TNPSC Thervupettagam

மாறட்டும் பெண் மீதான சமூகத்தின் பார்வை!

March 8 , 2019 2120 days 2021 0
  • ஒரு நாட்டின் ஆண்களும் பெண்களும் முழு ஆற்றலுடனும் திறன்களுடனும் வாய்ப்புகளுடனும் முழுமையான வாழ்க்கை வாழ்வதைத்தான் மனித வள மேம்பாடு என்று சொல்ல வேண்டும். ஆனால், இங்கு ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு ஆற்றலும் திறன்களும் இருந்தாலும், ஆண்களுக்கு இணையாக வாய்ப்புகள் இல்லை என்பதுதான் உண்மை.
  • இன்றைக்கு மகளிர் தினம். முதலில் அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம் என்றுதான் அறியப்பட்டது. தற்போது அதை மகளிர் தினம் என்று மட்டுமே குறிக்கிறார்கள். ஒரு வேளை எல்லாப் பெண்களுமே, ஏதோ ஒரு விதத்தில், வீட்டிலோ அல்லது பணியிடங்களிலோ வேலை பார்ப்பவராக இருப்பதால் இப்படி மாறியிருக்கலாம். நகர்ப்புறங்களில் படித்த, அலுவலகங்களில் ஆணுக்குச் சமமான அளவில் வேலை பார்க்கும் பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, முன்பைவிட பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். உண்மை அதுவல்ல!
அங்கீகாரமற்ற உழைப்பு
  • உழைக்கும் மகளிரில் வெறும் 11% பெண்கள் மட்டுமே, ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளில் பணிபுரிகின்றனர். மீதமுள்ள 89% பெண்கள் வேலை உத்தரவாதமில்லாத, சமமான ஊதியமில்லாத, பாலியல் துன்புறுத்தல் நிறைந்த சூழலிலேயே வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒருங்கிணைக்கப்படாத துறைகளில் பெரும்பாலும் சம ஊதியம் கிடைப்பதில்லை. சம வேலைக்குத்தானே சம கூலி என்று, வேலைகளையே இது ஆணுக்கானது, இது பெண்ணுக்கானது என்று பிரித்துவிடுகிறார்கள். சட்டத்திலிருந்து தப்பும் உத்தி இது.
  • காலங்காலமாகக் கட்டுமானத் துறையில் உழைக்கும் ஒரு பெண்ணால், தன் அனுபவ அறிவால் மேஸ்திரியாக முடியாதா? நாள் முழுவதும் குனிந்து நாற்று நடும் பெண்களால் டிராக்டர் ஓட்டக் கற்றுகொண்டு ஓட்ட முடியாதா? படப்பிடிப்புத் தளங்களில்கூட யாரோ சமைத்ததைப் பரிமாறும் ஆணைவிட அத்தனை பாத்திரங்களையும் தேய்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்குக் கூலி குறைவுதான். திரைப்படங்களில் ஆணுக்கு இணையான அளவு காத்திரமான பாத்திரத்தில் நடிக்கும் எந்த நடிகைக்கும் ஆண் நடிகர் அளவு சம்பளம் தரப்படுவதில்லை. ஆக, இங்கு திறமையைவிட பாலினம்தான் முக்கியத்துவம் பெறுகிறது. என்ன இருந்தாலும் பெண்தானே என்று இன்னமும் இரண்டாம் வரிசையில்தான் பெண்ணை நிறுத்துகிறது சமூகம்.
மேம்பட்ட வாழ்வுக்கான சமன்
  • இப்படியான இரண்டாம் தர நிலைப்பாடு, குடும்பம் தொடங்கி நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறது. இதைக்
  • கணக்கில் கொண்டுதான் இந்த ஆண்டுக்கான மகளிர் தினத்துக்கான கருத்தாக்கம் மேம்பட்ட வாழ்வுக்கான சமன் (பேலன்ஸ் ஃபார் பெட்டர்’) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமன் தேவைப்படுவது பெண்களின் மேம்பாட்டுக்காக மட்டுமல்ல. சமுதாயத்தின் மேம்பட்ட வாழ்வுக்கான முழக்கம் இது. சமூகத்தில் சரிபாதி அளவில் உள்ள பெண்களின் வாழ்க்கை முடக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்தச் சமூகம் எப்படி மேம்பட முடியும்?
  • பொருளீட்டாத பெண்ணை “வீட்டில் சும்மா இருக்கிறாள்” என்று பேசும் சமூக நிலைதான் இன்றும் தொடர்கிறது. வீட்டைப் பராமரிப்பதில் பெண்ணுடைய உழைப்பின் நேரம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. பெண்கள் உலகின் வேலைப் பளுவில், இரண்டில் ஒரு பங்கை செய்கிறார்கள். 10-ல் ஒரு பங்கை ஊதியமாகப் பெறுகிறார்கள். 100-ல்
  • ஒரு பங்கினர்தான் சொத்துக்கு உரிமையாளராக இருக்கிறார்கள். ஆக, மேம்பட்ட வாழ்வுக்கான சமன் என்பதற்கு முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டியது பெண்களின் கண்ணுக்குத் தெரியாத, கணக்கில் வராத உழைப்பைத்தான்!
  • குடும்பம் தொடங்கி நாட்டின் ஆட்சி அமைப்பு வரை, பெண்களைச் சிந்திக்கத் தெரிந்தவர்களாக அங்கீகரிப்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. “உனக்கு ஒண்ணும் தெரியாது வாயை மூடு” என்று வீடுகளில் ஒலிக்க ஆரம்பிக்கும் குரல் பெண் மீதான மிகப் பெரிய புறக்கணிப்பு. அதனால் ஆணுக்குச் சமமான அளவில் அறிவுத்திறன் இருந்தாலும், உயர்மட்டங்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் சம அளவில் அளிக்கப்படுவதில்லை.
  • இதையெல்லாம்விட முக்கியமான பிரச்சினை பாதுகாப்பின்மைதான். பாலியல் சீண்டல்கள் தொடங்கி பலாத்காரம் வரை நீள்கின்ற இந்த வன்முறை, சிறுமிகள், பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தை அச்சுறுத்துகிறது. உறவினர், தெரிந்தவர், தெரியாதவர் என எல்லாத் தரப்பிலும் இருந்து பெண் குழந்தைகள் தொடங்கி, வயதான மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானால், அது அந்தக் குடும்பத்தின் ஆண்களையும் பாதிக்கிறது. ஆண்கள் பற்றிய அவநம்பிக்கை பெண்களிடம் உருவாகிறது. இது ஆண்-பெண் இருவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.
பாரபட்சம்
  • ஆண் மையச் சமூகத்தில் பாலியல் கொடுமை என்பது ஒரு அத்துமீறலாகப் பார்க்கப்படுவது இல்லை. குழந்தை பிறந்ததிலிருந்து தொடங்கி ஆண்களையும் பெண்களையும் சமூகம் வெவ்வேறு விதமான மதிப்பீடுகளோடு வளர்க்கிறது. குடும்பங்களும் இதைத்தான் வாழ்வியல் முறையாக ஏற்றுக்கொள்கின்றன. ஆண், பெண் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் காட்டப்படும் வேறுபாடு, பாரபட்சம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தட்டு கழுவுவதிலிருந்து, உள்ளாடைகளைத் தோய்த்துத் தருவது, ஊட்டச்சத்தான உணவை அதிகமாக அளிப்பது, எவ்வளவு சம்பாதித்தாலும் பெண், தன் தேவைகளுக்காக கணவரின் அனுமதியைக் கோரவேண்டிய சூழல் என இந்தப் பாலின அதிகாரம் ஒவ்வொரு செயலிலும் கடைபிடிக்கப்படுகிறது.
  • பெண்கள் கட்டப்பட்டிருந்த முளைக்குச்சியின் கயிற்றின் நீளம் முன்பைவிட இன்றைக்கு அதிகரித்திருக்கிறது என்று சொல்லலாமே தவிர, பெண்கள் கட்டுகள் அற்று, சுதந்திரமாக இயங்க முடியாத சமூக கட்டமைப்பில்தான் நாம் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறோம்.
மாற்றத்தைத் தொடங்குவோம்
  • மகளிர் தினத்தை வெறும் கொண்டாட்ட தினமாக மட்டும் குறுக்கிவிடாமல், வெற்றுக் கோஷங்களுக்கான தினமாக மட்டும் கருதிவிடாமல், உண்மையான சமத்துவத்துக்கான செயல்பாட்டை எல்லா மட்டங்களிலும் அமல்படுத்த உறுதி எடுப்போம்.
  • வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கும் வீட்டுப் பொறுப்புகளைச் சொல்லித் தருவோம். பெண் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அறச்சீற்றத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வளர்ப்போம்.
  • பாடத்திட்டங்கள், ஊடகங்கள் என அனைத்திலும் ஆண்-பெண் சித்தரிப்பில் சக மனிதர்கள் என்ற பார்வையை முன்வைக்க முயல்வோம். கவர்ச்சிப் பாவை எனும் சித்தரிப்பும் வேண்டாம். தாய் என்ற பீடமும் வேண்டாம்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட, படாத என அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதோடு சம அந்தஸ்தையும் ஊதியத்தையும் பெற்றுத்தரப் போராடுவோம்.
  • பாலியல் சீண்டல் தொடங்கி பலாத்காரம் வரை அனைத்தும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் பெண் நடுங்கி ஒடுங்க வேண்டும் என்ற கற்பித்தலோடு ஆணையும் பெண்ணையும் வளர்ப்பதற்குத் முற்றுப் புள்ளி வைப்போம்.
  • 2021-ல் வருகிற மக்கள்தொகைக் கணக் கெடுப்பிலாவது பெண்களின் கண்ணுக்குத் தெரியாத உழைப்பு நாட்டின் ஜிடிபியில் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்