TNPSC Thervupettagam

புதிய கல்விக் கொள்கை: சில சந்தேகங்கள்...

June 21 , 2019 2031 days 957 0
  • தற்போது நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் 6 வயது முதல் 14 வரையுள்ள குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு 3 முதல் 14 வயது வரை குழந்தைகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பரிந்துரைப்பது ஆரோக்கியமான விஷயம். தமிழகத்தின் முன்மாதிரித் திட்டமான மதிய உணவு, தற்போது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவது தமிழகத்துக்குப் பெருமை தரும் ஒரு கூறு. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு பற்றிய பரிந்துரையும் நல்லதொரு முன்னெடுப்பு. அதே நேரத்தில் சில தெளிவு தேவைப்படும் அம்சங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது.
  • ஆரம்பக் கல்வியில் கணிதம் மற்றும் எழுத்தறிவு மேம்பாட்டுக்கு உள்ளூர் தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கிறது வரைவு அறிக்கை. குழந்தைகளின் திறன் வளர்ப்புக்கு மிகவும் பொறுப்பாளராக வேண்டியோர் ஆசிரியர்களே. அவர்களுக்கு இருக்கும் சிரமங்களைக் குறைத்து ஆசிரியர் கல்வியில் போதுமான சீர்திருத்தங்களைச் செய்வதே சரி. பிறகு, தன்னார்வலர்கள் என்பவர்கள் யாராக இருப்பர் என்ற கேள்வியும்கூட எழுகிறது.
உயர்கல்வி
  • வேளாண்மை, மருத்துவம் போன்ற உயர்கல்வித் துறைகளுக்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்புகளில், மேம்பாடு அடைந்துள்ள மாநிலங்களையும் மேம்பட வேண்டிய நிலையிலிருக்கும் மாநிலங்களையும் அணுகும் பார்வையில் மாற்றம் தேவை. கூட்டாட்சி அமைப்பில், ஒவ்வொரு மாநிலமும் தமக்கான வாய்ப்புகளைத் தாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அதிகம் பேச வேண்டும். மாறாக, ஒட்டுமொத்தக் கல்வி வேலைவாய்ப்புகளையும் நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு என மத்தியத்துவப்படுத்துவது எவ்வகையிலும் நாட்டு ஒற்றுமைக்கு உதவாது. நீட் இதற்கொரு சாட்சியாக அமைகிறது. இந்நிலையில், கல்லூரிக் கல்விக்கும் நுழைவுத் தேர்வைப் பரிந்துரைப்பது எப்படி இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் சரியாக இருக்கும்?
  • இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த அறிக்கை வெளியீடு குறித்தும் சில சந்தேகங்கள் எழுகின்றன. பல்வேறு இன, மொழி, கலாச்சார வேறுபாடுகள் நிறைந்த நாட்டின் கல்விக் கொள்கையை 30 நாட்களுக்குள் முடிவுசெய்ய வேண்டிய அவசரம் என்ன வந்தது? ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அறிக்கை வெளிவந்துள்ளது ஆரோக்கியமான போக்கல்ல. அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி: (இந்து தமிழ் திசை: 21-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்