- ஆரியூர் ஏரியை எவர் பராமரித்து சுத்தம் செய்து அதனை நீர் வற்றாது பார்த்துக் கொள்கின்றாரோ அவரது காலடி மண்ணைத் தன் தலைமேல் தாங்குவேன் என்கிறார் ஆசிய கண்டத்தின் பெரும்பகுதியைத் தன் வீரத்தால் கட்டி ஆண்ட பாரத தேசத்தின் ஒப்பற்ற மன்னர் ராஜராஜ சோழன்.
- இந்தச் செய்தியை ஆரியூர் ஏரியில் நிற்கும் குமிழித்தூம்பு கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ஏரியில் நீர்மட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டும் அளவுகோலாக ஏரிகளில் குமிழித்தூம்பு நிறுவப்பட்டிருந்தது.
விவசாயம்
- விவசாயம் என்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அதற்கான நீர் மேலாண்மையையும் நம் முன்னோர் எப்படிக் கையாண்டனர் என்பதற்கு உதாரணமாய் கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது புதுக்கோட்டை மாவட்டம், ஆரியூர் ஏரியின் குமிழித்தூம்பு.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதேசத்தில் நீர் ஆதாரத்தைக் காப்பது தியாகத்தின் செயலாகப் பார்க்கப்பட்ட அதே தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் குடிநீர்த் தட்டுப்பாடு.
- குடங்களோடு மக்கள் போராட்டம் நடத்துவது அல்லது குடிநீருக்காக நீண்ட தூரம் பயணிப்பதைப் பார்க்கிறோம். இத்தகைய நீர்த் தட்டுப்பாடு எப்படி, ஏன் ஏற்பட்டது? எந்த ஒரு விளைவுக்கும் உரிய காரணத்தை அறிந்து அதனை நிவர்த்தி செய்யாத வரை சிக்கல்களைத் தீர்க்க முடியாது.
- தமிழகத்தில் காணப்படும் ஏரிகள், குளங்கள் அனைத்தும் ஏறத்தாழ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவையே. மக்களாட்சி காலம் தொடங்கிய பிறகு ஏரிகள், குளங்களின் எண்ணிக்கை அளவில் குறைந்திருக்கிறதே தவிர புதிதாக ஏற்படுத்தப்படவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்ககளில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 870 ஏரிகள், குளங்கள் இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 695 ஏரிகள், குளங்கள் காணப்படுகின்றன. இவை தவிர உள்ளாட்சிக்கு சொந்தமான 1,200 ஏரிகள் குளங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 450-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கால்வாய் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றில்
- காவிரி ஆற்றில் எப்போதெல்லாம் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ அப்போது இந்தக் கால்வாய்கள் வழியாக ஏரிகள், குளங்கள் நிரப்பப்பட்டன. இதுதான் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நடைமுறை.
- தற்போது இவை முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் சிதிலம் அடைந்துள்ளன; ஆக்கிரமிப்புகளால் சுருங்கியுள்ளன அல்லது காணாமல் போயிருக்கின்றன. இப்படி பாசன வசதிக்காகவும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும், மண் வளத்தைப் பெருக்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகளையும் குளங்களையும் அதற்கான கால்வாய்களையும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
- நாகரிகம் வளர்ந்த நாட்டில் மன்னர் ஆட்சியில் இல்லாத வாய்ப்புகளும் வசதிகளும் மக்களாட்சியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நிலையில், மக்களாட்சியில் நாம் நீர்நிலைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்?
ஆயிரக்கணக்கான ஏரிகளும், குளங்களும் இருந்த டெல்டா மாவட்டங்களில் தற்போது நூற்றுக்கும் குறைவான ஏரிகளே பயன்பாட்டில் உள்ளன.
வெள்ளம்
- அவையும் தன் அளவில் சுருங்கி இருக்கின்றன. ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம் தமிழகத்தில் ஏறத்தாழ கடலில்தான் கலக்கிறது. ஆற்று நீரைத் தேக்கி வைக்க நீர்நிலைகளில் அதற்கான பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
- இதனால், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கும் கோடைக் காலத்தில் வறட்சியும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.
- கிணறு, ஆழிக்கிணறு, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கண்மாய், கலிங்கு, கால்வாய், குட்டை, கூவம், கேணி, குளம், குமிழி, தளிக்குளம், தெப்பக்குளம், பொய்கை, மதகு, மறுகால், வாய்க்கால் என 48 வகையான நீர்நிலைகளை நம் முன்னோர் ஏற்படுத்தியிருந்தனர். அவற்றுள் பலவற்றை நாம் தொலைத்துவிட்டோம். சில பராமரிப்பின்றியும் கவனிப்பாரின்றியும் தூர்ந்து போயின.
- வெகு சிலவற்றை மட்டுமே இன்றளவும் பயன்படுத்துகிறோம்.
இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் கொண்டிருந்த முன்னோர், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தேசத்தில் அதற்கு உரித்தான வசதிகளை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டிருந்தனர்.
வளர்ச்சி
- நாம் வளர்ச்சி என்ற பெயரில் இவற்றையெல்லாம் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்.
நீரின்றி அமையாது உலகு என்று ஒரே வரியில் உலக இயக்கத்தில் அடிப்படை நீர் என்பதை வள்ளுவப் பேராசான் உணர்த்திவிடுகிறார். பொதுவாக மூன்று வகைகளில் ஏரிகளும், குளங்களும் நீரைப் பெறுகின்றன. மழை நீர், ஆற்று நீர் மற்றும் ஊற்றுநீர் எல்லாவற்றுக்கும் ஆதாரமானது மழை நீரே.
- மழை நீரைப் பெறுவதற்கு ஒரே வழி மரங்களை வளர்ப்பதே. காடுகளும் நீர் நிலைகளும் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன, பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பொருத்தே ஒரு நாட்டின் வளம் தீர்மானிக்கப்படுகிறது.
- வறட்சி பற்றியும் வெள்ளம் பற்றியும் பேசுவதை விட்டுவிட்டு, இரண்டையுமே தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மரங்கள் நடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு, காடுகள் வளர்க்கப்பட வேண்டும். அதேபோல நீர்நிலைகள் புனரமைக்கப்படுவதும் அவசியம். தமிழகத்தைப் பொருத்தவரை ஏறத்தாழ 39,202 ஏரிகள் உள்ளன. மிகப் பெரிய ஏரிகளாக, அதாவது 1,000 ஏக்கர் பரப்புக்கும் மேலான கொள்ளளவு கொண்ட ஏரிகள் ஏறத்தாழ 100 இருக்கின்றன. இவை அனைத்தும் பொறுப்புணர்வோடு பாதுகாக்கப்பட்டிருந்தாலே நமக்கு தண்ணீர் பிரச்னை தோன்றியிருக்காது.
புனரமைப்பு
- எந்த நாளிலுமே தமிழகத்திற்குத் தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கு இவற்றைப் புனரமைத்துப் பாதுகாப்பது ஒன்றே வழி.
- நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் பாசன வசதிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அன்றாடப் பயன்பாட்டிற்கும் தேவையான நீரைப் பெற ஆறுகள், ஏரிகள், குளங்கள் இன்னபிற நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தாலே போதும். இவற்றைச் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும். அதேநேரத்தில், பொதுமக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. தங்கள் அடுத்த தலைமுறைக்கு நமக்குக் கிடைத்த வளங்களைப் பாதுகாத்து கொடுத்துச் செல்ல வேண்டும்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.55,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 21 கோடி குடும்பத்தினர் இந்த ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்கின்றனர். திட்டத்தின் பயன் கிராமப்புற சமூக பொருளாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது. அதே நேரத்தில் ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் உயர்வது, மரங்களை நடுவது இயற்கை வளங்களை மேம்படுத்துவது ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.
- சுமார் 21 கோடி குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பணிகளை, அதாவது தங்கள் ஊரில் மரம் நடுவது, சாலைகள் அமைப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் முறையாகச் செய்திருப்பார்களேயானால் இந்தியா இந்நேரம் நீர்வளத்தில், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தன்னிறைவு அடைந்திருக்கும்.
- ஆனால், நாம் இன்றும் வெள்ளம், வறட்சி இரண்டினாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கிராம மக்களும் தங்கள் கிராமத்தை வளப்படுத்துவதற்கு உழைத்தால் போதுமானது.
- அப்படித்தான் நம் முன்னோர் அவரவர் ஊர் நீர்நிலைகளைக் காத்தனர். எல்லாக் கோயில்களிலும் குளங்கள் அமைக்கப்பட்டன. நீர்நிலைகளைப் பாதுகாப்பது தெய்வீகச் செயல், அதாவது மனித இனத்தைப் காப்பதற்காகச் செய்யப்படும் செயல் என்பதை நம் முன்னோர் நன்கு உணர்ந்தே இந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.
மழைநீர் சேகரிப்பு
- மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகத்தில் பெருமளவில் கோயில்கள் வழியாக ஒவ்வொரு ஊரிலும் செயல்பட்டு வந்தன. தற்போது மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழக அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. மழைநீரை பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, மண்ணை சத்துடையதாக ஆக்குவது ஆகியவை இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பினால் மட்டுமே சாத்தியமாகும். அதனை ஒவ்வொரு தனி நபரும் உணர்ந்து தங்கள் வீடுகளில் செயல்படுத்தினாலே பெருநகரங்கள், நகரங்களில் தண்ணீர் பிரச்னை இல்லாமல் போகும்.
- ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதும் மோட்டார் பம்புகளினால் நீரை உறிஞ்சி எடுப்பதும் தண்ணீர் பிரச்னையைப் போக்கி விடாது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும்போது மட்டுமே நமது வசதியான வாழ்க்கை உறுதி செய்யப்படும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களை அளவோடு தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். மனிதன் குடிப்பதற்கு ஏற்ற நீர் பூமியில் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கிறது.
- குடிநீரைக் காய்ச்சிக் குடித்தால் அது ஆரோக்கியமானது. ஆனால், தற்போது அதனை ஒரு வெளிநாட்டுக் கண்டுபிடிப்பு இயந்திரம் கொண்டு சுத்திகரிக்கிறார்கள்.
நமக்கு சுத்திகரித்துத் தரும் நீரின் அளவைவிட மூன்று மடங்கு தண்ணீரைக் கழிவாக அது வெளியேற்றுகிறது. இப்படித் தண்ணீரை வீணடிப்பது தவிர்க்கப்பட்டால் மும்மடங்கு நீர் சேமிக்கப்படும்.
- ஊர் கூடித் தேர் இழுப்பதைப் போல நீராதாரங்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஊர் கூடி செய்ய வேண்டிய பெரும் பணி. மழை நீரைப் பாதுகாக்க, சேமிக்க இன்றே தயாராக வேண்டியது நமது கடமை.
நன்றி: தினமணி (06-07-2019)