- பெரிய எதிர்பார்ப்புகளின் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையைப் பெரும் சவால்களின் மத்தியில் தாக்கல்செய்திருக்கிறார், நாட்டின் முதல் முழு நேரப் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். வரிச்சலுகைகள் தாராளமாக்கப்படும், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு நேரடி வாய்ப்பளிக்கும் பெரும் திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் நிறைவேறவில்லை என்றபோதிலும், நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்வதையும் பொருளாதாரம் வளர்வதற்கான வழிகளைத் தேர்ந்தெடுத்திருப்பதுமான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல்செய்திருக்கிறார் நிர்மலா. வங்கிகளுக்கு மறுமுதலீடு கிடைக்க ரூ.70,000 கோடியை அளிப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு, இந்த பட்ஜெட்டின் சிறப்பம்சம்; வரவேற்புக்குரியது இது.
வங்கியல்லாத நிதித் துறையால்
- வங்கியல்லாத நிதித் துறையால் யாருக்கும் கடன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது; அது மட்டுமின்றி நிதிச் சந்தையிலும் அவற்றின் மீது நம்பிக்கையிழப்பு ஏற்பட்டது. கடன் கேட்போருக்குத் தர முடியாமல் ரொக்கத் தட்டுப்பாடு, வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை, திறமையற்ற நிர்வாகம் மூன்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களை வாட்டுவதை அரசு முழுதாக உணர்ந்திருப்பதை இப்போதைய அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன. வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் உதவிக்காக ரூ.1 லட்சம் கோடியை அரசுத் துறை வங்கிகள் வழங்கவுள்ளன. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் தரும் கடனுக்கு, ‘ஒரே ஒரு முறை மட்டும்’ என்ற நிபந்தனையுடன் பிணைதாரராக அதுவும் முதல் இழப்பில் 10% அளவை ஈடுகட்ட முன்வந்திருக்கிறது அரசு.
- வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் அதிக சேதம் விளைவித்தவை வீடு கட்ட கடன் தரும் வங்கிகள்தான். எனவே, அவற்றையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாராக் கடன்கள் மீதான வட்டித் தொகைக்கு வரி விதிப்பதில்லை என்று அரசு வங்கிகள் விஷயத்தில் காட்டும் சலுகை, இனி வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும் விரிவடைகிறது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குப் பணம் மட்டுமே வர்த்தகத்துக்கான மூலதனம். எனவே, அதைக் கடன் பத்திரங்களுக்கு ஈடாகத் தர வேண்டிய கையிருப்பாகக் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறார். இதனால், அந்நிறுவனங்களால் அதிகம் கடன் வழங்க முடியும்.
தவறவிடாதீர்
- ஒதுக்கீடுகளில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு பெருத்துக்கொண்டேபோகும் நிலையில், கல்வி, சுகாதாரம் போன்ற சமூக அடித்தளத் துறைகளின் மேம்பாடு; விவசாயிகளின் நலன்; தலித்துகள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள்; ரயில்வே துறை விரிவாக்கம் போன்ற சாதாரண மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் துறைகள் விசேஷ கவனத்தையோ உரிய ஒதுக்கீட்டையோ பெறாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்று, அதன் மூலம் ரூ.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதியல்லாத அரசுத் துறை நிறுவனத்தில் அரசின் பங்குகளின் அளவை 51% என்ற அளவுக்கும் கீழே கொண்டுசெல்லவும் அரசு தயார் என்று கோடி காட்டப்பட்டுள்ள இடம், பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்பில் அரசுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
- பெருநிறுவனங்களைக் குஷிப்படுத்தும் வகையில், ரூ.400 கோடி வரையுள்ள நிறுவனங்கள் 25% வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. முன்னதாக, ரூ.250 கோடி வரையிலான விற்றுமுதலைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த 25% நிறுவன வரிவிதிப்பு வரம்புக்குள் இருந்தன. அரசின் இந்த முடிவின் மூலம் 3% தொழில் நிறுவனங்கள் 25% வரிவிதிப்பு வரையறைக்குள் வந்துவிடும் என்று தெரிகிறது.
சீர்திருத்தங்கள்
- பெருநிறுவனங்கள் விஷயத்தில் இந்த அளவுக்குத் தயாளம் காட்டும் அரசு, சாதாரண மக்களுக்கான வரிவிதிப்பில் என்ன அக்கறையைக் காட்டுகிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமே ஏற்படுகிறது. ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் கொண்டோரை வரிவிதிப்புக்கு வெளியே கொண்டுசெல்வதும், ரூ.30 லட்சம் வரையிலான வருவாய் கொண்டோரை 20% வரிவிதிப்புக்குள்ளான வரையறைக்குள் கொண்டுவருவதும் அரசின் கவனம் கோரி நிற்கும் முக்கியமான சீர்திருத்தங்கள். மாதச் சம்பளக்காரர்களை வாட்டுவதற்கு மாற்றாக, எல்லா தரப்பினரையும் வருமான வரி வட்டத்துக்குள் கொண்டுவருவதற்கான பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாததும் பெரும் குறை.
- நாடு முழுவதிலும் எந்தவிதப் பயன்பாட்டுக்கும் ‘ஆதார்’ மட்டுமே தனி அடையாளமாக இருக்கும் என்பதை வருமான வரி செலுத்த ‘பான்’ எண் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ‘ஆதார்’ எண்ணைக் குறிப்பிட்டால் போதும் என்பதன் வாயிலாக அரசு உணர்த்தியிருக்கிறது. வருமான வரிக் கணக்குகளை ஆராயும் அதிகாரிகள் யாரென்று மக்களுக்கும், யாருடைய கணக்கு ஆராயப்படுகிறது என்று அதிகாரிகளுக்கும் தெரியாத நடைமுறை கையாளப்படவிருக்கிறது. அதிகாரிகளுடன் வரி ஏய்ப்பாளர்கள் கள்ளக்கூட்டு வைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படும் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.
- எப்படியும் நாட்டின் நிதி நிலைமையைச் சீரமைக்கும் ஆர்வமும் அக்கறையும் பட்ஜெட்டில் வெளிப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் உரையில் தன்னுடைய தாய்மொழியிலிருந்து பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை வரிவிதிப்புக்கான அறமாகக் குறிப்பிட்டார் நிதியமைச்சர் நிர்மலா. இந்த அரசு அதனையே விழுமியமாகக் கொண்டு நடக்குமானால் நாட்டுக்கு நல்லது.
நன்றி: இந்து தமிழ் திசை (08-07-2019)