TNPSC Thervupettagam

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - II

May 23 , 2019 1866 days 5668 0
செயல்பாடுகள்
  • 1924 ஆம் ஆண்டு தீண்டத்தகாதவர்களின் சிரமங்களை அகற்றி அவர்களின் குறைகளை அரசின் முன்வைப்பதற்காக பம்பாயில் பகிஷ்கிரிட் ஹிதாகரிணி சபாவை அவர் தொடங்கினார்.
  • “கற்பி, ஒன்றிணை, புரட்சி செய்” என்பவை இந்த சபையின் அடிப்படைக் கொள்கையாகும்.
  • 1925 ஆம் ஆண்டு சைமன் குழுவுடன் இணைந்துப் பணியாற்றுவதற்காக பம்பாய் மாகாண சபையின் குழுவில் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.
  • 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று மனுதர்மத்தின் பிரதிகளை எரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அவர் தலைமை தாங்கினார்.
  • இதனால் ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆனது அம்பேத்கரின் கொள்கையாளர்கள் மற்றும் தலித்துகளால் மனுதர்ம நூல் எரிப்பு தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • 1927 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் நாள் மகாராஷ்டிராவின் மஹத் பகுதியில் உள்ள முக்கிய குளத்திலிருந்துத் தீண்டத்தகாத சமூகத்தினர் தண்ணீர் எடுப்பதற்கான உரிமைக்காகப் போராடும் சத்தியாக்கிரகம் ஒன்றிற்கு அவர் தலைமை தாங்கினார்.

  • அவ்வகையில் உலகில் குடிநீருக்காக சத்தியாக்கிரகம் செய்த முதல் மற்றும் ஒரே சத்தியாக்கிரகவாதி பாபாசாஹிப் ஆவார்.
  • அந்த நாளானது (மார்ச் 20) இந்தியாவில் சமூக மேம்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • 1930 ஆம் ஆண்டு மார்ச் 02 ஆம் நாள் நாசிக்கில் நடைபெற்ற மிகப்பெரிய ஊர்வலங்களில் ஒன்றான கலாராம் கோவில் நுழைவு இயக்கத்தினை அம்பேத்கர்  தொடங்கினார்.

 

பூனா ஒப்பந்தம்
  • முதல் இரண்டு வட்டமேசை மாநாடுகளில் மதராஸ் மாகாணத்திலிருந்துப் பங்கேற்ற இரட்டை மலை சீனிவாசனுடன் இணைந்து மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் அம்பேத்கர் கலந்துக் கொண்டார்.

  • 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டின் விளைவாக அப்போதைய இங்கிலாந்து பிரதமரான ராம்சே மெக்டொனால்டு 1932 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் நாள் அன்று வகுப்புவாத கொடையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு என்று தனியாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிப்பதாக அறிவித்தார்.
  • இது உயர்சாதியினர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலேய-இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆகியோருக்கு தனிப் பிரதிநிதித்துவத்தை அளித்தது.
  • ஆனால் காந்தி தீண்டத்தகாதவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த தனிப் பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தார். இந்த ஏற்பாடானது இந்து சமூகத்தினரிடையேப் பிரிவினையை ஏற்படுத்துமென காந்தி அஞ்சினார்.
  • பூனாவில் எரவாடா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி இதனை எதிர்த்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

  • இதனையடுத்து எரவாடா மத்தியச் சிறையில் காங்கிரசின் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களான மதன்மோகன் மாளவியா மற்றும் பால்வாங்கர் பலூ போன்றோர் அம்பேத்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்களுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
  • பூனா ஒப்பந்தம் என்றறியப்படும் இந்த உடன்படிக்கையானது (ஒடுக்கப்பட்ட இந்துக்களின் சார்பாக) அம்பேத்கர் மற்றும் மதன்மோகன் மாளவியா (மற்ற இந்துக்களின் சார்பாக) இடையே 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தமானது கூட்டுத் தொகுதி முறை என்றும் அறியப்படுகின்ற, மாகாண சட்டசபைகளில் பொதுத் தொகுதிகளிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு என்று தனித் தொகுதிகளை ஏற்படுத்தும் முறையை வழங்கியது.
  • இந்த உடன்படிக்கையின் காரணமாக இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டால் முன்மொழியப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் 71 இடங்களுக்குப் பதிலாக 148 இடங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சட்டசபையில் பெற்றனர்.
  • 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படியும் பின்னர் 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் பின்னாளில் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் என்றழைக்கப்பட்ட இந்த “தாழ்த்தப்பட்டோர் வகுப்பு” எனும் சொல் இந்துக்களிடையே இருந்த தீண்டத்தகாதவர்களைக் குறித்தது.

 

அரசியல் பணிகள்
  • 1936 ஆம் ஆண்டு இவர் தொடங்கிய சுதந்திர தொழிலாளர் கட்சியானது 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற பம்பாய் மாகாணத் தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்றது.
  • 1942 – 46 காலகட்டங்களில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் வைசிராயின் நிர்வாகக் குழுவில் தொழிலாளர் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.
  • இந்தியாவில் 8 மணி நேரப் பணி முறையை இவர் கொண்டு வந்தார். இவ்வகையில் 12 மணி நேரப் பணியை 8 மணி நேரமாக மாற்றி இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வில் இவர் மிகப்பெரிய ஒளியை ஏற்றினார்.
  • 1942 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று புதுடெல்லியில் 7வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் அவ்விதியை இவர் கொண்டு வந்தார்.
  • இந்தக் காலகட்டத்தில் பாபாசாஹிப் தனது கட்சியின் பெயரை பட்டியலிடப்பட்ட சாதிகள் கூட்டமைப்பு என 1942 ஆம் ஆண்டு மறுபெயரிட்டார். இது பின்னர் 1956 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுக் கட்சியாக உருவானது.
  • முதலில் இவர் முஸ்லீம் லீக் ஆட்சியில் இருந்த வங்காளத்தில் இருந்து அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து அந்தத் தொகுதியானது பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது.
  • இதனையடுத்து G.V. மாவ்லங்காருக்கு முன்னதாக மூத்த நீதியாளரான ஜெயகரின் இடத்தில் பம்பாய் மாகாணத்திலிருந்து அவர் அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அம்பேத்கர் இருமுறை பம்பாய் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.
  • நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இவரின் முதல் பதவிக் காலமானது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 முதல் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 வரை ஆகும்.
  • இவரின் இரண்டாவது பதவிக் காலம் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 அன்று தொடங்கி 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 வரை ஆகும். ஆனால் அவரின் இந்தப் பதவிக் காலம் முடிவடையும் முன்னரே 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று இவர் காலமானார்.
  • அம்பேத்கர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வடக்கு பம்பாய் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரின் முன்னாள் உதவியாளரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான நாராயண் சதோபா காஜ்ரோல்கரிடம் அவர் தோல்வியடைந்தார்.
  • 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற பாந்த்ரா இடைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவையில் நுழைய முயன்றார். ஆனால் அதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று இவர் மூன்றாமிடத்தையே அங்கு பிடித்தார்.
  • 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் பொதுத் தேர்தலுக்கு முன்னரே இவர் காலமானார்.

 

நிர்வாகப் பணிகள்
  • 1934 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியானது இந்திய நாணய மற்றும் நிதியியல் மீதான மேன்மைக் குழு என்றறியப்படும் ஹில்டன் யங் குழுவிற்கு அம்பேத்கர் அளித்த ஆலோசனையின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று Dr. பாபாசாஹிப் அம்பேத்கர் அரசியமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  • 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் முதலாவது மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

  • ஆற்றல் மற்றும் நீர் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும் இந்த இரண்டு முக்கியத் துறைகளில் மத்திய அரசிற்கு ஒரு முக்கியப் பங்கினை அளிக்கவும் இவரே முக்கியப் பங்காற்றினார்.
  • மேலும் இவர் இந்தியாவில் புனல் மற்றும் அனல் மின் நிலையங்களை அமைத்து அவற்றின் ஆற்றல் திறன்களைக் கண்டறிய மத்திய தொழில்நுட்ப ஆற்றல் வாரியம் மற்றும் மத்திய மின்சார ஆணையம் போன்றவற்றை அமைத்தார்.
  • மின் உற்பத்தியை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவர் இவரேயாவார்.
  • மேலும் மத்திய மற்றும் மாநில அளவில் நீர்ப் பாசனத்தை மேம்படுத்துவதை எளிதாக்கிட மத்திய நீர் ஆணையத்தை இவர் உருவாக்கினார்.
  • வெள்ளப் பெருக்கை தடுக்கவும் நீர்ப்பாசனக் கட்டமைப்பை விரிவுபடுத்தவும் ஆறுகளில் பெரிய அணைகளைக் கட்டும் யோசனைகளை அவர் அளித்தார்.
  • தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், பக்ரா நங்கல் அணைத் திட்டம், சோன் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் மற்றும் ஹிராகுட் அணைத் திட்டம் ஆகியவை இவரின் சிந்தனையால் உருவானவை ஆகும்.

  • மத்தியப் பிரதேசத்திலிருந்துப் பீகாரைப் பிரிப்பதற்கு முதன்முதலில் பரிந்துரை செய்தவர் அம்பேத்கர் ஆவார்.
  • இவரால் உருவாக்கப்பட்ட பரம்பரைச் சொத்துரிமை மற்றும் திருமணங்களில் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கமுடைய இந்துச் சட்ட மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தடையினால் 1951 ஆம் ஆண்டு இவர் அமைச்சரவையிலிருந்துப் பதவி விலகினார்.

 

இறுதிக் காலங்கள்
  • 1954 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற நான்காவது புத்த சமய மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்திற்கு அவர் பயணித்தார்.
  • அங்கு அம்பேத்கருக்குப் புத்த சமயத்தின் மிக உயர்ந்த பட்டமான “போதி சத்துவர்” எனும் பட்டத்தைப் புத்த பிக்குகள் அளித்தனர்.
  • 1955 ஆம் ஆண்டு அம்பேத்கர் பம்பாயில் பாரதீய புத்த மகா சபா அல்லது இந்திய பௌத்த சங்கத்தை நிறுவினார்.
  • 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று அம்பேத்கர் நாக்பூரில் ஏறக்குறைய 5 லட்சம் ஆதரவாளர்களைப் புத்த மதத்திற்கு மாற்றும் பொருட்டு ஒரு பெரிய பொது விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.
  • 1954-55 ஆண்டுகளிலிருந்து நீரிழிவு நோய் மற்றும் தீவிர கண் பார்வைக் குறைபாடு போன்ற உடல்நலக் குறைவுகளால் அவர் கடுமையாக அவதிப்பட்டார்.
  • 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று புதுடெல்லியில் உள்ள அவரின் வீட்டில் தனது உறக்கத்திலேயே அவர் காலமானார்.
  • அம்பேத்கர் புத்த மதத்தை தனது மதமாக ஏற்றுக் கொண்டதால் டிசம்பர் 07 அன்று பம்பாயில் உள்ள தாதர் சௌபட்டி கடற்கரையில் (சைத்திய பூமி) புத்த மதப் பாணியிலான ஒரு இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்