PREVIOUS
- - - - - - - - - - - -
பணமதிப்பு நீக்கம், பொதுச் சரக்கு சேவை வரி என்ற இரு பெரிய சீர்திருத்த அலைகளால் இந்தியப் பொருளாதாரமானது பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ‘இரட்டை இலக்க வளர்ச்சி’ என்ற நோக்கத்திலிருந்து தொடர் வீழ்ச்சி என்ற நிலைக்கு பொருளிய வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலக வங்கி மற்றும் மூடிஸ் ஆகியவைகளின் இந்திய மதிப்பீடுகள் சற்றே ஆறுதலை வழங்கியிருக்கின்றன. இக்கட்டுரையில் அவற்றினை அலசுவோமா?
பொருளிய வளர்ச்சி
நாட்டின் பொருளிய வளர்ச்சி வீதமானது மொத்தமாக ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் அல்லது சேவையினைப் பொறுத்து நடப்பு ஆண்டின் உற்பத்தியை அடிப்படை ஆண்டின் உற்பத்தியோடு (Base Year) ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. 2016-17-ஆம் நிதியாண்டினுடைய நான்கு காலாண்டுகளின் வளர்ச்சி வீதமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.
அதாவது ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு நிதியாண்டும் தொடங்குகின்றது; அந்த நிதியாண்டானது மும்மூன்று மாதங்களாகப் பகுக்கப்பட்டு நான்கு காலாண்டுகளாகக் குறிக்கப்படுகின்றது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளும் வீழ்ந்ததால் 2017-18 முதல் காலாண்டு தேக்கத்துடனேயே ஆரம்பமானது எனக் கூறப்படுகின்றது.
சுணங்கியது ஏன்?
2017-18-ஆம் நிதியாண்டின் வளர்ச்சி வீதம் 5.7% ஆகக் குறைந்தது. 2016-17- ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 7.9% ஆக இருந்த வளர்ச்சி வீதமானது 2017-18- ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் 5.7% ஆகச் சரிந்தது துரதிர்ஷ்டவசமானது ஆகும்.
இந்தச் சரிவிற்குக் காரணமாக பருவமழைப் பற்றாமை, உலகப் பொருளாதார மந்தநிலை, பணவிலக்கம் மற்றும் பொதுச் சரக்கு சேவை வரி என்பவை காரணமாகக் கூறப்பட்டன; இவை வளர்ச்சியின் முக்கியமான நான்கு எஞ்சின்களின் வேகத்தை முடக்கியது. அந்த நான்கு எஞ்சின்கள் பின்வருமாறு :
இவற்றில் அரசு முதலீடும், தனி நுகர்வும் தொடர்ந்து நன்கு இயங்கினாலும் மற்ற இரண்டும் தொய்ந்து போயின; ஏற்றுமதியும், தனியார் முதலீடும் குறைந்துவிட்டன.
உலக மந்தநிலை மற்றும் உலகப் பொருளியப் போட்டிகளின் காரணமாக இந்திய ஏற்றுமதி சரிந்தது; தனியார் முதலீடானது கடந்த ஐந்தண்டுகளாகக் குறைந்து வருவதால் தொழில்கள் சுணங்கின; இது ஒரு சுழலாக மாறியதால் தொடர்ந்து வீழ்ந்தது.
கூடவே பணவிலக்கல் கிராமப்புற முறைசாராப் பொருளாதாரச் சந்தையிலும் சிறு-குறு தொழிலிலும் மொத்தத் தனிநுகர்விலும் பாதிப்பை உண்டாக்கியதால் வளர்ச்சி வீதம் வெகுவாகக் குறைந்தது.
மேலும் புதிய வரிச் சீர்திருத்தமும் சேர்ந்துகொள்ள தொழில்துறையும் முதலீடும் முடங்கின; இதை மாற்றிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
புரிந்துகொள்வோம் பொருளியம்
நாட்டின் திடமான வளர்ச்சிக்கு தனியார் முதலீடு இன்றியமையாதது ஆகும், இது கடந்த ஐந்தாண்டுகளாகச் சரிந்து வருகின்றது; தனியார் முதலீடானது வங்கிகளின் வாராக்கடன் சிக்கலால் மேலும் குறைந்துள்ளது, பொருளியச் சுழற்சியில் வளங்கள் (Land) - தொழிலாளர் (Labour) - மூலதனம் (Capital) - தொழில் முனைவு (entrepreneurship) ஆகிய நான்கும் உற்பத்திக் காரணிகள் (factors) எனப்படுகின்றன.
வளத்தை நம்மால் புதியதாக உருவாக்க முடியாது; தனியார் துறைகளின் தேவைக்கேற்ப தொழிலாளர் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; ஆனால் அரசியல் ரீதியாக தொழிலாளர் காரணி மிகுந்து விலைபோகக் கூடியதாகையால் ‘திடீர் மாற்றங்கள்’ சாத்தியமில்லை; தொழில் முனைவுக்காக பயிற்சிகள் - ஊக்குவிப்புகள் என்றவாறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன; எல்லாவற்றுக்கும் மேலாக முதலீடு முதன்மை பெறுகின்றது; உள்நாட்டினர் - வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இலாபம் இருந்தால் மட்டுமே இங்கு முதலீடு செய்வர். அதற்கு நமது பொருளாதாரம் திடமானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்க வேண்டும்.
முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் : பல்வேறு பொருளியக் காரணிகளால் பொருளாதாரம் சரிவிலிருந்தாலும் மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என உலகவங்கியும் மூடிஸ்-ம் வெளியிட்ட மதிப்பீடுகள் இந்நேரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இது தனியார் முதலீடு என்ற காரணியை ஊக்குவிக்கும் முதன்மையான செய்தியாகும்.
எளிதாகத் தொழில் புரிதல் குறியீடு (Ease of doing business)
உலக வங்கி ஒவ்வோராண்டும் எளிதாகத் தொழில் புரிதலை மதிப்பிட்டு நாடுகளை வரிசைப்படுத்துகின்றது. உலகின் 190 நாடுகளில் தொழில் புரிவதற்கான பத்துக் காரணிகளை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையைத் தயாரிக்கின்றது.
இம்மதிப்பீட்டின்படி முதன்முறையாக இந்தியாவானது 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 130-லிருந்து ஒரே ஆண்டில் 30 இடங்கள் முன்னேறியது சிறப்பானது. இந்த அங்கீகாரமானது உலக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஊக்கமளித்துள்ளது; நிகழும் பொருளாதார சுணக்கத்திற்கிடையில், உற்பத்தியின் முக்கியக் காரணியான முதலீடு அதிகமாக கிடைப்பதற்கு இந்த மதிப்பீடு உறுதுணை செய்வதாக அமையும்.
பத்து காரணிகளாகப் பகுத்து உலக வங்கி மதிப்பிட்ட பொருளிய அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் நம் நாட்டின் திட்டங்களின் பலனை புரிந்து கொள்ளலாம்.
ஆக உலக வங்கியின் இந்த மதிப்பீடானது தொழில்கள் மேம்படுவதற்கு இந்தியாவில் ஆரோக்கியமான சூழல் உள்ளதை உறுதி செய்கின்றது.
இந்த அறிக்கையானது டெல்லி - மும்பை ஆகிய மாநகரங்களின் தொழில் நிலைமையைக் கணக்கிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
சுணக்கம் - மந்தம் - வீழ்ச்சி - தேய்வு - சரிவு என்ற பொருளிய பேரியல் குறியீடுகளுக்கு மத்தியில் உலக வங்கியின் ஆறுதல் மதிப்பீடு வந்த சில நாட்களில் மூடிஸ் நிறுவனத்தின் மதிப்பீடும் வெளிவந்தது.
மூடிஸின் மதிப்பீடு
மூடிஸ் (Moody’s Investors Service) என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் உலக நாடுகளின் பொருளிய நிலையை ஆய்ந்து தர மதிப்பிடுகின்றது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் தரத்தை ஒரு படி உயர்த்தியுள்ளது.
‘Baa3’ என்பதிலிருந்து ‘Baa2’ ஆகவும் முதலீடு செய்வதற்கு “சாதமான சூழல்” (Positive) “திடகாத்திரமான நிலை” (Stable) உள்ளது எனவும் உயர்த்தி இருக்கிறது.
இந்த தர உயர்வுக்கு மூடிஸ் குறிப்பிடும் காரணங்கள் பின்வருமாறு :
மேற்கண்ட சாதகமான அம்சங்கள், முதலீடு செய்வதற்கு ஏற்றவை என மூடிஸ் கூறியுள்ளது.
தொழில் சூழல் மேம்பாடு, உற்பத்தி முடுக்கம், உள்நாட்டு - வெளிநாட்டு முதலீடு ஊக்க நடவடிக்கைகள், உறுதியான - குன்றா வளர்ச்சி ஆகியன பேரியல் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கின்றன எனக் கூறியிருக்கிறது.
மூடிஸ் நிறுவனமானது நிலுவையில் உள்ள மூன்று முக்கியமான சீர்திருத்தங்களாக முதலீடுகளின் மேல் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொண்டது.
பொது சரக்கு மற்றும் சேவை வரியின் குறுகியகால சிக்கல்கள் தீர்ந்து நீண்டகாலத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
பணவிலக்கம் - ஆதார் கட்டமைப்பு - நேரடி மானியப் பரிமாற்றம் (DBT) ஆகியன பொருளாதாரத்தில் ஒழுங்குமுறையை மேம்படுத்தியுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒழுங்குமுறைப்படுத்தல் (Formalisation) மற்றும் மின்மயப்படுத்துதல் (Digitalisation) ஆகியவை முக்கியமான முன்னெடுப்புகளாகும்; பேரியல் பொருளிய நிலைத்தன்மையினை (Macro economic stability) பேணுவதற்கு அரசு பின்பற்றக்கூடிய குறைந்த பணவீக்கம், குறையும் பற்றாக்குறை, கவனமான அந்நியச் செலாவணி மேலாண்மை போன்றவை முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலைகள் என மூடிஸ் தெரிவித்துள்ளது.
அரசியலும் பொருளியலும்
வளர்ச்சி சுணங்கியுள்ளது; வெளிநாட்டு மதிப்பீடுகள் முதலீட்டுக்குச் சாதமான சூழல் என்கின்றன; அப்படியென்றால் ஏதோ ஒன்று இடிக்கிறதல்லவா?... அதுதான் பொருளியலும் அரசியலும் மோதும் புள்ளி; உற்பத்தியில் நான்கு காரணிகளில் முதலீட்டுக்குச் சாதகமான பேரியல் பொருளாதார சீர்திருத்தங்கள் நமது நாட்டின் பொருளிய நிலையை உலகளவில் உயர்த்தியுள்ளது.
அதே சமயம் அந்தச் சீர்திருத்தத்தால் ஏற்பட்ட குறுகிய கால நடுக்கங்கள் சிற்றியல் பொருளியலைப் பாதித்துள்ளன. (microeconomics), உற்பத்திக் காரணிகளில் ‘நிலம் - தொழிலாளர்’ துறைகள் மாநில அரசுகளிடமுள்ளன; இவை அரசியல் ரீதியாகத் தொட்டால் சுடுகின்ற துறைகளாகும்; நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தோல்வியடைந்தது இதனால் தான்.
மற்றொரு காரணி ‘காலம்’ ; குறுகிய காலத்தில் சிற்றியல் பொருளாதார விளைவுகள் பெரிய அதிர்ச்சிகளை உண்டாக்கும்; நிலையான - நீண்டகால - நீடித்த குன்றா வளர்ச்சிக்கு (Medium - Long term - Sustainable growth) சாதகமான முன்னெடுப்புகளாக கடந்த மூன்றாண்டு கால சீர்த்திருத்தங்கள் மதிப்பிடப்படுகின்றன.
“பேரியல் பொருளாதாரம் - முதலீட்டு நிலைமைகள் - வெளியுலக மதிப்பீடுகள் - நீண்டகால நிலைத்தன்மை” ஆகியன வெளிநாட்டுப் பார்வையில் இந்தியாவை நிறுத்திப்பார்க்கின்றன. “சிற்றியல் பொருளாதாரம் - நிலம் - தொழிலாளர் - உள்நாட்டு விளைவாசி சிக்கல் - குறுகிய கால விளைவுகள் - ஆகியன அரசியல் தாக்கங்களுடன் உள்நாட்டு மக்களைப் பாதிக்கும்” இறையாண்மைச் சிக்கல் ‘Soverign crisis’ எனப்படுகின்றன.
எனவே தான் பொருளிய வீழ்ச்சியின் பாதிப்புகளைத் தாண்டி விரைவில் நிலைமை சீரடையும் என்று இந்நிறுவன மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மதிப்பீடுகளைக் கடந்து மக்கள் வாழ்விலும் பொருளியல் நலம் புரிய வேண்டும் என்பதே நமது அவா!
- - - - - - - - - - - -