TNPSC Thervupettagam

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை

June 24 , 2019 2029 days 917 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிரிட்டன் பயணத்தைக் கவனித்தவர்கள் ராஜதந்திர நடவடிக்கைகளிலேயே ‘பெரிய சறுக்கல்’ என்று கருதும்படியான ஒரு நிகழ்வைப் பார்த்திருப்பார்கள்; பிரிட்டனின் ‘தேசிய சுகாதார சேவை’ துறையை (என்ஹெச்எஸ்.) அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார் ட்ரம்ப். அமெரிக்காவின் நீண்ட கால நண்பனான பிரிட்டனுடனான உறவில் நஞ்சு கலக்க இந்த யோசனையே போதுமானது; அமெரிக்க அதிபராகப் பதவி வகிப்பவரின் குணம் எவ்வளவு தரமானது என்பதைக் காட்ட இந்த ஒரு யோசனையே போதும்!
  • ட்ரம்பை ஆதரிப்பவர்கள் ‘தான் பேசுவது என்னதென்று புரியாமல் பேசிவிட்டார்’ என்று இதற்கு முட்டுக்கொடுக்கின்றனர். பிரிட்டனின் ‘தேசிய சுகாதார சேவை’ என்றால் என்ன என்று தெரியாமல் அவர் பேசிவிடவில்லை; அது பிரிட்டிஷ்காரர்களின் வாழ்க்கையில் எப்படி இரண்டறக் கலந்துள்ளது என்று தெரியாமல்தான் பேசியிருக்கிறார். “முற்றிலும் செயலிழந்துவிட்ட, செயல்பட முடியாமல் திணறுகிற தேசிய சுகாதார சேவைக்கு எதிராக பிரிட்டிஷ்காரர்கள் வீதியில் திரண்டு போராடுகிறார்கள்” என்று கடந்த ஆண்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் ட்ரம்ப். உண்மையில், மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும், மக்களுக்கு அரிய சேவை செய்துவரும் தேசிய சுகாதார சேவைக்கு அதிக நிதியை பிரிட்டிஷ் அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத்தான்.
எதிரும் புதிரும்
  • வளர்ந்த நாடுகளுக்கிடையே மிகவும் மோசமான சுகாதார சேவையை அளித்துவரும் ஒரே நாடு அமெரிக்காதான். அதை இன்னும் எப்படியெல்லாம் கீழிறக்கலாம் என்று யோசித்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். இப்படிப்பட்டவர் அமெரிக்காவின் சுகாதார சேவைக்கு நேரெதிரான – மிக மேம்பட்ட - பிரிட்டனின் சுகாதார சேவைக்கு ஆலோசனை கூற முனைந்தது அபத்தமானது.
  • அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தனியார் துறையும் அரசுத் துறையும் எதிரும் புதிருமாக நின்று சுகாதாரத் துறையில் பணியாற்றுகின்றன. ஒபாமா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த ‘செலவு குறைவான மருத்துவக் காப்புறுதிச் சட்டம்’ சுகாதார சேவையை மேலும் பல கோடிப் பேருக்கு இப்போது விரிவுபடுத்தியிருக்கிறது. மருத்துவ உதவிக்கான காப்புறுதி நிறுவனங்களின் பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. அப்படியும் அமெரிக்கர்களில் கணிசமானவர்கள் சுகாதாரத்துக்குத் தங்களுடைய சொந்த செலவில் காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து, லாபம் சம்பாதிப்பதே குறியாக இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவுசெய்து சிகிச்சை பெறும் நிலையிலேயே இருக்கின்றனர். கனடாவில் மருத்துவச் செலவுக்கான பணத்தை அரசாங்கம் செலுத்துகிறது; ஆனால், சிகிச்சை தருவோர் தனியார் துறையினர். பிரிட்டனில்தான் மருத்துவம் சமூகமயமாக்கப்பட்டுவிட்டது. அரசுக்குச் சொந்தமானவை மருத்துவமனைகள்; மருந்துகளுக்கும் மருத்துவர்களுக்கும் அரசு செலவழிக்கிறது.
  • அப்படியானால், பிரிட்டனில் சுகாதாரத் துறை எப்படிச் செயல்படுகிறது? பழமைவாதிகள் நினைப்பதைப் போல மோசமாக இல்லாமல், நன்றாகவே செயல்படுகிறது. முதலாவதாக, பிரிட்டிஷ்காரர்களுக்கு மருத்துவச் செலவு ஒரு பொருட்டே இல்லை. சிகிச்சைக்குப் பிறகு சொத்தையே எழுதிவைக்க வேண்டுமே என்று அவர்கள் கவலைப்படுவது கிடையாது அல்லது செலவழிக்க முடியாததால், வருவது வரட்டும் என்று சிகிச்சையே வேண்டாமென்று முடிவெடுக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. இப்படி அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிப்பதென்றால் அரசாங்கத்துக்கு அதிகம் செலவாகுமே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில், அமெரிக்கர்கள் செய்யும் செலவில் பாதியைத்தான் பிரிட்டிஷ்காரர்கள் செய்கின்றனர். தேசிய சுகாதார சேவையின் சிறப்பம்சம் அப்படி!
ஒப்புக்கொள்ளுங்கள் அமெரிக்கப் பழமைவாதிகளே!
  • அப்படியானால், பிரிட்டிஷ் அரசின் சுகாதார சேவை திட்டத்தை அமெரிக்காவும் பின்பற்ற வேண்டுமா? அவசியம் இல்லை. அனைவருக்கும் மருத்துவ சேவையை அளிக்க வெவ்வேறு விதமான வழிகள் உள்ளன. கனடாவில் வரிப் பணத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் அனைவருக்கும் அரசே செலவழித்து சுகாதார சேவை அளிக்கிறது. சுவிட்சர்லாந்தில் தனியார் நிறுவனங்களே போட்டிபோட்டு சேவைபுரிகின்றன. குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காக அரசே மானியம் அளித்து, கண்காணித்தால் சுகாதார சேவை மிகச் சிறப்பாகவே இருக்கும். பிரிட்டனில் தேசிய சுகாதார சேவை செயல்படுகிறது. அதில் சில குறைகள் உள்ளன. எந்த முறையில்தான் குறைகள் இல்லை? பிரிட்டிஷ்காரர்கள் இதை விரும்பி ஏற்றுக்கொள்வதில் நியாயங்கள் அதிகம்.
  • பிற நாடுகளில் சுகாதார சேவைகள் நன்றாகச் செயல்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள் அமெரிக்காவின் பழமைவாதிகள். அரசுத் துறையைவிட தனியார் துறைதான் சேவை அளிப்பதில் சிறந்தது என்பதும் அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, எவ்வளவு ஆதாரங்களைக் காட்டினாலும் அவர்களுடைய நம்பிக்கை அவற்றையெல்லாம் நிராகரித்துவிடும். எனவே, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை சரியில்லை என்று அதிபர் ட்ரம்ப் கூறியது குறித்து எனக்கு வியப்பேதும் இல்லை.
குறுவடிவ சுகாதார சேவை
  • அமெரிக்காவிலும் பிரிட்டனின் என்ஹெச்எஸ் போல குறுவடிவ சுகாதார சேவையொன்று இருக்கிறது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ‘ஓய்வு பெற்றவர்களுக்கான சுகாதார சேவை’ (விஹெச்எஸ்) அப்படித்தான் நிர்வகிக்கப்படுகிறது. அது ஏராளமான மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் வலைப்பின்னலைப் போல பராமரித்துவருகிறது. ஆனால், அரசுத் துறை நிறுவனங்களுக்கு எதிராகக் கட்டுக்கதைகளைப் பரப்பி, அவற்றை உருக்குலைத்து தனியாரிடம் ஒப்படைப்பதற்காகத் திட்டமிட்டு அவதூறு பரப்பும் வலதுசாரிகள் அதைப் பற்றியும்கூட அவதூறுகளையே பரப்பிவருகிறார்கள்.
  • மருத்துவமனைகளின் சேவையை மருத்துவத் துறையில் அனுபவம் பெற்ற நிபுணர்கள்தான் தரப்படுத்துகிறார்கள். இப்போது அந்த வேலையை ட்ரம்ப் நியமித்த மும்மூர்த்திகள் தயாரிக்கின்றனர். இவர்கள் ட்ரம்ப் குடும்பத்துக்குச் சொந்தமான ‘மார்-ஏ-லகோ’ விடுமுறைக்கால வாசஸ்தலத்தில் வேலைபார்ப்பவர்கள். இவர்களின் தலைவர் பெர்ல்மட்டர். ‘மார்வெல் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தின் தலைவர். இவருடைய நிர்வாகத்தில் மருத்துவச் செலவு குறையும், மருத்துவ சேவையும் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால், ‘கேப்டன் அமெரிக்கா’ என்பது உயிருள்ள நபர் என்று நீங்களும் நம்புகிறீர்கள் என்றே பொருள். என்னுடைய சிந்தனையெல்லாம் ‘பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் அமெரிக்கத் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்’ என்று ட்ரம்ப் கூறியதை பிரிட்டிஷார் எப்படிப் பார்த்திருப்பார்கள் என்பதுதான்!

நன்றி: இந்து தமிழ் திசை (24-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்