பாலியல் கொடூரங்கள்: காரணிகளை, பின்னணிகளை அலச வேண்டாமா?
March 15 , 2019 2081 days 1284 0
தமிழகத்தில் நடந்த இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள், இயற்கையான உறவின் அழகியலிலிருந்து அந்நியப்பட்டவர்கள். காமம் தொடர்பாகப் புனையப் பட்டுள்ள போதைகளின் அடிமைகள். இயற்கையின் பசி தீரக் கூடியது. ஆனால் இவர்களின் போதையோ தீர்க்க முடியாதது. இவர்களின் பசிக்குத் தீனி போடுவது இங்கு ஒரு ‘மாஃபியா’ தொழிலாக வளர்ந்து நிற்கிறது. அந்தத் தொழிலின் மாயக் கண்ணிகளில் ஒன்றாக, சமூக ஊடகங்களையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பெண்களைக் குறிவைத்து இந்தக் கேவலமான செயல்களை இவர்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள். சொல்லப் போனால் சட்டப்படியான குற்றத்திலிருந்து தப்பிக்கும்விதமாக இந்தக் குற்றங்களை இதுபோன்றவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. பெண்ணை ஏமாற்றி, அச்சுறுத்தி தங்கள் வலைக்குள் விழவைக்கும் கண்ணிகளை இவர்கள் வைத்திருக்கிறார்கள்.
அதிகாரப் பின்புலம்
இந்த அழுகையை அரசியலாக்கக் கூடாது என்பது சரியான கருத்துதான். ஆனால், இதன் பின்னே இருக்கும் அரசியலை சொல்லாமல் இருக்கவும் முடியாது. இந்தக் குற்றத்துக்குப் பின்னே இருப்பவர்களை அடையாளம் காட்டுவதை, அவர்கள் நேற்றுவரைக்கும் எந்தப் பயமுமின்றி இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்கள் என்பதையும், பல பெண்களை நாசம் செய்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுவதை, ஏன் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்பதில் அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்ன?
ஒரு குற்றச்செயல் ஏழாண்டுகளாக நடக்கிறது. எப்படி இத்தனைத் துணிச்சல் இவர்களுக்கு வந்தது? சட்டம் யாருக்காக செயல்படுகிறது? அரசு இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது என்று கேட்பது அறத்தின்பாற்பட்ட கேள்வியில்லையா? ஆள்வோரின் முதற்கடமை அறம் பேணுவதில்லையா? இதில் அரசியல் ஆதாயம் எனும் பேச்சு எங்கிருந்து வருகிறது?
அறம் பேணும் கடமை ஆள்வோருக்கு மடடுமில்லை. மக்களுக்கும் இருக்கிறது. ஒரு பெண் துணிந்து புகார் அளித்ததின் பேரில்தான் இன்று இத்தனை விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன. பெறப்பட்டுள்ள தகவல்களின்படி இன்னும் ஏராளமான பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று தெரிகிறது. மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்வதுதான் இதில் தொடர்புடைய மொத்த வலைப்பின்னலையும் சட்டத்தின்கீழ் நிறுத்த உதவும்.
சட்டப் பாதுகாப்பின் அவசியம்
பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து உண்மையைச் சொல்ல வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் சட்டபூர்வமான அமைப்புகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மகளிர் ஆணையத்தின் அதிகாரத்தை மேம்படுத்தியே இதனை செய்ய இயலும். உயர் நீதிமன்றமே முன்வந்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட முடியும். இந்த வழக்கை வெறுமனே, மத்திய புலனாய்வுக் குழுவுக்கு மாற்றுவதால் மட்டுமே, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் கிடையாது.
இதில் ஒவ்வொரு தரப்பினர் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. மிரண்டு ஒடுங்கி நிற்கும் இந்தப் பெண் குழந்தைகளின் நிலை நம்மை குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது. இவர்களின் அழுகைக்கு யார் காரணம்? கற்பெனும் வேலி கட்டி காக்கப்படும் பயிர்களாய் பெண்களை இந்தச் சமுதாயம் வைத்திருக்கிறது. அந்த வேலி தாண்டினால் இந்த உலகம் அவளுக்கு பாதுகாப்பானதாய் இல்லை. அல்லது அப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் வேலியின் அவசியத்தைப் பெண்ணுக்கு வலியுறுத்தவே பயன்படுத்தப்படுகிறது. மாறாக, எந்தப் பெண்ணையும் பாலியல் பார்வையுடன் மட்டும் அணுகும் பார்வையை ஆண்களிடமிருந்து அகற்றுவது முக்கியமில்லையா?
சரியான பார்வையும் எச்சரிக்கையும்
அதேநேரம், இன்றைய சூழலில் யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டும் சில எச்சரிக்கைகளை நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். நம் பார்வை விசாலமாக வேண்டும். பெற்றோர், பிள்ளைகள் என்று இரு தரப்பிலும் சுதந்திரமான, தீர்க்கமான அணுகுமுறை அவசியம். அனுபவத்தின் மூலமாக மட்டுமே எதைத் தேர்ந்தெடுப்பது என்கின்ற அறிவு ஒருவருக்கு வர இயலும். அறிமுகமானவர்களிடமே எச்சரிக்கையாகப் பழகு என்று ‘குட் டச்’, ‘பேட் டச்’ சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால், யாரென்றே தெரியாதவர்கள் மீது எப்படி அவ்வளவு நம்பிக்கை வருகிறது என்பது குறித்து உளவியல் ஆய்வும் தேவைப்படுகிறது. பெண்களுக்கு வைக்கப்படும் உண்மையான பொறி எது என்பதையும் நாம் கண்டறிய வேண்டும். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, காதலையே கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் பேசுகிறார்கள். பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும், ஆத்மார்த்தமாகக் காதலித்துத் திருமண பந்தத்துக்குள் நுழைபவர்களுக்கும் வித்தியாசமில்லையா?
இன்றைக்கு, பையன்களின் ஒரே தகுதி பணம் கொண்டுவருவது என்று பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எல்லாவித நியாயங்களையும் கடைப்பிடிக்கும் ஓர் இளைஞன் சம்பாதிக்க முடியாவிட்டால் மதிக்கப்படுவதில்லை. ஆனால், அனைத்து அயோக்கியத்தனங்களைச் செய்யும் இளைஞன், பொருளோடு வந்தால் மரியாதை கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்குக் கற்பு, ஆணுக்கு சம்பாத்தியம் என்கின்ற பொதுப்புத்தியும் இதுபோன்ற குற்றச்செயல்களின் பின்புலமாக இருக்கிறது.
இணைய உலகம் இன்றைக்கு எவ்வளவோ சாதித்திருக்கிறது. ஆனால், சமூக வலைதளங்களில் போலிக் கணக்கை உருவாக்குபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. இணையக் குற்றங்களை ஏதோ கட்டுப்படுத்த முடியாத மாயாஜாலங்கள் போல சித்தரிப்பது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கேள்விக்குட்படுத்துவதாகும். இணையக் குற்றங்கள் பற்றி மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படும் இந்தச் சம்பவம், நாளை மறக்கடிக்கப்படலாம். ஆனால், மனிதத்தன்மையற்ற வகையில் குற்றமிழைத்தவர்கள் தப்பிவிட நம் சமூகம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது. ஒருசில குற்றவாளிகளைப் பிடிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகாது. அந்தக் குற்றச் சங்கிலி அடையாளம் காணப்பட வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக இருக்க வேண்டும்!