TNPSC Thervupettagam

புகை என்னும் பகை!

May 31 , 2019 2046 days 1088 0
  • புகை பிடிப்பதைக் குறைக்கவும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன்  ஆண்டுதோறும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
புகையிலை பாதிப்பு 
  • ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் புகையிலை பாதிப்பால் இறக்கின்றனர் என்று அந்த அமைப்பு தெரிவிக்கிறது. புகை பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லாமல், நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளாவதுடன் வேறு உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு புகையிலை காரணமாக நுரையீரலின் ஆரோக்கியம் கெடுதல் என்ற மையக் கருத்தை இந்தத் தினத்துக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
  • புகையிலை, மற்றும் புகையிலை சார்ந்த பொருள்களை சிறுவர்களுக்கு விற்பதையும், கல்வி நிலையங்களுக்கு அருகில் (பள்ளி, கல்லூரி வளாக சுற்றுச் சுவரில் இருந்து கிட்டத்தட்ட  நூறு மீட்டர் தொலைவு வரை) அவற்றின் விற்பனையைத் தடை செய்யும் சட்டம்   எத்தனை பேருக்குத் தெரியும்?  சிகரெட் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அதே வடிவமைப்பில் மிட்டாய்கள் விற்கப்படுதல் குழந்தைகளுக்கு உகந்ததல்ல.
  • ஒரு முறை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வு நாளைக் கொண்டாட வாங்கி வந்திருந்த மென்பானம் ஒன்றை ஆசிரியர் என்னிடம் காட்டினார். மது புட்டி வடிவில் இருந்த அந்தப் புட்டியின் மீது சாராய சுவையுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. போதைப் பொருள்களில் சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக விற்கப்படும் இவை, பின்னாளில் அவர்கள் புகை பிடிப்பதற்கும், குடிப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கும் வழி வகுக்கும் என்பதால் இவற்றின் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும்.
பாதிப்புகள்   
  • புகை பிடிப்பவர்கள் மட்டுமல்லாது, சிகரெட் புகையினால் பாதிக்கப்படும் புகை பிடிக்காதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரியவர்களின் புகைப் பழக்கத்தால் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். புகைப் பழக்கத்தால் நுரையீரல் பாதிப்புள்ளாகி இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்காகும். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு காச நோய் இருக்கும் நிலையில் நுரையீரல் அதிகமாகப் பாதிப்படைகிறது.
  • புகைப் பழக்கத்தால் நுரையீரல் பாதிப்படைந்து உயிரிழப்பவர்கள் உள்பட புற்றுநோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக ஏழு லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புற்று நோய் இறப்பு விகிதம் 2012-2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் 6% அதிகரித்துள்ளதாகவும், நாளொன்றுக்கு சுமார் 1,300 பேர்கள் இறப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. அநேகமாக 2020 -ல் 3 லட்சம் புதிய நோயாளிகள் புற்றுநோய் பாதிப்புடன் இருப்பார்கள் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மருந்து
  • உட்புறம் சீத்தாப்பழம் போல் தோன்றும் ராம் சீத்தா என்னும் பழத்திலும், நித்யகல்யாணி தாவரத்திலும் புற்றுநோய்க்கான தீர்வு உண்டு என்று சொல்லப்படுகிறது. வின்கா ரோஸியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட நித்யகல்யாணியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இரு வகையான ஆல்கலாய்ட்ஸ்,  குழந்தைகளைப் பாதிக்கும் ரத்தப் புற்றுநோய்க்கும், நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய்க்கும்  அருமருந்தாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. இவை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பினை 10% -லிருந்து 95% வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் இது போன்ற தாவரங்களின் புற்றுநோய் எதிர்ப்பு மருத்துவக் குணங்கள் குறித்து ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை வளங்களைப் போலவே, ஒரு நாட்டுக்கு மனித வளமும் முக்கியம். புற்றுநோய், இதய நோய் உள்ளிட்டவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது அவசியம்.
  • எனவே, நோய்களைக் கண்டறிவதற்கான, நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் என்னென்ன  என்பது குறித்து வெளிப்படைத்தன்மை அவசியம். கோடிக்கணக்கில் செலவிடப்படும் விண்வெளி ஆராய்ச்சிகளைப் போன்றே,  மனிதர்களை நோய்களிலிருந்து காப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (31-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்