TNPSC Thervupettagam

நிலத்தடிநீர் சுரண்டலைத் தடுக்குமா வரிவிதிப்பு?

March 4 , 2019 2123 days 1179 0
  • நிலத்தடிநீரை வரம்பு மீறி உறிஞ்சி வற்றச் செய்வதைத் தடுக்கவும், நிலத்தடிநீர் பயன்பாட்டுக்கு ஒழுங்காற்று முறைமை வலுவாக ஏற்படுத்தவும் ‘தண்ணீர் காப்புக் கட்டணம்’ விதிக்க உத்தேசித்திருக்கிறது மத்திய அரசு.
  • ராணுவத் தேவை, விவசாயத் தேவை, வீடுகளின் குடிநீர்த் தேவை ஆகியவற்றுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும் அது முடிவு செய்திருக்கிறது.
  • நீர்வளத் துறை அமைச்சகம் இதற்கான வரைவு வழிகாட்டு நெறிகளைத் தயாரித்துள்ளது. தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், அடித்தளக் கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள், அலுவலகக் கட்டிடங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படும். முக்கியத்துவம், பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு கன மீட்டருக்கு ஒரு ரூபாயில் தொடங்கி, நூறு ரூபாய் வரையில் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வேறுபடும்.
பின்னணி என்ன?
  • நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பது வரம்பில்லாமல் போவதால் நிலத்தடிநீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் எவருக்குமே தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்ற எச்சரிக்கைகளைத் தொடர்ந்தும், மத்திய நீர்வள ஆணையம், மத்திய நிலத்தடிநீர் ஆணையம் ஆகியவற்றைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலும் இந்த உத்தேச முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
  • நாட்டில் உள்ள வட்டாரங்களில் கிட்டத்தட்ட 32%-ல் நிலத்தடிநீர் மிக ஆழமான இடத்துக்குச் சென்றுவிட்டது அல்லது அடியோடு வறண்டுவிட்டது என்று மத்திய நிலத்தடிநீர் வாரியம் அளித்த அறிக்கையும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
  • உணவு தானிய விளைச்சலுக்கும், வறுமை ஒழிப்புக்கும் நிலத்தடிநீர்தான் பெரிதும் கைகொடுக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயத்துக்கான நீர் நிலத்தடியிலிருந்துதான் அதிகம் பெறப்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் பாசனப் பரப்பில் 65%-க்கும் மேல் நிலத்தடிநீர் மூலம்தான் நடக்கிறது. ஆற்றுநீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் நிலங்களைவிட, நிலத்தடிநீரைப் பயன்படுத்தும் நிலங்களில் உற்பத்தித் திறன் இரண்டு மடங்காக இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
யார், எவ்வளவு உறிஞ்சுகின்றனர்?
  • நிலத்தடிநீரை உறிஞ்சுவதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது இந்தியா. ஆண்டுக்கு 250 கன கிலோ மீட்டர்கள் உறிஞ்சப்படுகிறது. அமெரிக்காவைவிட இது இரண்டு மடங்கு அதிகம். ஆண்டுதோறும் 44,700 கோடி கன மீட்டர் அளவுக்கு மீண்டும் நிரப்பும் அளவுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.
  • அதில் 22,800 கோடி கன மீட்டர் பாசனத்துக்கும் 2,500 கோடி கன மீட்டர் வீடுகள், குடிநீர், தொழிற்சாலைத் தேவைகள் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • சிறு பாசனம் தொடர்பாக 2017-ல் எடுக்கப்பட்ட ஐந்தாவது கணக்கெடுப்பில், நாட்டின் 661 மாவட்டங்களில் தோண்டப்பட்ட திறந்தவெளிக் கிணறுகள், குறுகிய குழாய்க் கிணறுகள் 130 லட்சமும், ஆழ்துளைக் கிணறுகள் 50 லட்சமும் இருப்பதாகவும் அவை முறையே 380 லட்சம் ஹெக்டேர், 230 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன நீர் அளிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
  • தண்ணீர் வளம் தொடர்பாக நிலைக்குழு அளித்துள்ள 23-வது அறிக்கை, வணிகரீதியாகத் தொழில் நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் ஏற்படும் சமூக-பொருளாதார விளைவுகளை (2017-18) சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டிலுள்ள 17.14 லட்சம் குடியிருப்புகளில் 85% கிராமப்புறக் குடிநீர்த் திட்டங்களுக்குத் தண்ணீர் வழங்குவது நிலத்தடிநீர்தான்.
  • பாட்டில்களில் குடிநீரை அடைத்து விற்க வணிக நிறுவனங்களுக்கு 7,426 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தண்ணீருக்குத் தேவை அதிகம் உள்ள ஆந்திரம், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
அதீதப் பயன்பாடு
  • பன்னாட்டு நிறுவனங்களில் பல, அன்றாடம் அனுமதிக்கப்பட்டுள்ள 2.4 லட்சம் லிட்டர்களுக்கும் அதிகமாக, ஒரு நாளைக்கு 6.5 லட்சம் லிட்டர் முதல் 15 லட்சம் லிட்டர் வரையில் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகின்றன.
  • பெரும்பாலான பெரு நகரங்களில் குடிநீர் திருட்டில் ஈடுபடும் மாஃபியா கும்பல்கள் சட்டவிரோதமாக மட்டும் ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீரை உறிஞ்சி விற்கின்றன.
  • குடிநீரை உறிஞ்சி எடுக்கும் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால் நிலைமை மோசமாகிவிட்டது. ஆண்டுக்கு 0.3 மீட்டர் என்ற அளவில் நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதாக ‘நாசா’ தெரிவிக்கிறது. நிலத்தடிநீர் இருப்பைப் பொறுத்தவரையில் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் நிலைமை மிக மோசமாகிவிட்டதாக மத்திய நிலத்தடிநீர் வாரியத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
  • 2020-ல் டெல்லி, பெங்களூரு, சென்னை உட்பட 21 பெரிய நகரங்களில் நிலத்தடிநீர் முழுவதுமாக வற்றிவிடப் போகிறது, தண்ணீருக்குப் பெரிய போராட்டங்கள் வெடிக்கப் போகின்றன என்று தண்ணீர் வளத்துக்கான நிலைக்குழு தனது 23-வது (2017-18) அறிக்கையில் அச்சம் தெரிவித்திருக்கிறது. இது குறைந்தபட்சம் 10 கோடி பேரை நேரடியாக பாதிக்கவிருக்கிறது. ‘அனைத்து வகை தண்ணீர்வள நிர்வாகக் குறியீட்டெண்’ தொடர்பாக நிதி ஆயோக் அளித்துள்ள அறிக்கை (2018), நிலத்தடிநீர் கிணறுகளில் 54% வளம் குன்றிவிட்டது என்று தெரிவிக்கிறது.
  • நிலத்தடிநீர் வளத்தைப் பெருக்குவதில் 50%-க்கும் குறைவான அளவில்தான் பெரும்பாலான மாநிலங்களால் செயல்பட முடிந்திருக்கிறது. நிலைமை இப்படியிருக்கும்போது வரம்பில்லாமல் நிலத்தடிநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தால் எதிர்காலம் என்னவாகும்?
மீள என்ன வழி?
  • இப்போதுள்ள நிலையை மாற்ற கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம். நிலத்தடிநீருக்கு உரிய விலையை நிர்ணயிப்பதுடன், விவசாயத்துக்கு நிலத்தடிநீரை மிகுந்த கவனமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த கொள்கைகளையும் வகுக்க வேண்டும்.
  • தெளிப்பு நீர்ப்பாசனம், சொட்டு நீர்ப்பாசனம் ஆகிய முறைகளைக் கையாள்வதன் மூலம், தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்குக்கூட நிலத்தடிநீர் பயன்பாட்டு அளவை 50% வரையில் குறைக்கலாம்.
  • ‘ஒவ்வொரு துளிக்கும் அதிக மணிகள்’ என்ற கருத்தை சுவாமிநாதன் குழு அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது. நிலத்தடிநீர் நிர்வாகத்தில் சமூகம் சார்ந்த மேலாண்மை ஏற்பாடே அவசியம்.
  • நிலத்தடிநீர் இருப்பு, அதைச் சேமிக்க வேண்டியதன் அவசியம், அதைப் பெருக்குவதற்கான வழிகள், சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்பிப்பதன் மூலமும் மக்களை இணைத்தும் மேலாண்மையை மேம்படுத்தலாம். நிலத்தடிநீரைப் பயன்படுத்துவோர் சங்கங்களை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். நீரை மேலாண்மை செய்வது, விநியோகிப்பது ஆகிய பொறுப்புகளை சங்கங்களிடம் விட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்