TNPSC Thervupettagam

மக்கள்தொகைப் பெருக்கம் இந்தியாவுக்கு நல்லதல்ல

June 26 , 2019 1980 days 981 0
  • மக்கள்தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 2027-ல் சீனாவை மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரம், சமூக நடவடிக்கைகளுக்கான துறை மதிப்பிட்டிருக்கிறது; இது நாம் பெருமைப்படக்கூடிய சாதனை அல்ல. அத்துடன் இதனால் அரசு நிர்வாகத்துக்கு சமூக, பொருளாதாரத் துறைகளில் கடும் சவால்கள் ஏற்படப்போவதும் நிச்சயம். கட்டுப்படுத்தியே தீர வேண்டியது இது.
அடித்தளக் கட்டமைப்புகள்
  • நிலப்பரப்பு குறைவானதாகவும் மக்கள்தொகை அதிகமானதாகவும் உள்ள இந்தியாவுக்கு, மக்கள்தொகைப் பெருக்கம் என்பது மேன்மேலும் சவால்தான். கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதியை அரசும் தனியாரும் முதலீடு செய்ய வேண்டும். உணவு தானிய விளைச்சலை அதிகரிக்க வேண்டும். கோடிக்கணக்கானவர்களுக்குக் குடியிருப்புகள் வேண்டும். சாலைகள், போக்குவரத்து, மின்னுற்பத்தி, கழிவுநீர் அகற்றல் போன்ற அடித்தளக் கட்டமைப்புகளை மேலும் விரிவுபடுத்தியாக வேண்டும். ஆண்டுதோறும் புதிதாக 50 லட்சம் பேர் வேலை தேடி சந்தைக்கு வருவதால் அவர்களுக்கு நியாயமான ஊதியத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவது எளிதான செயல் அல்ல. வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் அனைவருக்கும் மாதாந்திர ஊதியம் வழங்குவது சமூகப் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கை என்றாலும் அதற்கு மேலும் நிதியாதாரம் தேவைப்படும். அத்துடன் வன வளங்களையும் நீர் வளங்களையும் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாத்துப் பெருக்கி வைக்க வேண்டும். எனவே, வளர்ச்சி என்பதற்கான அர்த்தமே மாறுகிறது.
நாமிருவர்-நமக்கு ஒருவர்
  • 1970-ல் 55.52 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை 2019-ல் 136.64 கோடியாக உயர்ந்தது. இது 146% அதிகரிப்பு. இதே காலத்தில் சீன மக்கள்தொகை 82.76 கோடியிலிருந்து 143.37 கோடியாக உயர்ந்தது. சீனாவில் பொதுவுடைமை அரசு ஆட்சியில் இருப்பதால், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று அரசால் நெருக்கடி தரப்பட்டு, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. பிள்ளைப்பேறு விகிதம் சீனாவில் 1965-70-களில் 6.3 ஆக இருந்தது, 1970-75-களில் 5.4 ஆகக் குறைக்கப்பட்டது. அப்போது ‘நாமிருவர்-நமக்கிருவர்’ கொள்கை பின்பற்றப்பட்டது. பிறகு ‘நாமிருவர்-நமக்கு ஒருவர்’ என்று சுருக்கப்பட்டது.
  • இந்தியாவில் இதே காலத்தில் 5.7 என்பதிலிருந்து 4.85 ஆகக் குறைந்தது. இப்போது 2.24 ஆக இருக்கிறது. ஆனால், எல்லா மாநிலங்களிலும் இது சமமாக இல்லை. தமிழ்நாடு, வங்கத்தில் 1.6 ஆகவும் பிஹாரில் 3.3, உத்தர பிரதேசத்தில் 3.1 ஆகவும் இருக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்; ஆனால், கட்டாயப்படுத்தி அல்ல. தென்னிந்திய மாநிலங்களை முன்னுதாரணமாகக் கொண்டாலே அடுத்த 25 ஆண்டுகளுக்குள் பெரிய மாற்றத்தை வட இந்திய மாநிலங்களில் கொண்டுவந்துவிட முடியும். மத்திய அரசு அதற்கான உத்வேகத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை(26-06-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்