TNPSC Thervupettagam
April 6 , 2019 2063 days 2436 0
  • சுகாதாரத்தைக் காத்து அனைவரும் ஆனந்தத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்  உலக  சுகாதார விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ஆம்  தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
சுற்றுச் சூழல்
  • சுத்தம் சுகம் தரும்; சுகாதாரக் கேடு அழிவைத் தரும். ஆனால், சுகபோக வாழ்கை வாழ்கிறோம் என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,  சுகாதாரத்தை மறந்து அதி விரைவான வாழ்க்கையை வாழ்வதால் பல்வேறு நோய்த்தொற்றுக்கு உள்ளாகி தவித்து வருகிறது மனித இனம். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு,  செயற்கையுடன் புதைந்த வாழ்க்கையில் செயலிழந்த ஆரோக்கியப் பயணத்தில் மனித இனம் சென்று கொண்டிருக்கிறது.
  • சமீபத்திய ஆய்வில் மாசடைந்த குடிநீரால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், போர்  உள்ளிட்ட அனைத்து விதமான வன்முறைகளினால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட மாசடைந்த குடிநீரால் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், தண்ணீர் தொடர்பான நோயினால் ஒவ்வொரு 20 விநாடிக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
  • உலக மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் தண்ணீர் தொடர்பான நோய்களால் நிரப்பப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள நீராதாரங்களின் மீது பல மில்லியன் டன் குப்பைகள், தொழிற்சாலைகள் கழிவுகள் மற்றும் வேளாண் கழிவுகள் கொட்டப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக  ஏற்படும் மாசு, சுகாதாரமின்மை போன்றவை இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், காற்று மாசு என்பது உலகளவிலான பிரச்னையாக உள்ளது. காற்று மாசடைவதால் ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதாகத் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கம் மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஆனவர்களைவிட, காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் காற்று மாசு அதிகரித்துள்ள நகரங்களில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதிப்புகள்
  • வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையில் இருந்து கார்பன் மோனாக்சைடு வெளியாகிறது. இது காற்றில் வேகமாகக் கலந்து அவற்றை சுவாசிப்பவர்களின் மூளை, ரத்த நாளம் போன்றவற்றைப் பாதிக்கச் செய்கிறது. வாகனப் புகையை அடிக்கடி சுவாசிப்பவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் நுரையீரல் பாதிப்பு, மூளை செயலிழப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனப் புகை பாதிப்பால் மட்டும்  ஆண்டுக்கு 44 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உணவே மருந்து  என அன்று இருந்து வந்த நிலையில், ஆரோக்கிய உணவு வகைகளை உண்டு உடல் நலத்துடன் வாழ்ந்து வந்த மனித இனம் தற்போது தரமான உணவு முறைகளைப் பின்பற்றாதது அவர்களின் உடல்நலக் கோளாறுகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. பாரம்பரிய உணவு முறைகளைக் கைவிட்டு, நவீன வகை உணவு முறைகளை சாப்பிடத் தொடங்கியதால் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர். உடல் நலனுக்கு ஏற்காத உணவுகளைச் சாப்பிடுவதால், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் போக்கு சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது.
உணவு முறை மாற்றம்
  • ஆரோக்கிய ஊட்டச்சத்து மருந்தாக அமைய வேண்டிய உணவானது, மனிதனின் உணவுமுறை மாற்றத்தால் நஞ்சாக மாறிவிடுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானோர், சரியான உணவு முறையைக் கையாளத் தெரியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
  • சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியே கொட்டப்படும் ஊசிகள், பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், செயற்கை சுவாசக் குழாய் உள்ளிட்டவையும், காலாவதியான மருத்துவப் பொருள்களும் மருத்துவக் கழிவுகளாகும்.
மருத்துவக் கழிவுகள்
  • இந்த மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால், ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றி அழிக்காமல் குப்பைகளில் கொட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
  • இவ்வாறு குப்பைகளில் மருத்துவக் கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதன் காரணமாக நோயாளிக்குப் பயன்படுத்தப்பட்ட  மருத்துவக் கழிவானது, ஒன்பது நோயாளிகளை உருவாக்கக் காரணமாகிறது. பல பகுதிகளில் குப்பைக் கிடங்குகள் அமைப்பட்டு பல்வேறு இடங்களில் சேகரிப்படும் குப்பைகள் அங்கு கொட்டி குவிக்கப்படுகின்றன. ஆனால், அவை திடக்கழிவு மேலாண்மையைப் பயன்படுத்தி முறையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே எரிக்கப்படுகின்றன. இதனால் அங்கு அவ்வழியே செல்வோரும், அப்பகுதியில் வசிப்பவர்களும் சுகாதார பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
  • பல அரசு மருத்துவமனை வளாகங்களிலும்கூட தூய்மைப் பணி மேற்கொள்ளப்படாமல், சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில், கழிவுப் பொருள்கள் குவிந்து கிடப்பதைக் காண முடிகிறது. இதனால்  சிகிச்சை பெற வருவோரும் நோயாளிகளாக வழிவகுக்கிறது.
  • நலமான வாழ்வுக்கு எதிராக உள்ளவற்றை அப்புறப்படுத்தி, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் கொண்டு இந்த நாளில் இருந்து அதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு மனித சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்