TNPSC Thervupettagam

பெருக வேண்டும் ஏற்றுமதி

February 25 , 2019 2133 days 2165 0
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ஆம் ஆண்டில் 7.2%-ஆக உயரும் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
  • முன்னதாக,  6.7%-ஆக மட்டுமே வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
  • இந்த நிலையில் உலக அளவில் பார்க்கும்போது, மேற்கூறிய 7.2 சதவீத வளர்ச்சி  சிறப்பான வளர்ச்சி என்றுதான்  சொல்லவேண்டும்.
  • அதே நேரம், கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 3.74%-ஆக குறைவான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது என்பதே.
  • பொறியியல், தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயல்பாடு சுணக்கமாக இருந்ததையடுத்து, ஏற்றுமதியில்  சரிவு  ஏற்பட்டுள்ளது  என்பது  வெளிப்படை.
  • மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  2018-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்தே  காணப்பட்டது.
  • நாட்டின் இறக்குமதியின் அளவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • சாதாரணமாக, ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்; இறக்குமதி குறைய வேண்டும் என்பதுதான் நமது இலக்காக இருக்கவேண்டும்.
  • காரணம், ஏற்றுமதி அதிகரிக்கும்போது அந்நியச் செலாவணி அதிக அளவில் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
  • ஏற்றுமதிப் பொருள்களின் தேவையால் உற்பத்தி பெருகும். தொழிற்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களின் வாழ்க்கைத் தரம்  உயரும்.
  • மாறாக, இறக்குமதி குறைந்தால் குறைவான அளவில் அந்நியச் செலாவணி வெளியேறும். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.
  • எனவே, தங்கம் போன்ற பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கை அமைக்கப்படும்.
  • தற்போது இறக்குமதி குறைந்திருப்பதற்குக் காரணம் பெட்ரோலியப் பொருள்
  • களின் விலை குறைந்திருப்பதே ஆகும்.
  • இது வரவேற்கத்தக்கது. ஆனால், கூர்ந்து கவனிக்கும்போது தொழிற்சாலைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும், வெளிநாட்டு மூலப் பொருள்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது எனத் தெரிகிறது.
  • இது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
  • இது ஒருபுறம் இருக்க, தற்போதைய நிலையில் ஏற்றுமதி சரிவுக்கு என்ன காரணம்? அதைச் சீர் செய்வது  எப்படி  என்பதே  முக்கியமான  பிரச்னை ஆகும்.
  • உலக நாடுகளில் பொருளாதார சுணக்க நிலை நீடிக்கிறது என்பது  உண்மை.
  • இதனால், இந்தியாவின் பாரம்பரியமான ஏற்றுமதிப் பொருள்களான பொறியியல், தோல் பொருள்கள், ஆபரணங்கள், ரப்பர், காபி, தேயிலை, ஜவுளி உள்ளிட்ட பல பொருள்களைக் கொள்முதல் செய்வதில் சர்வதேச அளவில்  சுணக்கம்  ஏற்பட்டுள்ளது.
  • இந்த நிலையை எதிர்கொள்வதற்கும், நமது ஏற்றுமதியை எப்போதும் போல் பெருக்குவதற்கும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளும், ஏற்றுமதியாளர்களும் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
  • உதாரணமாக, இந்தியாவில் பல பெரிய துறைமுகங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறை ("எலக்ட்ரிக் டேடா இன்டர்சேஞ்ச்') படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
  • இதன் மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டு வந்த கால விரயம் குறைவதற்கு இப்போது வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.
  • உலக வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் துறைமுக வழிமுறைகளை நிறைவு செய்வதற்கு சீன ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் நேரத்தைவிட நான்கு மடங்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
  • உலகில் ஏற்றுமதி செய்யும் 190 நாடுகளின் வரிசையில், இந்தியா 146-ஆவது இடத்தில்  உள்ளது  என்கிறது  உலக  வங்கியின்  ஆய்வறிக்கை.  எனவே மேற்கூறிய மின்னணு தகவல் பரிமாற்ற நடைமுறையை முழுமையாகவும்  துரிதமாகவும் செயல்படுத்துவது அவசியம்.
  • சில மாதங்களுக்கு முன்பு வரை ஏற்றுமதியை ஜி.எஸ்.டி. நடைமுறைகள்  பாதிப்பதாக புகார்கள் வந்தன.
  • அண்மையில் பல்வேறு பொருள்களுக்கு "சரக்கு மற்றும் சேவை வரி'  (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம்.
  • அதே போன்று ஏற்றுமதியாளர்கள் அன்றாடம் சந்திக்கும் நடைமுறை தாமதங்கள் அகற்றப்பட வேண்டும்.
  • உதாரணமாக, ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்யும் மூலப் பொருள்களுக்கு அவர்கள் செலுத்திடும் வரித் தொகையில் திரும்பக் கொடுக்க வேண்டிய தொகையை அரசு  விரைந்து பட்டுவாடா  செய்ய  வேண்டும்.
  • ஏற்றுமதியாளர்களுக்கான விதிமுறையை அடிக்கடி மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து கிட்டத்தட்ட 200 அரசாணைகளைப் பிறப்பித்திருக்கிறது என்று ஏற்றுமதியாளர்கள் சம்மேளனங்கள் தெரிவிக்கின்றன.
  • இனியாவது இதுபோன்ற சூழல் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • காலம் காலமாக இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியைச் சார்ந்துள்ளது.
  • ஆனால், தற்சமயம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) ஏற்றுமதியின் பங்கு வெறும் 10%-ஆகக் குறைந்துள்ளது.
  • அதே நேரம் தென்கொரியாவை எடுத்துக் கொண்டால், அந்த நாட்டின் ஜி.டி.பி.யில்,  ஏற்றுமதியின் பங்கு 40%-க்கு மேல்  அதிகரித்துள்ளது.
  • சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலையும் இந்தியாவின்  ஏற்றுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்பது மிகை அல்ல.
  • ஏனெனில், சீனாவின் ஏற்றுமதியும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்த நாட்டின் ஜி.டி.பி. சில ஆண்டுகளுக்கு முன் 13% என இருந்தபோது, அந்த நாட்டின் ஏற்றுமதியின் பங்கு 35%-ஆக இருந்தது.
  • அந்த நிலை  இப்போது  பழங்கதையாகிவிட்டது.
  • சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ள இந்தத் தருணத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஏற்றுமதியை நாம் அதிகரிக்க வேண்டும்.
  • மாறாக, வங்கதேசம் போன்ற சின்னஞ்சிறு நாடுகள் தங்கள்  ஏற்றுமதியை அதிகரித்துள்ளன.
  • இவை அனைத்துக்கும் சிகரமாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தற்சமயம் பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது, வங்கி கடன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள்தான் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
  • கடந்த காலங்களில் ஏற்றுமதியைப் பெருக்குவதில் வங்கிக் கடன் வசதி முன்னிலை வகித்தது.
  • ஆனால், அண்மைக் காலங்களில் வங்கிகளில் ஒருபுறம் வாராக் கடன் தொகை அதிகரித்துள்ளது.
  • இன்னொருபுறம் வங்கிகளில் கடன் மோசடிகள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இந்தப் புதிய சூழலில் வங்கிகளின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • இது பொதுவாக சிறு தொழில்களையும், குறிப்பாக ஏற்றுமதியாளர்களையும்  நேரடியாகப்  பாதிக்கிறது.
  • வாராக் கடனை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய கடன்கள் வழங்குவதற்கு அரசுடமை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
  • இதனால் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வியாபாரம் நசியத் தொடங்கியது.
  • அண்மையில்தான் 11 வங்கிகளில் மூலின்று வங்கிகளுக்கான தடை உத்தரவு  விலக்கிக்  கொள்ளப்பட்டுள்ளது.
  • இன்னொரு பக்கம், வங்கிக் கடன்களுக்கான வட்டிச் சுமை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் ரெப்போ ரேட்டை 6.30%-லிருந்து 6.25%-ஆகக் குறைத்தது.
  • இந்த நடவடிக்கை பெரிதும் வரவேற்கப்பட்டது.
  • ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்த பிறகும் இதுவரை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தை இம்மியும் குறைக்கவில்லை. இது நியாயம் அல்ல.
  • வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்  வட்டி விகிதம் உடனடியாக  கால்  சதவீதம்  குறைக்கப்பட வேண்டும்.
  • மூன்றாவதாக, வங்கிகளின் நிதி ஆதாரத்தைக் கொண்டு, புதிய கடன்கள் வழங்குவதைக் குறைத்துக்கொண்டு அந்தப் பணத்தை அரசு பாண்டுகளில் குறைந்த வட்டியில் வங்கிகள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.
  • அது தவிர ரிசர்வ் வங்கியில்  சட்டப்படி வைத்திருக்க வேண்டிய பாண்டுகளில் (எஸ்.எல்.ஆர்.) நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக வங்கிகள் முதலீடு செய்கின்றன.
  • "ரிஸ்கை' தவிர்ப்பது மட்டுமே வங்கிகளின்  நோக்கம்.
  • அதாவது, புதிய கடன் வழங்கினால் புதிதாக வாராக் கடன் பெருகி விடும் என்ற அச்சத்தில் கடன் கொடுப்பதையே குறைத்திடும் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
  • இது வங்கிகளின் தொழில் தருமம் ஆகாது. கடன் கொடுப்பதில் முன் எச்சரிக்கையும், கூடுதல் கவனமும், நிபுணத்துவமும்தான் தேவையே தவிர கடன் கொடுப்பதைக் குறைப்பதும், குறிப்பாக சிறு தொழில் மற்றும் ஏற்றுமதிக் கடன் கொடுப்பதை தவிர்ப்பதும் சரியல்ல.
  • இந்திய ஏற்றுமதியின் 40% சிறுதொழில்களின்  பங்களிப்பு  என்பதை  மறக்கக் கூடாது.
  • மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்தும் வகையில் 2018-ஆம் ஆண்டில் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்தது.
  • அப்படி இருந்தும் இதே காலகட்டத்தில், வங்கிகளின், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் புதிய கடன் தொகை 15  முதல் 20%  சரிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாத நிதி மற்றும் கடன் கொள்கையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கி இவ்வளவு முக்கியமான விஷயத்தை அறிவித்தால் மட்டும் போதாது.
  • அதற்குரிய சீர்திருத்த நடவடிக்கையைகாலம் தாழ்த்தாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
  • இந்திய பொருளாதாரத்தின் உயிர் நாடி ஏற்றுமதி ஆகும்.
  • அதனை மேம்படுத்துவதற்கு அரசு மற்றும் ஏற்றுமதியாளர்கள் முனைப்புக் காட்டும் அதே நேரம், வங்கிகளுக்கும் இதில் கூடுதல் பொறுப்பு உண்டு என்பதை வங்கிகள் உணர  வேண்டும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்