நீடித்த வளர்ச்சி இலக்குகள்
- - - - - - - - - - - -
- எதிர்கால சந்ததியினர் தங்களின் தேவைகளை தாங்களே சுயமாக பூர்த்தி செய்து கொண்டிடும் திறனை சமரசப்படுத்திடாமல் நிகழ்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வ மேம்பாட்டு நடவடிக்கைகளே நீடித்த மேம்பாடு (Sustainable Development) எனப்படும்.
- உலக மக்களுக்காகவும், புவியின் நலனிற்காகவும், உள்ளடங்குத் தன்மையுடைய, நீடித்த, மீட்சித் திறனுடைய எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு திடமான முயற்சிகளை மேற்கொள்வதனை நோக்கி நீடித்த மேம்பாடானது உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
- நீடித்த மேம்பாட்டை அடைவதற்கு மூன்று முக்கிய கூறுகளில் ஒத்திசைவை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
- பொருளாதார வளர்ச்சி
- சமூக உள்ளடக்கம்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- ஒன்றோடு ஒன்று உட்தொடர்புடைய இம்மூன்று கூறுகளும், தனி மனிதர்கள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்விற்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் நோக்கங்கள்
- ”நமது உலகை மாற்றியமைத்தல்; நீடித்த வளர்ச்சிக்கான 2030-ஆம் ஆண்டு வரையிலான திட்ட நிரல்கள்“ எனும் தலைப்புடைய புதிய நீடித்த வளர்ச்சி இலக்குகளின் (Sustainable Development Goals) நிரல்களை 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற நீடித்த வளர்ச்சி மாநாட்டில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
- நீடித்த வளர்ச்சி இலக்குகளின் நிரலானது 17 இலக்குகளையும் (Goals), 169 குறிக்கோள்களையும் (target) கொண்டது.
- அடுத்த 15 ஆண்டுகளில் (2015-2030) மிகவும் நீடித்தத் தன்மையுடைய உலகை கட்டமைப்பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் தேவையான செயற் நடவடிக்கைகளுக்கு உந்துதல் அளிப்பதே இந்த உலகளாவிய, ஒருங்கிணைந்த, மாற்றத்தை கொணரும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிரலின் நோக்கமாகும்.
- 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டு காலத்தின் மேம்பாட்டிற்கு வழிகாட்டுவதற்கென 2000ஆம் கொண்டு வரப்பட்ட புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகளின் (Millenium Development Goals) அடைதலில் உண்டான சாதனைகளின் மேல் நீடித்த வளர்ச்சி இலக்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- நீடித்த வளர்ச்சி இலக்குகளின் இலக்குகளானது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தால் (UNDP – United Nations Development Programme) நிர்ணயிக்கப்பட்டவை.
SDG காலம்
- 2030ல் முழுவதும் அடைவதற்காக இலக்கிடப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகளில், இலக்கின் மீதான செயல் நடவடிக்கைகள், 2016 ஜனவரி 7 துவங்கி, 2030 டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்படும்.
SDG-ம் சட்ட பிணைப்பும்
- SDG-ஐ அடைதலானது உலக நாடுகளுக்கு சட்டப் பிணைப்பற்றதாகும்.
- உலக நாடுகள் தன்னளவில் மேற்கொள்ளும் நீடித்த மேம்பாட்டு திட்டங்கள், கொள்கைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பொருத்து நாடுகளின் தனிப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளின் அமலாக்கமும், அவற்றை அடைவதிலுள்ள வெற்றியும் அமையும்.
- இருப்பினும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு நாடுகள் தனிப்பட்ட அளவில் தேசிய மேம்பாட்டு கட்டமைப்பை ஏற்படுத்தி அவற்றிற்கு உரிமை கொண்டிடல் வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் அவசியம்
- போர், வன்முறை மோதல்களால் சிதிலமடைந்த, பலவீனமான நாடுகள் அதிகபட்ச வறுமை அளவை அனுபவித்து வரும் வேளையில் உலகில் 795 மில்லியன் மக்கள் பட்டினியுடனும், 800 மில்லியன் மக்கள் தீவிர வறுமையுடனும் தம் நாட்களை கழித்து வருகின்றனர்.
- 2008 முதல் 2012-க்கு இடைப்பட்ட காலத்தில் இயற்கைப் பேரிடர்களினால் சுமார் 144 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த குடிமை இடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
- உலக மக்கள் தொகையில் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ்ந்து வருகின்றனர். இது மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- 946 மில்லியன் மக்கள் இன்னும் திறந்த வெளியில் மலம் கழித்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
- பள்ளிகளில் பெண் குழந்தைகளின் வருகைப் பதிவு இருப்பினும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரிதிநிதித்துவம் முன்பைக் காட்டிலும் பெருமளவு இருப்பினும் தற்போது தொடர்ந்து பாலின சமமின்மை நிலையே நிலவி வருகின்றது.
- உலகில் சுமார் 57 மில்லியன் குழந்தைகள் அவர்களின் தொடக்க கல்விக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலுள்ளனர்.
17 நீடித்த வளர்ச்சி இலக்குகள்
- உலகின் அனைத்து இடங்களிலும், அனைத்து வடிவிலான வறுமைகளையும் ஒழித்தல்.
- பட்டினியைப் போக்குதல், நீடித்த வேளாண்மையை ஊக்குவித்தல், மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பை அடைதல்.
- அனைத்து வயதினரினுடைய ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்தல் மற்றும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல்.
- அனைவருக்கும் உள்ளடக்குத் தன்மையுடைய, சமநிலையுடைய, நியாயமான, தரமுடைய கல்வியை உறுதி செய்தல்.
- அனைவருக்குமான வாழ்நாள் முழுவதுமான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
- பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் அதிகாரமளித்தல்.
- அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் அவற்றின் நீடித்த மேலாண்மையையும் உறுதி செய்தல்.
- அனைவரும் மலிவான, நம்பகமான, நீடித்த, நவீன கால ஆற்றல்களை அணுகுவதை உறுதி செய்தல்.
- நீடித்த பொருளாதார வளர்ச்சி , உள்ளடக்குத் தன்மையுடைய, , முழுவதுமான, ஆக்கப்பூர்வ வேலை வாய்ப்பு மற்றும் கண்ணியமான வேலை ஆகியவை அனைவருக்கும் கிடைக்க அவற்றை ஊக்குவித்தல்.
- மீட்சித் திறமுடைய உள்கட்டமைப்பை கட்டமைத்தல், நீடித்த மற்றும் உள்ளடக்குத் தன்மையுடைய தொழிற்மயமாதலை ஊக்குவித்தல், புத்தாக்கத்தை வளர்த்தல்.
- நாடுகளுக்கிடையேயும், நாட்டினிற்குள்ளும் நிலவும் சமத்துவமின்மையை குறைத்தல்.
- உள்ளடங்குத் தன்மை, பாதுகாப்பு, மீட்சித்திறம் மற்றும் நீடித்தத் தன்மையுடையவையாய் நகரங்கள் மற்றும் மனித குடியேற்றங்களை உருவாக்குதல்.
- நீடித்த நுகர்வு மற்றும் நீடித்த உற்பத்தி முறைகளை உறுதி செய்தல்.
- கடல்கள், பெருங்கடல்கள் மற்றும் கடல் வளங்களை பாதுகாத்தல், அவற்றை நீடித்த முறையில் பயன்படுத்தல்.
- நீடித்த முறையில் காடுகளை நிர்வகித்தல், பாலைவனமயமாகலை தடுத்தல்,பல்லுயிர் பெருக்க அழிவு மற்றும் நிலச் சீர்கேட்டை தடுத்து அவற்றை மீட்டெடுத்தல்.
- நியாயமான, அமைதியான, உள்ளடங்கிய சமூகத்தை மேம்படுத்தல்.
- நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச ஒற்றுமைக்கு புத்துயிர் அளித்தல்.
நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) பங்கு
- MAPS அணுகுமுறையின் மூலம் 3 வேறுபட்ட வழிகளில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டமானது அனைத்து உலக நாடுகளுக்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஆதரவளித்து வருகிறது.
- MAPS அணுகுமுறையாவன
- பிரதானப்படுத்துதல் (Main streaming)
- விரைவுப்படுத்துதல் (Acceleration)
- கொள்கை ரீதியிலான ஆதரவு (Policy Support)
- தங்களின் தேசிய மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் புதிய உலகளாவிய நீடித்த வளர்ச்சி இலக்குகளை உலக நாடுகள் உட்புகுத்திட அவற்றிற்கு ஆதரவு அளித்தல்.
- நீடித்த வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளித்தல்.
- நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை நிபுணத்துவத்தை உருவாக்குதல்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP)
- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பானது (UNDP) ஆனது ஐநாவின் ஓர் உலகளாவிய வளர்ச்சி மேம்படுத்து அமைப்பாகும்.
- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது நீடித்த வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து உள்ளது.
- நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்முறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமானது உலக நாடுகளுக்கு உதவி புரிகின்றது.
- ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டமானது 170 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் எதிர்கொள்ளக்கூடிய வளர்ச்சி குறித்த சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் உலக நாடுகளுடன் இணைந்து இது பணியாற்றுகிறது.
- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமானது நாடுகளின் வளர்ச்சிக்காக மூன்று முக்கியப் பகுதிகளில் தீர்வுகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த உதவுகிறது.
- நீடித்த வளர்ச்சி
- ஜனநாயக ஆளுகை மற்றும் அமைதிக்கட்டமைப்பு
- பருவநிலை மற்றும் பேரிடர் மீள் கட்டமைப்பு
- இதன் தலைமையிடம் நியூயார்க் நகரம் ஆகும். ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை உறுப்பு நாடுகள் தாமாக முன்வந்து வழங்குகின்றன.
- இந்த நிறுவனமானது 177 நாடுகளில் இயங்கி வருகிறது. இது உள்ளூர் வளத்தைப் பெருக்கும் வகையிலும் அரசாங்கம் எதிர்கொள்ளக்கூடிய வளர்ச்சி குறித்த சவால்களை சரிசெய்யும் வகையிலும் உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
- நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்கினை அடைவதற்கு உலகளாவிய அளவில் இது உதவுகிறது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் வெளியிடப்படும் அறிக்கைகள்
- மனித வளர்ச்சிக் குறியீடு
- பாலின சமத்துவமின்மை குறியீடு
இந்தியா மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள்
- நீடித்த இலக்குகளின் மீதான இந்தியாவின் செயல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நிதி ஆயோக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - - - -