TNPSC Thervupettagam

மாவட்ட சீரமைப்பில் ஆய்வு தேவை

July 24 , 2019 1998 days 1270 0
  • தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்றும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் மாவட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  பெரிய மாவட்டங்களைப் பிரிப்பது நிர்வாகத்தைச் சீராக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவ்வாறு புதிய மாவட்டங்களை உருவாக்கும்போது சீரான, முறையான கொள்கை பின்பற்றப்பட வேண்டும். இதற்கு முன்பாக தமிழ்நாட்டின் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்தால் நமக்கு தெளிவான புரிதல் கிடைக்கும்.
  • பாண்டிய, சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதிகளுக்காக பல பகுதிகளாக  தமிழ்நாடு பிரிக்கப்பட்டிருந்தது. நாடுகள், வளநாடுகள், கூற்றங்கள் என இவை அழைக்கப்பட்டன. பின்னர் நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாளையப்பட்டுகள் என்ற பெயரில் பல பகுதிகளைப் பிரித்து ஆண்டனர்.
ஆங்கிலேயர்
  • ஆங்கிலேயர் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, ஜமீன்தார்கள் ஆண்ட பகுதிகளைத் தவிர எஞ்சிய பகுதிகளைப் பல மாவட்டங்களாகப் பிரித்து ஆண்டனர். பழைய சென்னை மாகாணம் என்பது ஐதராபாத், மைசூர், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை ஆகிய சமஸ்தானப் பகுதிகள் நீங்கலாக எஞ்சியிருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய மாகாணமாக விளங்கியது.
  • நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில், பெரிய மாவட்டமாக இருக்கிறது என்ற காரணத்தினால் வடார்க்காடு மாவட்டத்திலிருந்து திருத்தணி, புத்தூர், சித்தூர், திருப்பதி, திருக்காளத்தி, பல்லவனேரி ஆகிய தமிழ் தாலுகாக்கள் பிரித்தெடுக்கப்பட்டு தெலுங்கு மாவட்டமான கடப்பையிலிருந்து மதனப்பள்ளி, வாயல்வாடி ஆகிய இரு தாலுகாக்களுடன் இணைத்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
விளைவு
  • இதன் விளைவாக, பிற்காலத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது திருப்பதியை நாம் இழக்க நேர்ந்தது. அந்த நாளில் சித்தூர் மாவட்டம் உருவானபோதே தமிழர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால், திருப்பதியை இழந்திருக்க மாட்டோம். எனவே, நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கும்போது முன்னெச்சரிக்கையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல், பின்விளைவுகள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
  • மொழிவழி மாநிலம் உருவாவதற்கு முன் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை, நீலகிரி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, திருவாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
விடுதலைக்குப் பின்
  • இந்தியா விடுதலை பெற்றபோது புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதி திருச்சி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை தனியாகப் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டது. சேலத்திலிருந்து தர்மபுரி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டது. பிற்காலத்தில், தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியின்போது பல மாவட்டங்கள் இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அவை பிரிக்கப்படும்போது எத்தகைய முறையைப் பின்பற்றியோ அல்லது நன்கு ஆய்ந்து சீராகவோ செய்யப்படவில்லை.
  • அரசியல் காரணத்திற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ மாவட்டப் பிரிவினை நடைபெற்றது. எனவே, இவை முழுமையாக ஆராயப்பட்டு மறுசீரமைப்பு  செய்யப்பட வேண்டும்.
  • 1971-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பல கட்டங்களில் மாவட்டங்கள்  இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள், ஜாதித் தலைவர்கள் பெயர்கள் இந்த மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்டன. இதன் விளைவாக ஆட்சி மாறிய போதெல்லாம் மாவட்டப் பெயர்களும் மாற்றப்பட்டன. ஜாதித் தலைவர்கள் பெயரால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், சில ஜாதித் தலைவர்களின் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும் ஜாதிச் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
  • விளைவு, புதிதாகச் சூட்டப்பட்ட பெயர்களையெல்லாம்  நீக்கி விட்டு பழைய பெயர்களிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படும் என அறிவிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது. மாவட்ட ஆட்சியாளர்களின் பணிகளும் விரிவடைந்திருக்கின்றன. நில வருவாய்ப் பணியுடன் திட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் போன்ற பல புதிய பொறுப்புகளை அவர்கள் ஏற்றுள்ளனர்.
பதவிகள்
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதி நிர்வாகமும் அவர்கள் கையில் இருந்தது. அது மட்டுமே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், மாவட்ட வருவாய் அலுவலர் பதவி, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பல உதவியாளர்கள் போன்ற ஏராளமான புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.
  • எனவே, மாவட்ட நிர்வாகங்களை முற்றிலுமாகச் சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட மாவட்ட எல்லைகள் முற்றிலுமாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டியது அவசியம். மாவட்டங்களைச் சிறிதாக்கினால் நிர்வாகத் திறன் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. மாவட்டங்களைப் பிரிப்பதால் நிர்வாகச் செலவு கூடும் என்பது சரியல்ல. சிறிய மாவட்டங்கள் உருவாகும்போது பல பதவிகள் தேவையில்லாமல் போய்விடும்.மேலும், நிர்வாகச் செலவைக் குறைக்க முடியும்.
    • மாவட்டங்களை பிரிக்கும்போது ஒரே சீரான கொள்கையை கீழ்க்கண்டவாறு பின்பற்ற வேண்டியது அவசியம்.
    • மக்கள் நலன், நிர்வாக வசதி, இயற்கையாக ஒருங்கிணைந்த பகுதிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட புனரமைப்பு அமைய வேண்டும்;
    • ஒரு மாவட்டத்தில் சராசரி 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் இருக்கக் கூடாது;
    • ஒருமாவட்டத்தில் 10 அல்லது 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குமேல் இருக்கக் கூடாது (சில நகராட்சிகள் உள்பட);
    • ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒரு மாவட்டமாக இருக்கும் வகையில் மாவட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்;
    • மாவட்ட எல்லைகளே நாடாளுமன்றத் தொகுதி எல்லையாகும் வகையிலும், இரண்டின் எல்லைகளும் ஒருங்கிணையுமாறும் இயற்கையான நிலவியல், மக்கள்தொகை, நிர்வாக வசதி, பாசன ஏற்பாடுகள் போன்ற அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பிரிக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்தால், புதுச்சேரி நீங்கலாக தமிழகத்தில் 39 மாவட்டங்களை அமைக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன; மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்படும் நிலையில் உள்ளன என்பதை நினைவுபடுத்திக் கொண்டால், இந்த எண்ணிக்கை அதிகமானதல்ல என்பது தெளிவாகும். இதன் மூலம் பலவகையிலும் நிர்வாகத் திறனை மேம்படுத்த முடியும்.
  • நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியாளரோடு இணைந்து தங்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உரியவற்றைச் செய்யமுடியும்.
  • தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இயங்கும் மாவட்ட வளர்ச்சிக் குழுவில் அந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட குறைந்த அளவு 100 பேருக்குக் குறையாமல் அங்கம் வகிக்கின்றனர்.
  • சிறிய மாவட்டங்களாகும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறையும். நிர்வாகத் திறன் மேம்படும். மாவட்ட வளர்ச்சிக் குழுவுக்கு அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரே தலைமை வகிக்க வேண்டும். அந்தக் குழுவின் செயலாளராக மாவட்ட ஆட்சித் தலைவர்  இருக்க வேண்டும். இதன் மூலம் இந்தக் குழு ஜனநாயக வடிவம் பெறும். ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
தொகுதி வளர்ச்சி நிதி
  • இதைத் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு ரூ.25 கோடியை மத்திய  அரசு ஒதுக்குகிறது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடியை தமிழக அரசு ஒதுக்குகிறது. அந்த வகையில் 6 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ரூ.30 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆக, மத்திய-மாநில அரசுகளால் ஆண்டுதோறும் மொத்தம் ரூ.55 கோடி அந்த மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக தனியாக அளிக்கப்படுகிறது. அது முழுமையாக அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும்.
  • இவ்வாறு மாவட்டங்களைப் பிரிப்பதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் காவல் துறைத் தலைவர், முன்னாள் பாசனத் துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழலியல் அறிஞர், நீரியல் அறிஞர், நிலவியல் அறிஞர் ஆகியோர் அடங்கிய மாவட்டச் சீரமைப்புக் குழு ஒன்றை நியமித்து அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை அறிந்து மாவட்டங்களைத் திருத்தி அமைப்பது சிறப்பாக இருக்கும்.
  • புதிய பொலிவை நிர்வாகம் பெறும். மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி குறையும். மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வழி ஏற்படும். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 32 மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாவட்ட  சீரமைப்புக் குழு சென்று அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும்  அறிய வேண்டும்.
  • ஏற்கெனவே உள்ள மாவட்டங்களின் எல்லைகளில் மாற்றம், சில பகுதிகளைப் பிரித்து அண்டை மாவட்டத்தில் சேர்த்தல் போன்ற கோரிக்கைகளையும் ஆராய்ந்து ஒட்டுமொத்த  தமிழகத்தையும் 39 மாவட்டங்களாக மறு புனரமைப்பு செய்யவேண்டும்.

நன்றி: தினமணி (24-07-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்