- உலகத்தின் மூலதனமே அறிவு, ஆழ்ந்த அறிவுக்கு ஊற்றாகவும், ஆழ்ந்த கருத்துகளுக்கு விளை நிலமாகவும் விளங்குவதே கல்வி. அந்தக் கல்வியை நம் மக்களுக்கு வழங்குவது புத்தகங்கள்தான். "நீ எத்தகைய நூல்களை விரும்பிப் படிக்கிறாய் என்பதைச் சொல், உன்னைப் பற்றி நான் அறிந்து கொள்வதற்கு அதுவே போதிய சான்றாகும்' என்றார் சுவாமி விவேகானந்தர்.
- வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கிய உலகில் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். கல்விக் கூடத்தில் சரியாக போதனைகள் பெற முடியாமல் சமூகக் காரணங்களும், சமூக நீதிகளும் இவர்களை விரட்டியடித்திருக்கின்றன. "அனைவருக்குமானது கல்வி, புத்தகம் பொதுவானது' என துண்டுப் பிரசுரம் அளித்ததற்காக மில்டனை சிறையில் அடைத்தது அரசு.
உலகம்
- அவரால் இந்த வெளி உலகத்தைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே திறந்திருந்தன. இந்த நிலையிலும் புத்தகங்கள் மீது தீரா பற்றுக்கொண்டு சிறைக் கம்பிகளுக்கு இடையேயும் மற்றவர்கள் புத்தகங்களை வாசிக்கக் கேட்டு மேதையாகி, உலகப் புகழ் பெற்ற கவிதையான "பாரடைஸ் லாஸ்ட்' என்ற அழியா நூலை உருவாக்கினார். வாசிப்பின் ருசியை அறிந்து, அதன் லயிப்பில் தூக்கத்தைத் துறந்து அரச மொழியான லத்தீனை எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில் நுழைப்பதற்காக பல காவியங்களைப் புனைந்தவர் ஷேக்ஸ்பியர்.
- சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகப் பிரியர். நூலகம் திறந்தவுடன் முதல் நபராக அவர் நுழைந்து, குறிப்புகளை எடுத்து விட்டு மூடும்போது கடைசி நபராகத்தான் வெளியே வருவார். "ஒரு நாள் இரவு என்னிடம் டீ மட்டும் வைத்து விட்டுச் செல்லுமாறு கூறினார். நான் அடுத்த நாள் காலை அவரை வந்து பார்த்தேன். அதற்கு முதல் நாள் நான் எப்படி பார்த்தேனோ அதே இடத்தில் சற்றும் விலகாமல், எந்தவிதமான சோர்வுமின்றி இரவு முழுவதும் உறங்காமல் புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருந்தார். இரவு முழுவதும் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காமல் படிப்பது அம்பேத்கரின் வழக்கம்' என்கிறார் அவரது உதவியாளர் நானக் சந்த் ரட்டு. அவர் தன் வீட்டில் ஒரு நூலகமும் வைத்திருந்தார்.
- தான் எழுதிய புத்தகங்களை வெளியிட டாக்டர் அம்பேத்கர் அரும்பாடுபட்டார். எந்த பதிப்பகத்தாரும், தொழிலதிபரும் அவர் எழுதிய நூல்களை வெளியிட முன்வரவில்லை. "பிச்சை எடுத்தாவது என் நூல்களை வெளியிடுவேன்' என்று அவர் சூளுரைத்தார். ஆனால், சோகம் என்னவென்றால் அவர் தான் எழுதிய நூல்களை அச்சு வடிவில் பார்க்காமலேயே மறைந்து விட்டார்.
- இன்று பல மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் அவரது நூல்கள் ஆராய்ச்சிக் களமாக உள்ளன.
பாரதியார்
- மகாகவி பாரதியார் தம்மிடமிருந்த நூல்களை தனது சொத்தைப் போல பாவித்தார். அவர் இரண்டு பெரிய தகரப் பெட்டிகள் நிறைய தமது நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை வைத்துப் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் தனது குழந்தைகளிடம், "அப்பா தரித்திரன்; உங்களுக்குச் சொத்து ஒன்றும் வைக்கவில்லை என்று எண்ணாதீர்கள்; இதோ தகரப் பெட்டிகளில் இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை' என்றுரைத்து புத்தக வாசிப்பின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினார் மகாகவி.
- ஒவ்வொரு மனிதனும் நல்லபடியாக வாழ மன வளம் செழுமையாக இருத்தல் வேண்டும். இந்தச் செழுமையை மனிதனுக்குத் தருவது புத்தக வாசிப்புதான். எனவேதான், "நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு...' என்றார் ஒளவையார்.
- புதிய உலகத்தை படைக்கும் சக்தியைப் படைக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. மனிதனின் அறிவுப் பெட்டகத்தைத் திறக்கும் திறவுகோல்களாகவும், அறிவுப் பசிக்கு உணவாகவும் புத்தகங்கள் விளங்குகின்றன.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி
- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைய சமுதாயத்தினரிடையே புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. நிலா போன்று ஒளி தந்து இன்பம் தரும் புத்தக வாசிப்பை மறந்து இந்தக் கால இளைய தலைமுறையினர் கணினியிலோ, தொலைக்காட்சியிலோ, செல்லிடப்பேசியிலோ தங்களின் பொன்னான நேரத்தை கரைய விடாமல் இருக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே புத்தக வாசிப்பின் அருமையை கற்றுத் தர வேண்டும்.
- நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இளமையிலேயே ஊட்ட வேண்டும்.
- வாரிசுகளுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் இருந்து நல்ல புத்தகங்களைப் படித்தால், புத்தக வாசிப்பு குழந்தைகளிடமும் தானாக வளரும். இதனால், அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத் திறனும், முடிவு எடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்க வேண்டும். அரசியல் தலைவர்களுக்கு சால்வைகள், பூச்செண்டுகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்கலாம்.
- உலகை படித்துக் கொண்டே இருப்பவர்தான் மேதையாகிறார். அதனால், நாளும் செய்தித்தாளை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு புத்தகப் பைகளில் மாணவர்கள் எடுத்துச் செல்பவை வெறும் தாள்கள் அல்ல; அது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான செல்வங்களைக் கொண்ட புதையல், அறிவுப் பொக்கிஷம். புத்தகத்தில் இருப்பவை வெறும் காகிதங்கள் அல்ல; அவை சொல்லாயுதங்கள்.
நூலகங்கள்
- நாம் வித்தகம் படைக்க, நம் வாழ்க்கையைப் பண்படுத்த, புத்தியைத் தீட்ட உதவும் நல்லாயுதம் புத்தகங்கள். நூலகங்கள் பூந்தோட்டம் என்றால், அங்குள்ள புத்தகங்கள் கருத்து மணம் வீசும் மலர்கள். மலரைச் சுற்றி மணம் இருக்கும். நல்ல புத்தகங்களைச் சுற்றி வாசகர் வட்டம் இருக்கும். புத்தக வாசிப்பினாலேயே அறிவு விசாலமாகும்; அறியாமை விலகும்; ஒழுக்கமான சமூகம் உருவாகும்.
- நல்ல நண்பனாகவும், ஆசிரியராகவும், அறிவுரை வழங்கும் சான்றோனாகவும், பொழுதுபோக்குத் துணையாகவும் விளங்கக் கூடிய திறமை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தரும். மனித மனத்துக்கு, உயர்ந்த சிறந்த ஆரோக்கியமான பயிற்சி அளிக்கக் கூடியவை நூல்கள். எனவேதான், எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல்காப்பியம். நூலறிவைப் பெற்றுஞானத்தை அடைந்து நல்லொழுக்கத்தை மேற்கொண்டு அவ்வழியாய் மேன்மை பெறுவது என்பது அருமையானது. பெரிய தலைவர்களின் வெற்றி ரகசியம் அவர்களின் புத்தக வாசிப்புதான். நல்ல புத்தகங்கள் நல்ல மனிதனை உருவாக்கும்.
- அறிஞர்கள் புதிய உலகைப் படைப்பதற்கும், புரட்சியைப் பாதையைக் காட்டுவதற்கும் புத்தகங்களே வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றன.
- தூக்கிலிடுவதற்கான நேரம் நெருங்கியபோது "லெனின் புரட்சி' என்ற நூலை புரட்சி வீரர் பகத்சிங் படித்துக் கொண்டிருந்தார்; ஆங்கிலேய காவலர்களிடம் அனுமதி பெற்று, அந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைப் படித்து முடித்த பிறகே தூக்குமேடைக்குச் சென்று தனது இன்னுயிரை நாட்டுக்கு ஈந்தார். ஜான்ரஸ்கின் எழுதிய "கடையேனுக்கும் கடைத்தேற்றம்' என்ற நூல்தான் காந்தியடிகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
- கிரேக்க நாட்டின் மாபெரும் சிந்தனையாளரான சாக்ரடீஸூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, விஷச்சாறு அவருக்குத் தரப்படும் வரை அவர் படித்துக் கொண்டே இருந்தார். கார்ல் மார்க்ஸ் தனது "மூலதனம்' எனும் நூல் உருவாக பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை தன் குடும்பத்தை மறந்து நூலகத்திலேயே கழித்தாராம். 1883-ல் அவர் சிந்திப்பதை நிறுத்தும் வரை எழுதிக் கொண்டே இருந்தார்.
- அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் நெருப்பு விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தார்; ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பை தாண்டாதவர். ஒரு முறை தன்னிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க பணமில்லாமல் தனது நண்பரிடம் வாங்கிப் படித்தார். ஆனால், அந்தப் புத்தகம் அவருடைய ஓலை வீட்டில் வைத்திருந்தபோது மழையில் நனைந்து, நைந்துபோய்விட்டது.
- அதனால் கோபமடைந்த அந்த நண்பர் ஆப்ரகாம் லிங்கனை தன் வயலில் மாடுகளுக்குப் பதிலாக ஏர் பூட்டி உழ வைத்தாராம். புதிய எண்ணங்கள், புரட்சிக் கருத்துகள், சிந்தனை மின்னல்கள் ஆகியவை நல்லறிஞர்களுக்கும், புரட்சி வீரர்களுக்கும் புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மனிதனின் அறிவுத் தேடலை நிறைவடையச் செய்பவை நூல்களே.
- தமிழாய்ந்த புலவர்கள் எழுதிய சங்கக் கால நூல்கள், வறுமையிலே உழன்று விளிம்பு நிலையில் வாழும் மக்கள் மேம்பாடு அடைய வறுமையில் வாழ்ந்து மடிந்த அறிஞர்களின் நூல்கள், மக்கள் நலன் காக்க அரசியல் தலைவர்கள் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மக்களைச் செழுமையான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒளிவிளக்குகளாக அமைந்து பல நாடுகளில் புரட்சி ஏற்படுத்தி மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வாசித்தவர்கள் சாதித்துள்ளனர். கண்களும், புத்தகமும் இனம், குலம் பார்ப்பதில்லை.
- புத்தகங்களுடனான உறவு ஆயுள் வரை தொடர்கிறது. எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை எட்டினாலும் அறிவுப் பொக்கிஷமான புத்தகம் படிக்கும் பழக்கத்துக்கு ஈடு இணை வேறு ஏதுமில்லை.
நன்றி: தினமணி (18-07-2019)