது என்கிற அடிப்படை உண்மையை நவோதய வித்யாலய சமிதி உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாணவர்களிடம் காணப்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கும் அவர்களது தற்கொலைப் போக்கை கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கி மன மாற்றம் செய்வதற்கும் போதிய பயிற்சி உள்ளவர்கள் இருந்தால் மட்டுமே பிரச்னையை ஓரளவுக்குக் கையாள முடியும்.
  • இந்தியாவைப் பொருத்தவரை பெருமளவில் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக, பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டிருந்தாலும் மாணவர்களுடைய உளவியல் பிரச்னைகள் குறித்த புரிதல் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. உறைவிடப் பள்ளிகள் என்பதல்லாமல், சாதாரணமாகவே குழந்தைகள் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் காணப்படும் உளவியல் பிரச்னைகளும் அவர்களிடம் காணப்படும் தன்னம்பிக்கையின்மை, தற்கொலை போக்கு ஆகியவையும் அதிகரித்து வருகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
  • இந்தியாவில் 4 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 12% மாணவர்கள் உளவியல் பாதிப்புடன் காணப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்பதுதான் நிலைமை என்னும்போது நமது கல்வி முறையிலும் வளர்ப்பு முறையிலும் எங்கேயோ தவறு காணப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்