TNPSC Thervupettagam

பெண்களும் பொருளாதார சுதந்திரமும்...

May 27 , 2019 2055 days 1263 0
  • வாழ்க்கைப் பயணத்தில் ஆண்களுக்கு உறுதுணையாக நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பல பிரத்யேக திறமைகள் பொதிந்திருக்கின்றன. அந்தத் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வெளிக்கொணர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுவதுதான் பெண்கள் முன்னேற்றத்துக்கான அடித்தளமாகும்.
பெண்களின் போராட்டங்கள்
  • பெண்களின் பல கட்டப் போராட்டங்களில், குடும்ப அங்கத்தினர்களின் எதிர்ப்பு, கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகள், ஆண்களின் ஆதிக்கம், பொருளாதாரப் பற்றாக்குறை, கடன் வழங்கும் நிறுவனங்களின் தயக்கம் ஆகிய பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. எனவே, பெண்கள் முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதாகச் சாதிக்கக் கூடிய ஒன்றல்ல. பெண்கள் முன்னேற்றம் என்பது நிகழ்ந்து கொண்டிருந்தாலும், பல தடைக் கற்களால் அந்த நிகழ்வின் வேகம், பெரும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.
  • தடைக் கற்களை உடைத்தெறியும் பிரத்யேக ஆயுதம், பெண்களுக்கு உரிய அடிப்படை அதிகாரமும், அங்கீகாரமும்  வழங்கப்படுவதுதான்.  அதிகாரத்தின் முக்கியப் பகுதி, பெண்களுக்கான கல்வி அறிவு ஆகும். குடும்பத்திலும், சமூகத்திலும் தங்கள் உரிமைகளையும், சலுகைகளையும் பற்றிப் புரிந்து செயல்பட  கல்வி அறிவு பெண்களுக்கு பெரிதும் உதவும். சமூகத்தில் தங்களுக்கு வகுக்கப்பட்ட இடம், இழைக்கப்படும் கொடுமைகள், பாலின அடிப்படையில் நிகழும் வேறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வையும், அதனால் விளையும் அநீதிகளைச் சட்டப்படியான வழிமுறைகள் மூலம் தட்டிக் கேட்கவும் கல்வி அறிவு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
  • கிராமங்களைப் பொருத்தவரை, பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற பெரும்பாலான பெண்கள், அவர்கள் சார்ந்த சமூகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற திறமைகளை வெளிப்படுத்த முடியாமல், குடும்பத்திற்குள்ளேயே கட்டுண்டு விடும் கட்டாயச் சூழ்நிலைகள் இன்றும் நிலவி வருவது வருத்தத்துக்குரியது. பெண்களின் முடக்கப்பட்ட திறமைகள், நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருத்த நஷ்டமாகும்.
அறிக்கை 
  • சர்வதேச ஆலோசனை நிறுவனமான "டெலாய்ட்' அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. 2005-ஆம் ஆண்டில் 7 சதவீதமாக இருந்த எண்ணிக்கை, தற்போது 26 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.  தங்கள் திறமைக்கு ஏற்ற ஊதியத்தை பெரும்பாலோர் பெறுவதில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிப்பதாகும்.
  • குடும்பம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமானதாகும். ஆனால், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண், பெண் பாகுபாட்டால், அந்தப் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்று சொல்லலாம். இந்த மாதிரி எதிர்மறையான செயல்பாடுகள் காலப்போக்கில் குறைந்து வருகிறது என்பது, பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவருக்கும் ஓர் ஆறுதலான செய்தியாகும்.
  • தங்களுக்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், உணவுச் சத்து குறைபாடுகள், அடிக்கடி மகப்பேறு, அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கிய குறைவு மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றைப் பெரிதும் பொருட்படுத்தாமல், விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு கிராமப்புற பெண்கள் சளைப்பதில்லை.
புள்ளிவிவரம்
  • சமீபத்திய புள்ளிவிவரப்படி, 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் எந்தவிதமான பயிற்சிக்கும் உள்ளாகாமல், தங்கள் உடல் ஆரோக்கியத் தகுதிக்கு அப்பாற்பட்ட பணிகளில் ஈடுபட்டு, கடும் உழைப்பால் தங்கள் குடும்பங்களின் பொருளாதாரத்தை தோளில் சுமந்து, சந்ததியினருக்கு கல்வி அறிவை அளித்து, அதன் மூலம் பல சமூக மாற்றங்களுக்கு காரணமாகத் திகழ்கிறார்கள். ஆனால், அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில்லை. பணிக் களங்களில் ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களின் திறமைகள் குறைவாக மதிப்பிடப்பட்டு, அதனால், அவர்களுக்கான ஊதியக் குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
  • உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெற முடியாதது, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தில் ஏற்படும் பெரும் இழப்பீடாகும். அங்கீகரிக்கப்படாத அதிகாரங்களில், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பது அரியதுதான். தங்கள் உழைப்புக்கான ஊதியத்தை கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதுதான் ஒரு பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாறான செயல்பாடுகள் குடும்ப சச்சரவுகளை விளைவிக்கும் என்பதை அறிந்த பெண்கள், தங்கள் பொருளாதார உரிமைகளை குடும்ப விருப்பத்துக்கு ஏற்ப விட்டுக் கொடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.
  • பொருளாதார சுதந்திரம் என்ற உரம் இல்லாத அதிகாரம், ஏட்டுச் சுரைக்காய் போன்றதுதான். அந்த உரத்தை போதிய அளவில் இட்டு, பெண்கள் முன்னேற்றம் என்ற ஆலமரத்தை தழைக்கச் செய்வதற்கான தயக்கம், நம் சமூகத்தில் இன்றளவிலும் வேரூன்றி இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
  • ஒவ்வொரு பெண்ணின் உள்ளிருப்புத் திறமைகளை ஒருங்கிணைத்து, அந்தத் திறமைகளை அவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் விதங்களில் தொழில் பயிற்சிகளை வழங்கி, சுய தொழில் தொடங்குவதற்கான நிதி ஆதாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டால், பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு அது வித்திடும்.
ஆலோசனைகள்
  • எந்தவிதமான பிரச்னைகளிலும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு தெளிவாகச் சிந்தித்து, பிரச்னையின் தரத்தை அலசி ஆராய்ந்து, தீர்க்கமான ஆலோசனைகளை வழங்கும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள். ஆனால், அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டும் ஆண்கள், அந்த ஆலோசனைகள் மூலம் பெறப்படும் வெற்றிகளை தங்களுக்கே உரியதாக்கிக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை; தோல்விக்கான பழியை ஆலோசனை வழங்கியவர் மீது திணிக்கவும் தயங்குவதில்லை என்ற மனநிலை நிறைந்த சமூகத்தில்  பெண்களுக்கான அங்கீகாரங்கள் முடக்கப்படுவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
  • உலக பெண்கள் எண்ணிக்கையில், 7.5 சதவீத இடத்தை இந்தியப் பெண்கள் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில், அவர்களுக்கான வாழ்க்கைத் தரம், கல்வி அறிவு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றில்  கணிசமான முன்னேற்ற சுழற்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும், மிதமான வேகத்தில்தான்  சுழற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • ஆண், பெண் விகித குறியீட்டில்  உலக அளவில் இந்தியா 135-இல், 113-ஆம் இடத்தை வகிக்கிறது. நம் நாட்டில், ஆண், பெண் எண்ணிக்கை 1000: 914 என்ற அளவில் குறைந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் சமம் என்று கருதப்படும் நிலை 1 என்று என்ற கணக்கீட்டில், பெண்களுக்கு உரிய அதிகாரம் மற்றும் அங்கீகாரம் வழங்கும் தரவரிசையில், இந்திய பெண்கள் 3 நிலையில் உள்ளனர். பெண்கள் முன்னேற்றப் பாதையில், அவர்கள் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டிய நிலையை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
  • பெண்களுக்கான அதிகாரம் மற்றும் அவர்களுடைய திறமைக்கான அங்கீகாரம் வழங்கப்படுவதில் நிலவும் தயக்கங்களால் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டில், அவர்களுடைய பங்கு வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. உலக அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்கு 37 சதவீதம்; சீனா மற்றும் ஐரோப்பிய பெண்களின் பங்கு 40 சதவீதம். இந்த முக்கியப் பொருளாதார காரணியில், குறைந்த பங்களிக்கும் நாடுகளின் பட்டியலில் 17 சதவீத அளவுடன் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
  • பெண்களுக்கான அதிகாரம் என்பது, சட்டங்களை இயற்றி அமல்படுத்தும் அரசு நிர்வாகம் வரை பரவ வேண்டும்.  நாட்டு நிர்வாக அமைப்புகளில், பெண்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற பலமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டாலும், அந்தக் கோரிக்கைகள் அறியப்பட்ட காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்திய கம்பெனி சட்டம் 2013-இன்படி, பட்டியலில் அடங்கிய ஒவ்வொரு கம்பெனியிலும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாகக் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் அங்கத்தினராவது நியமிக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை சற்று ஆறுதலான விஷயமாகும்.
அதிகாரம் 
  • பெண்களுக்கான அதிகாரம் என்பதில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடங்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதில் கடுமையான நடைமுறைகள் வகுக்கப்பட்டால்தான்,  குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். "பெண்கள் முன்னேற்றம் என்பது உலக நலனுக்கு மிக முக்கியமான ஒரு காரணி;
  • ஓர் இறக்கை உடைய பறவையால் பறந்து சாதிக்க முடியாது' என்று பெண்ணினத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகப் பதிவிட்ட சுவாமி விவேகானந்தரின் கூற்றில் உள்ளடங்கிய  சாராம்சத்தை அனைவரும் புரிந்து செயல்பட்டால், அதுதான் பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும் செயல்பாடுகள் போதுமான வேகமெடுக்க பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி(27-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்