TNPSC Thervupettagam

மாற்றை யோசிக்கலாமே!

July 15 , 2019 1941 days 957 0
  • நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் துணிந்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் ஒன்று பெட்ரோல் டீசலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பது என்கிற திட்டம் . 2030-க்குள் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள் என்று தொடங்கி அனைத்து வாகனங்களையும் பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரத்தில் இயக்குவது என்பதுதான் நீதி ஆயோக்கின் இலக்கு.
மின்சார வாகனங்களுக்கான கடன்
  • மத்திய பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான கடனுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு ரூ. 5 லட்சம் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மின் ஏற்ற நிலையங்களை ("சார்ஜிங் ஸ்டேஷன்') அமைப்பதற்கும், மின்சாரத்தில் இயங்கும் சரக்கு வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எரிசக்தி துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதத்திலேயே குறைந்த கட்டணத்தில் விரைவாக பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக மின் ஏற்று நிலையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளையும் அடிப்படை தர நிர்ணயத்தையும் அறிவித்திருக்கிறது.
  • இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் 80% இரண்டு சக்கர வாகனங்கள் என்ற நிலையில், மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் குறைந்த விலையில் அமையும்போது கணிசமான வரவேற்பைப் பெறக்கூடும். அதேநேரத்தில் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும், சார்ஜ் குறைந்த பேட்டரிகளைக் கொடுத்துவிட்டு சார்ஜ் இருக்கும் பேட்டரிகளாக மாற்றிக் கொள்வதற்கும் வழிகோலப்பட்டால் மட்டுமே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறும்.
எத்தனால்
  • வாகனம் நிறுத்தும் இடங்கள், மின் ஏற்று நிலையங்கள், விடுதிகள் என்று பரவலாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படாமல் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வெற்றி அடைவது ஐயப்பாடுதான். கடந்த வாரம் எத்தனாலில் இயங்கும் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல பன்னாட்டு மோட்டார் வாகன நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது.
  • மின்சாரத்தில் இயங்கும் வாகனம் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என்று தோன்றவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் வரிச் சலுகை மட்டுமே மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ஆர்வத்தைத் தூண்டி விடாது.
அமேரிக்காவில்
  • அமெரிக்காவில் மின்சார வாகனங்களை வாங்கினால் 7,500 டாலர் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. அதன் விளைவாக மின்சார வாகனங்களின் விற்பனை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகையும் குறைவு, மின்சார வாகனங்களை இயக்குவதற்கான கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. சீனாவில் 13 லட்சத்துக்கும் அதிகமான மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் சாலைகளில் ஓடும் நிலையில், இந்தியாவில் வெறும் 6,000 வாகனங்கள் மட்டுமே இதுவரை சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும் "டெஸ்லா', இந்தியாவிலும் உற்பத்தியைத் தொடங்க இருப்பதால் மின்சார வாகனங்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படும்.
  • அதனால், இந்தியாவின் பெரு நகரங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு அதிகரிக்கக் கூடும்.
  • மின்சார வாகனங்கள் குறித்து சில கேள்விகளை எழுப்பத் தோன்றுகிறது. கரியமில வாயுவால் ஏற்படும் காற்று மாசைக் குறைப்பதுதான் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதன் நோக்கம். இந்தியாவைப் பொருத்தவரை நமது மின்சாரத் தேவை அனல் மின்சக்தி நிலையங்களின் மூலம்தான் அதிகமாக ஈடுகட்டப்படுகிறது. மோட்டார் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையைக் குறைத்து, அதற்குப் பதிலாக அனல் மின்சக்தி நிலையங்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கப் போகிறோமா? பேட்டரி தொழில்நுட்பம் மூலம் மின்சார வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
  • செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள்தான் மின்சார வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்த பயன்பாட்டின்போது லித்தியம் பேட்டரிகள் சூடாகிவிடும். ஆயிரக்கணக்கில் மடிக் கணினிகளும், செல்லிடப்பேசிகளும் சூடாகி வெடித்ததாலும், தீ பிடித்ததாலும் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. லித்தியம் அல்லாத வேறு பேட்டரி தொழில்நுட்பம் இல்லாத நிலையில், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது.
மாற்று
  • பெட்ரோல், டீசல், மின்சாரத்துக்கு மாற்றாக எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அமையக்கூடும். அமெரிக்காவில் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்கள் வரவேற்புப் பெற்றன. ஆனால் சோளத்தின் விலை அதிகரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு சோளத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.
  • பிரேஸில் நாட்டில் வாகனப் பயன்பாட்டிற்கு அனேகமாக எத்தனால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அங்கே கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேஸிலைப் போல, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலில் இயங்கும் வாகனத் தயாரிப்புக்கு, மின்சாரத்தில் இயங்கும் வாகனத்திற்கு தரப்படும் முக்கியத்துவத்தை இந்தியாவும் வழங்க முற்படுவதுதான் புத்திசாலித்தனமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

நன்றி: தினமணி (15-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்