பனகல் ராஜா என்று அறியப்பட்ட ராஜா சர் பனகந்தி ராமராயநிங்கார் காளஹஸ்தியின் ஜமீன்தாரும் நீதிக்கட்சியின் ஒரு முக்கிய தலைவருமாவார்.
ராமராயநிங்கார் மக்களாட்சியை ஆதரித்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டார்.
இவர் 1921 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் முதல் 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் நாள் வரை மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.
நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான இவர் 1925 ஆம் ஆண்டு முதல் 1928 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்தார்.
இளமைக்காலம்
ராமராயநிங்கார் 1866 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் நாள் மதராஸ் மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை
1912 ஆம் ஆண்டு இவர் டெல்லியில் உள்ள மத்தியப் பாராளுமன்ற அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தென்னிந்தியாவின் நில பிரபுக்களையும் ஜமீன்தார்களையும் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
1914 ஆம் ஆண்டில் நலிவுற்ற வகுப்பினரின் நல்வாழ்விற்கென தனியாக மாகாணத் துறைகளை ஏற்படுத்த வேண்டி ஒரு சட்டத்தை இவர் முன்வைத்தார்.
1915 ஆம் ஆண்டு வரை இவர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
1912 ஆம் ஆண்டில் சி. நடேச முதலியாரால் மதராஸ் திராவிடச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் முதல் தலைவராக ராமராயநிங்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1917 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் கோயம்புத்தூரில் இவர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 4 வெவ்வேறு பிராமணரல்லாததோர் சங்கங்கள் ஒன்றிணைந்து தென்னிந்திய தாராளவாதிகள் கூட்டமைப்பை உருவாக்கின.
பின்னர் இந்த அமைப்பானது நீதிக்கட்சி என அதிகாரப் பூர்வமற்ற முறையில் அறியப்பட்டது.
1918 ஆம் ஆண்டு இவருக்கு திவான் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அதே வருடத்தில் இவர் பிரதான போர்க் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார்.
இவரின் ஆட்சிக் காலத்தின் போதான சீர்திருத்தங்கள்
உடல்நலக் குறைவின் காரணமாக சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகிய போது ராமராயநிங்கார் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் 1921 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் முதல் 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் நாள் வரை மதராஸ் மாகாணத்தின் முதல்வராக பணியாற்றினார்.
இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்னதாக 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் நாள் மதராஸ் நகரத் திட்டமிடல் சட்டம், 1920 என்ற சட்டமானது நிறைவேற்றப்பட்டது.
1921 ஆம் ஆண்டில் இவர் இந்து சமய அறநிலையத்துறை மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதாவின்படி, கோவில் நிதிகளை நிர்வகிக்க அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு கோவில் நிர்வாகத்தின் மீது அதற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டது.
1921 ஆம் ஆண்டில் மதராஸின் பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடகா என்ற மில்லில் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் தொடங்கின.
இந்த வேலை நிறுத்தங்களானது C. நடேச முதலியாரின் சமரசத்தால் அக்டோபர் மாதம் முடிவிற்கு வந்தது.
கலப்புத் திருமணங்களுக்குச் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் வகையில் சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரும் டாக்டர் கவுரின் மசோதாவானது 1921 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
1921 ஆம் ஆண்டு பனகல் ராஜாவின் தலைமையிலான நீதிக்கட்சி அரசானது அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அரசு வகுப்புவாரி உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
இந்த உத்தரவின்படி, 44 சதவீதப் பணியிடங்கள் பிராமணரல்லாதோருக்கும் 16 சதவீதப் பணியிடங்கள் பிராமணருக்கும் 16 சதவீதப் பணியிடங்கள் இஸ்லாமியருக்கும் 16 சதவீதப் பணியிடங்கள் ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் 8 சதவீதப் பணியிடங்கள் பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டது.
இருந்த போதிலும் இந்தச் சட்டமானது பட்டியலிடப்பட்ட சாதியினருக்குப் போதுமான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்த உறுதி அளிக்க வில்லை.
1922 ஆம் ஆண்டு பறையர் மற்றும் பஞ்சமார் எனும் வார்த்தைகளை அலுவலக உபயோகத்திலிருந்து ஒழித்து அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் மற்றும் ஆதி ஆந்திரர் எனும் சொற்களைப் பயன்படுத்த வேண்டி ஒரு தீர்மானத்தை MC ராஜா எனும் உறுப்பினர் கொண்டு வந்தார்.
1922 ஆம் ஆண்டு தொழிலகங்களுக்கான மதராஸ் மாகாண உதவிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் வழியாக அரசானது வளரும் தொழிலகங்களுக்கு முன் கடன் வழங்குவதை ஒரு அரசுக் கொள்கையாக மாற்றியது.
1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் படி சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அமைப்பானது ஜனநாயக அடிப்படையில் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டது.
1925 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட மாதிரியிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக ஆந்திரப் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இவர் முதல்வராக பதவி வகித்த 1923 முதல் 1925 ஆம் ஆண்டு காலங்களில் சென்னையில் தியாகராய நகர் பகுதி உருவாக்கப்பட்டது.
பனகல் ராஜா பொதுப் பணித் துறையை மதராஸ் மாகாணத்தில் சீரமைத்தார். மேலும் கிராமப்புற பகுதிகளில் மருத்துவ வசதி, குடிநீர் விநியோகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய வசதிகளை மேம்படுத்தினார். மேலும் சித்த மருத்துவத்திற்கும் அவர் ஆதரவளித்தார்.
மதராஸின் கீழ்ப்பாக்கத்தின் ஹைதே பூங்காவில் இருந்த தனது நிலத்தை இந்திய மருத்துவத்திற்கான பள்ளிக்காக அளித்தார். தற்போது இந்த வளாகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அமைந்து இருக்கின்றது.
இவர் ஒரு பொதுவுடைமைவாதியாகவும் பிராமண எதிர்ப்பாளராகவும் கருதப் பட்ட போதிலும், பிராமணரான T. சதாசிவ அய்யரை இந்து சம அறநிலையத் துறையின் ஆணையராக நியமித்தார்.
1923 ஆம் ஆண்டில் நடைபெற்ற மதராஸ் மாகாண சட்டசபைத் தேர்தலின் மூலமாக 1923 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இரண்டாம் முறையாக முதல்வர் பதவியை ராமராயநிங்கார் ஏற்றார்.
பதவிக் காலத்திற்குப் பிறகு
1925 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான தியாகராய செட்டியாரின் மறைவிற்குப் பின் முன்னாள் முதல்வரான பனகல் ராஜா நீதிக் கட்சியின் இரண்டாவது தலைவராகப் பதவியேற்றார்.
1926 ஆம் ஆண்டில் மதராஸ் சட்டசபைக்கான தேர்தலில் நீதிக் கட்சி பெரும்பான்மை பெறத் தவறியதையடுத்து தனது முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
இருந்த போதிலும் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று அவரின் மறைவு வரையில் நீதிக்கட்சியின் தலைவராகவும் தீவிர அரசியலிலும் அவர் தொடர்ந்தார்.
1926 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் நாள் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.
மொத்தமுள்ள 98 இடங்களில் நீதிக்கட்சி 21 இடங்களையும் சுயராஜ்யக் கட்சி 41 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாகவும் உருவாகியது.
எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத பொழுதில் தனிப்பெரும் கட்சியான சுயராஜ்யக் கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை.
எனவே ஆளுநர் P. சுப்பராயனை சுயேட்சையான முதல்வராகவும் சட்ட சபையில் இவருக்கு ஆதரவாக 34 உறுப்பினர்களையும் நியமித்தார்.
பனகல் ராஜா அவையின் எதிர்க்கட்சித் தலைவரானார்.
1927 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய சைமன் குழு இந்தியா வந்தது.
இக்குழுவானது சுயராஜ்யக் கட்சி மற்றும் இந்திய தேசியக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டது.
ஆனால் நீதிக்கட்சியினரும் சுப்பராயனின் அரசும் அக்குழுவிற்கு நல் வரவேற்பை அளித்தன.
இறுதிக் காலம்
1928 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் ராமராயநிங்கார் காய்ச்சலால் காலமானார்.
இவரைத் தொடர்ந்து நீதிக்கட்சியின் தலைவராக B. முத்து சுவாமி பதவியேற்றார்.
மரபுகள்
ராமராயநிங்கார் பிராமண எதிர்ப்பு இயக்கத்தில் மிகவும் தீவிரமானவராவார்.
இவர் ஷாகு மகாராஜாவின் நண்பராவார். ஷாகுவின் சத்யசோதக் சமாஜ் அமைப்புடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
1923 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு ராமராயநிங்காருக்கு பனகல் ராஜா எனும் கௌரவப் பட்டத்தை அளித்தது.
1926 ஆம் ஆண்டு ஜுன் 05 ஆம் நாள் “இந்தியப் பேரரசின் நைட் காமண்டர் ஆஃப் தி ஆர்டர்” பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 முதல் 1921 ஆம் ஆண்டு ஜூலை 11 வரை சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான நீதிக்கட்சியின் முதல் அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.
நீதிக்கட்சியானது பனகல் ராஜாவின் மறைவிற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது.
திறன் வாய்ந்த தலைமையில்லாததே இக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
தியாகராய நகரில் அவர் பெயரில் அமைந்துள்ள பூங்காவின் உள்ளே பனகல் ராஜாவின் சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.