TNPSC Thervupettagam

பொருளியல்: சொல்லும் பொருளும்

December 21 , 2017 2541 days 4801 0
பொருளியல்: சொல்லும் பொருளும்

அண்மைச் செய்திகளில் வெளிவந்த முக்கியமான கலைச்சொற்களின்   தொகுப்பு

- - - - - - - - - - - - -

1. மக்கள் தொகை ஈவு (Demographic Dividend) 
  • ஐக்கிய  நாடுகளின் மக்கள் தொகை நிதியமானது (UNFP) இதை கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறது. “வேலைக்குச் செல்லும் வயதுடைய மக்கள்தொகையின் விகிதமானது (15 முதல் 64 வரை) வேலைக்கு செல்லாத மக்கள் தொகையின் விகிதத்தை விட (14 வயதிற்கு கீழ் - 65 வயதிற்கு மேல்) அதிகமாக மாறும் போது மக்கட்தொகை மாற்றத்தால் ஏற்படும் பொருளிய வளர்ச்சி” என்பதாகும்.
  • தொழிலாளர் குழுவில் [work force] சேரும் பணியாளரின் எண்ணிக்கையானது அவர்களைச் சார்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் போது பொருளாதாரத்தில் ஏற்படும் முடுக்கம் எனலாம்.
  • மக்கள் தொகையில் இளம் வயதினர் மற்றும் முதியோர்களுக்கு இடையேயான மக்கள் தொகை பங்கீடு ஆனது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சாத்தியமாக உள்ளது.  அதனால் இது “மக்கள் தொகை பரிசு” என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியா தற்போது இந்த மக்கள் தொகை பங்கீட்டுக் கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
  2.  எளிதில் வியாபாரம் செய்தல் (Ease of Doing Business)
  • ஒரு நாட்டில் தொழில் செய்வதன் எளியதன்மையை விளக்குகின்றதும், அது பற்றிய பல வரைகூறுகளை உள்ளடக்கியதுமான ஒரு குறியீடே “தொழில் எளிமைத் தரம்” குறித்த “எளிதாகத் தொழில் புரிவதற்கான குறியீடு” ஆகும்.
  • இக்குறியீடு உலக வங்கியால் வெளியிடப்படுகிறது.
  • பல்வேறு நாட்டுப் பொருளாதாரங்களை, அவற்றின் முக்கிய மதிப்புகளினுடைய வித்தியாசங்களின் அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.
  • தொழில் செய்வதற்கு உகந்த ‘சிறந்த நடைமுறைகளை’ அடிப்படை அலகுகளாகப் பயன்படுத்தி, வரையளவு மதிப்பு கொண்ட பொருளாதார நாடுகளின் (Benchmark Economics) மதிப்புகளுடன் ஒப்பிட்டு அந்த மதிப்பிலிருந்து எவ்வளவு தூரம் ஒரு நாடானது தரவரிசையில் பின்னால் உள்ளது என இக்குறியீடானது மதிப்பிடுகிறது.
  • இக்குறியீடானது கட்டுமான அனுமதி, நிறுவனப்பதிவு கடன் கிடைக்கும் தன்மை, வரிசெலுத்தும் அமைப்பு முறை போன்ற பல்வேறு அளவுகோலை கொண்டுள்ளது.
  • நாடுகள் இக்குறியீட்டின்படி மதிப்பிடப்படுகின்றன.
  3. சங்கேத இணையப் பணம் (Crypto Currency)
  • சங்கேதப் பணம் என்பது நமது சாதாரண செலாவணியைப் போன்று பரிவர்த்தனை செய்யத்தக்க டிஜிட்டல் சொத்தாகும்.
  • இது பாதுகாப்பிற்காக மறையீட்டியல் [Cryptography] நுட்பத்தைப் பயன்படுத்துகின்றதும், போலியாக உருவாக்க முடியாததுமான டிஜிட்டல் அல்லது மெய்நிகர் [Virtual] செலாவணி ஆகும்.
  • இது எந்தவொரு அரசு நிறுவனத்தாலும் வெளியிடப்படுவதில்லை; ஆக அரசின் தலையீடோ – கட்டுப்பாடுகளோ இந்த நாணயத்துக்கு இல்லை.
  • பண சலவை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றிற்கு சங்கேத இணையப் பண பரிவர்த்தனை ஏதுவாக உள்ளது.
  • உதாரணம் : பிட்காயின், வைட்காயின், நேம்காயின், பிபிகாயின்.
  4. மிகவும் உகந்த நாடு (Most Favored Nation) 
  • மூன்றாவது நாட்டுடன் ஒப்பிட்டு பாகுபாடு ஏதும் இல்லாதவாறு வணிகம் செய்வதற்கு ஒரு நாட்டினால் தனது சக வணிகக் கூட்டாளிக்கு வழங்கப்படும் அங்கீகாரமே ‘மிகவும் உகந்த நாடு’ ஆகும்.
  • வரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (GATT) முதலாவது சரத்து மிகவும் உகந்த நாடு அங்கீகாரத்தினைப் பற்றி பேசுகிறது.
  • உலக வர்த்தக மையத்தின் கீழ் அதனுடைய ஒரு உறுப்பு நாடானது மற்றொரு  உறுப்பு நாட்டினை  பாரபட்சமாக நடத்தக் கூடாது.
  • ஒரு உறுப்பு நாடானது தன்னுடைய வர்த்தக உறவு நாட்டிற்கு ஏதேனும் சிறப்பு அங்கீகாரம் வழங்கினால் அதனை உலக வர்த்தக மையத்தின் கீழ் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் வழங்க வேண்டும்.
  • 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு மிகவும் உகந்த நாடு என்ற அங்கீகாரத்தினை இந்தியா வழங்கியுள்ளது.  ஆனால் அதே அந்தஸ்தினை பாகிஸ்தான் இந்தியாவிற்கு வழங்க மறுத்து வருகிறது.
  5. ‘நெருக்கித் தள்ளுதல்’ விளைவு (Crowdingout Effect)
  • அரசின் செலவுகள் அதிகரிப்பதனால் நிதிப்பற்றாக்குறை உயரும்; இப்பற்றாக்குறையானது நிதிவளத்தை உறிஞ்சிக் கொள்ளும்; இதனால் வட்டிவீதம் உயரும்; இந்த நிகழ்வினால் தனிநபர் நுகர்வுக்கும் தனியார் முதலீட்டிற்கும் தேவைப்படும் நிதியளிப்பு குறைவதே “நெருக்கித்தள்ளல் விளைவு” எனப்படும்.
  • சில நேரங்களில் அரசாங்கமானது பொருளாதார செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்காக விரிவாக்க நிதிக் கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது.
  • விரிவாக்க நிதிக் கொள்கையினால் ஏற்படும் பற்றாக்குறையை அதிகரிக்கப்பட்ட வரி மற்றும் கடன் பெறுதல் (அல்லது) இரண்டின் மூலமாகவும் நிதி அளித்து உயர்த்தலாம்.
  • இது வட்டி விகிதத்தை உயர்த்தும்,
  • தனியார் முதலீட்டு முடிவுகளை உயர்த்தப்பட்ட வட்டிவிகிதம் பாதிக்கும்.
  • இந்த விளைவு பொருளாதார வருவாயை குறைக்கும் தன்மையுடையது.
  6. மசாலா பத்திரம் (Masala Bond)
  • வெளிநாட்டு நிதிச்சந்தையில் நிதி திரட்டுவதற்கு அந்நாட்டுச் செலாவணியினைப் பயன்படுத்தாமல் ரூபாயை முகமதிப்பாகக் குறித்து இந்திய நிறுவனங்கள் வெளியிடும் பத்திரம் “மசாலா பத்திரம்” எனப்படும்.
  • இது அடிப்படையில் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு பெரு நிறுவனங்கள் பயன்படுத்தும் கடன் கருவியாகும்.
  • ரூபாய் முகமதிப்பில் அமைந்த பத்திரங்களைப் பயன்படுத்துவதால் சந்தையின் ஏற்ற இறக்க இடர்களிலிருந்து இந்திய நிறுவனங்கள் காக்கப்படுகின்றன. வெளிநாட்டுச் செலாவணியில் வாங்கினால் ஏற்றஇறக்க அலைவுகளுக்கு உள்ளாக நேரிடும்.
  • ரூபாயின் உலகமயமாக்கல் மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகளை விரிவாக்குதல் ஆகியவற்றிற்கு மசாலா பத்திரம் உதவுகிறது.
  • இந்தப் பத்திரமானது லண்டன் பங்குச் சந்தையால் (London Stock Exchange-LSE) வணிகம் செய்யப்படுகிறது. இது இந்தியாவில் வணிகம் செய்யப்படவில்லை.
  • முதல் மசாலா பத்திரமானது உலக வங்கியின் முதலீட்டு நிறுவனமான சர்வதேச நிதி நிறுவனத்தால் (International Finance Corporation-IFC) வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் மசாலா பத்திரம் போல சீனாவில் டிம்-சம் பத்திரம் என்ற ஒன்று இருக்கிறது. டிம்-சம் என்றால் ஹாங்காங்கின் புகழ் வாய்ந்த உணவு வகையாகும். ஜப்பான் பத்திரம் என்பது சாமுராய் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
  7. டச்சு நோய் (Dutch disease)
  • பெரும் அளவிலான எண்ணெய் வளங்களின் கண்டுபிடிப்பு போன்ற நிகழ்வுகளினால், வெளிநாட்டுச் செலாவணி திடீரென ஒரு நாட்டில் குவிவதனால் அந்தப் பொருளாதாரத்தின் மீது உருவாகும் எதிர்மறை விளைவே டச்சு நோய் எனப்படும்.
  • அந்நியச் செலவாணியானது அதிகமாக குவிவதினால், ஒரு நாட்டின் நாணய மதிப்பு வேகமாக உயருகிறது. இதனால் நாட்டின் இதரப் பொருட்கள், சர்வதேசச் சந்தையில் மதிப்பிழக்கின்றன.
  • மேலும் அந்நாட்டின் நாணய மதிப்பேற்றத்தினால் இறக்குமதிப் பொருட்கள் மலிவாக கிடைக்கின்றன. இதனால் உள்நாட்டிலுள்ள தொழில்துறை முற்றிலும் பாதிக்கிப்படுகிறது.
  • நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்தக் காரணிகளால் உற்பத்தித் துறையின் வேலை வாய்ப்புகள், குறைந்த செலவுள்ள நாடுகளுக்கு செல்கிறது. இதனால் அதிக வேலை வாய்ப்பின்மை ஏற்படும்.
  • 1960-ல் டச்சு நாட்டிலுள்ள வடகடலில் கண்டறியப்பட்ட இயற்கை வாயுவால் டச்சுப் பொருளாதாரம் சிக்கலடைந்தது. அதன் காரணமாக டச்சு நோய் என்ற சொல் உருவானது.
  8.பண மதிப்பு நீக்கம் (Demonetization)
  • ஒரு நாட்டில் பயன்பாட்டிலிலுள்ள, குறிப்பிட்ட நாணயத்தின், சட்டப்பூர்வ அங்கீகாரத்தை விலக்கிக் கொள்ளுதலே பணமதிப்பு நீக்கம் எனப்படும்.
  • எப்பொழுதெல்லாம் நாட்டின் நாணயச் சந்தையில் மாற்றம் தேவைப்படுகிறதோ அப்பொழுது பண மதிப்பு நீக்கம் தேவைப்படுகிறது. தற்போதைய வடிவத்திலுள்ள பணங்கள் புழக்கத்திலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு, அவை  புதிய நோட்டுகள் அல்லது நாணயங்களால் சமன் செய்யப்படுகின்றன.
  • சில சமயங்களில், நாட்டின் பழைய நாணயங்கள் முற்றிலுமாக புதிய நாணயங்களால் மாற்றப்படுகின்றன.
  • பண மதிப்பு நீக்கத்திற்கு எதிர்மறையானது தான் பணமதிப்பு ஏற்றுதல். சட்டப்படி ஒரு செலாவணிக்கு செல்லுபடியாகத்தக்க அதிகாரம் வழங்குதல் பணமதிப்பு ஏற்றுதல் எனப்படும்.
  • நாடுகள் தங்களின் உள்ளுர் நாணயங்களை பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான காரணம் என்ன?
    • பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு .
    • ஊழல், கள்ளநோட்டு மற்றும் வரி ஏய்ப்பு போன்ற குற்றங்களை எதிர்த்து போராடுவதற்கு.
    • பணச் சார்புடைய பொருளாதாரத்தை ஊக்கப் படுத்துவதை தவிர்க்க.
    • வணிகத்தை எளிதாக்க.
    • இந்திய அரசாங்கமானது 2016 ஆம் ஆண்டு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.
  9. பணப்பழுதடைதல் வீதம் (Soil Rate)
  • பயன்படுத்த முடியாதவாறு கிழிந்த / பழுதடைந்த / சிதைந்த பணத்தாள்கள் / நாணயங்கள் திரும்பவும் மத்திய வங்கிக்கு [RBI] வந்தடையும் வீதம் பணப்பழுதடைதல் வீதம் எனப்படும்.
  • மத்திய ரிசர்வ் வங்கியின் தரவின்படி குறைந்த மதிப்புடைய பணங்களின் பழுதடைதல் வீதம் 33% ஆக உள்ளது. மாறாக ரூ. 500 – 22% மற்றும் ரூ. 1000 – 11% (பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னர்) என்றவாறு உள்ளது.
  • கொள்கை ரீதியாக நமது பணமும் – அந்நியப் பணமும் ($) ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டால் அவற்றின் பழுதடைதல் வீதம் சமமாக இருக்கும்.
  • ஒரு குறிப்பிட்ட முகமதிப்புடைய பணம் குறைந்த பழுதடைதல் வீதத்துடன் இருந்தால், அது பயன்படுத்தப்படாமல் கருப்புப் பணமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று புரிந்து கொள்ளலாம்.
  10.பொருளாதார சுனாமி (Economic Tsunami)
  • நிதிச்சந்தை / பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த சிக்கல் அல்லது இடரைத் தூண்டும் சில நிகழ்வுகளின் தொகுப்பே பொருளாதாரச் சுனாமி எனப்படும்.
  • இயற்கை சுனாமியைப் போலவே பொருளாதார சுனாமியால் ஏற்படும் விளைவானது நீண்ட தூரம் உள்ள நாடுகளின் பகுதிகளையும் வெகுவாகப் பாதிக்கும்.
  • 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டாம் நிலை அடமானச் சந்தை சிக்கல் என்பது அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி ஆகும். இது ஒரு பொருளாதார சுனாமிக்கு எடுத்துக்காட்டாகும்.
  • அமெரிக்காவில் நிதி நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிய வீட்டுக் கடனை செலுத்தத் தவறியதன் விளைவாக நிதி நிறுவனங்கள் பெரும் நெருக்கத்தை சந்தித்தன. மேலும் இதனால் வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பொருளாதார இடர்ப்பாடுகள் ஏற்பட்டன.
 

- - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்