TNPSC Thervupettagam

மக்களாட்சி தழைக்க...

April 3 , 2019 2097 days 1868 0
  • ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற மகத்தான கருத்துக்கு ஏற்ப, தேர்தலை வெறும் சம்பிரதாயமாக நினைக்காமல் சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களால் மக்களை ஆளும் உண்மையான பிரதிநிதிகள் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் தேர்தல் மூலம் சமதர்ம அமைப்பை ஜனநாயகம் காண முடியும்.
1937
  • 1937 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வண்ணப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மஞ்சள் (காங்கிரஸ்), சிவப்பு (நீதிக் கட்சி), பச்சை (முஸ்லிம் லீக்), ஊதா, கருநீலம் (சுயேச்சை) ஆகிய 5 பெட்டிகள் இருக்கும். எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்ய 17ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரலாம் என 1961-ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் பிரிவு 49-ஜி-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதன்படி வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று 17ஏ விண்ணப்பத்தில், வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு  அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம்.
வழக்கு
  • இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தில் விருப்பம் இல்லாதது குறித்து தனியாக பட்டன் அமைக்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. தேர்தல் களத்தில் திருட்டு வாக்குகள் போடுதல் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
  • ஹரியாணா மாநிலம் மேஹம் தொகுதியில் நடந்த தேர்தல், தொலைக்காட்சி மூலம் மக்கள் மன்றத்தில் அம்பலமானது. அது இன்றுவரை தொடர்கிறது.
  • தேர்தல் அத்துமீறல்களைக் கண்காணிக்க நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ரஜினி கோத்தாரி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் இன்டிபென்டன்ட் இன்ஷியேட்டிவ் என்ற ஒரு மக்கள் மன்றத்தை உருவாக்கி இருந்தனர்.
  • இந்த அமைப்பு மூலம் தேர்தலில் ஜனநாயக நெறிகளுக்கு அடையாளம் காட்டக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஊடகங்கள், படித்தவர்கள் மற்றும் விவரம் தெரிந்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த அமைப்பு செயல்படாமல் ஆகிவிட்டது. தேர்தல் நேர்மையாக நடக்க உரிய சீர்திருத்தங்கள் அவசியம்.
  • எனவே, கல்வி, குற்றப் பின்னணி, சொத்து விவரம் ஆகியவற்றை வாக்காளருக்கு வெளிப்படையாக வேட்பாளர் தெரிவிக்க வேண்டும் என ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
பிரமாணப் பத்திரம்
  • தங்களுடைய முழுமையான விவரங்களை பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விவரங்கள் குறிப்பிட்டுத் தெரியப்படுத்தவில்லையென்றாலும், அந்த விவரங்கள் மறைக்கப்பட்டாலும் வேட்புமனு நிராகரிக்கப்படும். முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமானால், தேர்தல் முறையில் பல மாற்றங்களைச் செய்தாக வேண்டும். 57 ஆண்டுகள் அனுபவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என்று தோன்றுகிறது.
  • அதிகார பலத்தையும், பண பலத்தையும், ஆள் பலத்தையும் கொண்டு தேர்தலைச் சந்திக்கும் வேட்பாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணத்தைக் கொண்டு வாக்குகளை வாங்குவது, குண்டர்களைக் கொண்டு திருட்டு வாக்குகளைப் போடுவது ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். தேர்தல் களத்தில் மதம், ஜாதி என்ற அடிப்படையில் பிரசார உத்திகள் கையாளப்பட்டு வாக்குகள் பெறுவதைத் தடுக்க வேண்டும்.
இடைத் தேர்தல்
  • ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், அந்தத் தேர்தல் எந்தவிதக் காரணமுமின்றித் தள்ளி வைக்கப்படாமல் ஜந்து மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
  • தேர்தல் காலத்தில் ஆட்சியிலுள்ள கட்சி, அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தாத வகையில், அனைத்துக் கட்சி கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றி பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும்போது அந்த மாநிலத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற கட்சிகளிடம் கூறி அவர்களிடையே ஒத்த கருத்தை உண்டாக்கிய பின் நியமிக்க வேண்டும்.
  • சிறையில் குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால், சிறையில் இருந்து போட்டியிடலாம். சிறையில் அல்லது காவலில் உள்ள குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற வகையில் பிரதிநிதித்துவச் சட்டத்தைத் திருத்த வேண்டும். தேர்தல் தொடர்பான பிரச்னைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், வழக்கு முடிவுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தற்போது தேர்தல் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்புதான் தீர்ப்பு கிடைக்கிறது.
  • மாநிலங்களவை உறுப்பினர்களாக அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.  இந்த மாதிரி தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய பல குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. ஆனாலும், குழுக்கள் பரிந்துரை செய்த தேர்தல் சீர்திருத்தம் முழு வெற்றியை அடையவில்லை. ஆரோக்கியமான அரசியல், நல்லாட்சி அமைய நல்லவர்கள், வல்லவர்கள் இருத்தல் வேண்டும். தற்போதைய தேர்தலில் பண பலமும், குண்டர் பலமும் முக்கியமான அங்கங்களாக இருக்கின்றன.
  • இவை ஒழிய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும், 1998-இல் இந்திரஜித் குப்தா தலைமையில் அமைந்த குழு பரிந்துரைத்த வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும் போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தத்துக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுக்கள் குறித்து பார்ப்போம்:
  1. கூட்டு நாடாமன்ற குழுவில் தேர்தல் சீர்திருத்த அறிக்கை - 1971 (இது ஜெகநாத ராவ் தலைமையில் செயல்பட்டது). இந்த அறிக்கை 18.1.1972-இல் வழங்கப்பட்டது;
  2. தார்குண்டே குழு;
  3. தினேஷ் கோஸ்வாமி குழு 1990;
  4. ஓரா குழு 1993;
  5. இந்திரஜித் குப்தா குழு 1998;
  6. சட்டக் கமிஷன் அளித்த தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிக்கை  1999;
  7. அரசியலமைப்புச் சட்ட திருத்த தேசியக் குழு 2000;
  8. 8.தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த அறிக்கை 2004;
  9. இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த அறிக்கை  2008 மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகள் எனப் பரிந்துரைகளும், அறிக்கைகளும்தான் உள்ளன.செயல்பாடுகள் இல்லை.
  • இன்றைக்கு எலெக்ஷன் ஃபார் சேல் என வெளிப்படையாக தயக்கமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். வாக்குகளை வாங்குதல், தேர்தல் சந்தை, வாக்குகளைப் பெறுவதற்கான பட்ஜெட் ஆகிய வார்த்தைப் பதங்களையும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
  • இப்படி நிலைமைகள் நீடித்தால் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டிப் படிப்பதைப் போன்று, எம்.எல்.ஏ., எம்.பி. பதவியையும் பணம் கட்டி எந்தவித தியாகமும் இல்லாமல் பிடித்து விடலாம்.
  • வியாபாரம், தொழில் என்ற நிலைக்கு அரசியல் வந்து விடும். ஒரு கட்டத்தில் நல்லவர்கள், நேர்மையாளர்களுக்கு அரசியலில் களம் இல்லை என்ற நிலை வந்து விடும்.
  • தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், இடைத் தேர்தல்கள் ஆறுமாத காலத்துக்குள் நடத்தவேண்டும் என்றும், தேர்தல் வழக்குகளை உடனே முடிக்க வேண்டும், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை நீதிபதி தார்குண்டே குழு செய்தது.
மற்ற நாடுகளில்
  • ஒரு நபர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது. தேர்தல் காலத்தில் அதிகாரிகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளை கோஸ்வாமி குழு செய்தது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசாங்கமே  ஏற்றுக் கொள்வது போன்று, இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருடைய செலவை ஏற்றுக்கொண்டு அவருடைய பிரசாரக் கருவிகள், சுவரொட்டிகள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு ஆகும் செலவுகளை மனதில் கொண்டு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்பது இந்திரஜித் குப்தா குழுவின் பரிந்துரை.
  • தேர்தல் முறையில் 1,000 சீர்திருத்தங்கள் செய்தாலும் மக்களாட்சி தழைத்து ஆரோக்கியமான அரசியல் செயல்பட வேண்டுமானால், சரியான வேட்பாளருக்கு  வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.  தகுதியும் திறமையும் மிக்க வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து போட்டியிடச் செய்வது அரசியல் கட்சிகளின் கடமை.தகுதி இல்லாதவர்களை நிராகரித்து மக்களாட்சிக்கு மகத்துவம் சேர்ப்பது வாக்காளர்களின் கடமை. இந்தியக் குடியரசு பற்றி ஓர் ஆறுதலான விஷயம் என்னவென்றால், பக்கத்தில் உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் மாதிரி இல்லாமல் நம்மிடம் ஸ்திரத்தன்மை உள்ளது என்பதுதான்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்