- மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதியத் துறைச் செயலர் சூரிய நாராயண் ஜா கடந்த ஜூன் 20-ஆம் தேதியன்று வெளியிட்டுள்ள உத்தரவு, மத்திய அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய அரசு ஊழியர்கள் குறித்த அடிப்படை விதி 1972 பிரிவு 56 (ஜே)வைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த உத்தரவு, 30 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த அல்லது 55 வயதை எட்டியுள்ள மத்திய அரசு மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள் அனைவரின் பணித் திறனையும் மாதா மாதம் ஆய்வுக்கு உட்படுத்தி, பணித்திறன் இல்லாத ஊழியர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி கூறுகிறது.
மேற்படி விதிமுறை நீண்ட காலமாக உள்ளதுதான் என்றபோதிலும், தற்போது அந்த விதியைத் தீவிரமாக மத்திய அரசு கையில் எடுத்துள்ளது, கவலையை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசுப் பணிகளில்….
- தற்போது மத்திய அரசுப் பணிகளில் சுமார் 47 லட்சம் பேரும், ரயில்வே துறையில் சுமார் 12 லட்சம் பேரும் உள்ளனர். பி.எஸ்.என்.எல்., பி.எச்.இ.எல். (பெல்) போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், மேற்படி உத்தரவை நடைமுறைப்படுத்தினால் தெற்கு ரயில்வேயில் மட்டும் சுமார் 15,000 பேர் வேலை இழந்து, ரயில்வே சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கப்படும் ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்பதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன என்பது உண்மைதான். அதேநேரம் வேறு சில உண்மைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.
- அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் போன்றவை வெளிப்படையானவை. இவை அதிகரிக்கும்போதெல்லாம், அவர்களுடைய வாங்கும் சக்தி அதிகரித்து, அதன் விளைவாக நமது நாட்டின் சந்தைப் பொருளாதாரம் வளர்ச்சி பெறுகிறது. மேலும் அதிகரிக்கும் ஊதியத்துக்கு ஏற்ப, வருமான வரி வசூலும் அதிகரிக்கிறது.
நான்காம் நிலை ஊழியர்
- குரூப் டி எனப்படும் நான்காம் நிலை ஊழியர் (பியூன் உள்ளிட்டவர்கள்) வருமான வரி செலுத்தும் நிலைமையை இதற்கு முன்னால் நாம் கனவுகூடக் கண்டிருக்க மாட்டோம்.
மேற்படி வருமான வரியிலிருந்து சலுகை பெறுவதற்கான முதலீடுகளைச் செய்யும் ஊழியர்களால் ஒருபுறம் சேமிப்பு அதிகரிப்பதும் கண்கூடு. மேலும் அரசு ஊழியர்கள் பெறும் வீட்டுக் கடன்களின் மூலம் கட்டுமானத் துறையும் வளர்ச்சி பெறுகிறது. இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படிகள் (ஓய்வூதியம் உள்பட) அரசின் நேரடி வரிவசூல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
- பொதுவாகவே மக்களின் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதன் காரணமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை தரும் நிதிச் சுமை அதிகமாக உள்ளது. அதேநேரம், மூத்த குடிமக்களின் கெளரவமான வாழ்க்கை அதையே நம்பி இருக்கிறது. எனவே, இந்தச் செலவை மத்திய அரசு ஒரு சுமையாகப் பார்க்கக் கூடாது.
- மேலும், இந்தப் புத்தாயிரம் ஆண்டுகளில் அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நீட்டிக்கப் படாததால், ஒருசில பத்தாண்டுகளுக்குப் பிறகு அரசின் ஓய்வூதியச் செலவு கணிசமாகக் குறையவே செய்யும்.
- இந்த நிலையில், அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் சென்று சேர்க்கும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வெறும் செலவாகக் கருதாமல், முதலீடாகக் கருதுவதே சரியாக இருக்கும்.
- அப்படியெனில், திறனற்ற ஊழியர்களைத் தண்டிக்கவே கூடாதா என்ற கேள்வி எழலாம். லஞ்சம், ஊழல் போன்றவற்றில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை தேவைதான். அதனை யாரும் மறுக்கப் போவதில்லை.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- ஆனால், திறமையின்மை, அலட்சியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஊழியர்களை எச்சரிப்பதுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் மனவள ஆலோசனை வழங்குவதன் மூலம் இந்தக் குறைபாடுகளைக் களையலாம்.
மாறாக, கட்டாய ஓய்வு அளிப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தொடர்புடைய ஊழியர்களுடைய வாரிசுகளின் திருமணம், மேற்படிப்பு போன்றவற்றையும் இது பாதிக்கும். இத்தகைய பணித்திறன் ஆய்வும் கட்டாய ஓய்வும் தொடர் நடவடிக்கையாகும்போது, நல்ல பணித்திறனுடன் இருக்கும் மூத்த ஊழியர்களுக்கும் ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- மேலும், தனக்குப் பிடிக்காத ஊழியர்களைக் கட்டாய ஓய்வில் அனுப்பிவிடுவதாகக் கூறி, சில மேலதிகாரிகள் மிரட்டி மனஉளைச்சல் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புண்டு. தனியார் துறை வேலைகளில் வேலைக்கு எடு; வேண்டாம் என்றால் நீக்கிவிடு என்ற நடைமுறை உள்ளது. தற்போது, அரசுத் துறை நிறுவனங்களிலும் அவுட்சோர்சிங் என்ற முறையில் ஒப்பந்தப் பணியாளர்களைப் பயன்படுத்தும் வழக்கம் நிலைபெற்றுள்ளது.
- ஆசிரியர் பணிக்குத் தேர்வாகி, பணியில் அமர்ந்த பிறகு சாவகாசமாக அறிமுகப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வில் (டெட்) தேர்வு பெற முடியாத 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை அண்மையில் உருவாகியுள்ளது.
- கடுமையான வேலைவாய்ப்பின்மை நிலவும் நமது நாட்டில், அரசு வேலைகளில் மட்டுமே நிரந்தரத் தன்மைக்கு ஓர் உத்தரவாதம் இருந்து வருகிறது. அதைப் பறிக்க முற்படுவது நியாயமில்லை.
நன்றி: தினமணி (05-07-2019)