TNPSC Thervupettagam

மின் வாகனங்களுக்கு இந்தியா எப்போது மாறும்?

July 4 , 2019 2018 days 1032 0
  • பெட்ரோலியம் சார்ந்து பெரும் நெருக்கடி ஒன்றில் சிக்கவிருக்கிறது இந்தியா. ஏற்கெனவே 80% பெட்ரோலை நாம் இறக்குமதி செய்துவரும் நிலையில், பெரும் வாகன உற்பத்தி பெருத்த சங்கடத்தை நோக்கி நாட்டை நகர்த்துகிறது. தீர்வுகளில் ஒன்றாக வாகனங்களை மின் சக்தி நோக்கித் திருப்பும் முடிவை யோசிக்கிறது மத்திய அரசு. நல்ல முடிவுதான். ஆனால், அதற்கு முன் நிற்கும் சவால்களைக் களையவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் வாகனம் மீது கவனம் ஏன்?
  • பெட்ரோல், டீசல் வாகனத் தயாரிப்புகளைக் குறைக்கவும் பேட்டரி வாகனப் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு இரண்டு வலுவான காரணங்கள் உள்ளன. முதலாவது, கச்சா பெட்ரோல் இறக்குமதிக்கு வெளிநாடுகளை நம்ப வேண்டியிருக்கிறது. 2015 மார்ச் இறுதி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 21,00,23,289 மோட்டார் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஏழு மாநிலங்களில் தலா ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. ஒரு நாளைக்குச் சராசரியாக 44,00,000 பீப்பாய் எரிபொருளை இந்திய வாகனங்கள் குடிக்கின்றன.
  • மாதந்தோறும் நுகரப்படும் டீசல் மட்டும் 66 லட்சம் டன். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் பெட்ரோல், டீசலை நாம் பயன்படுத்துகிறோம். இதைக் கட்டுப்படுத்துவது அவசியம். இரண்டாவதாக பெட்ரோல், டீசல் பயன்பாட்டால்தான் சுற்றுச்சூழல் கேடு அதிகம். இப்போதே இந்தியாவில் உள்ள நகரங்களில் 14 நகரங்கள் உலக அளவில் காற்று மாசடைவில் உச்சத்தை எட்டிக்கொண்டிருப்பதாக உலக அளவில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. மின் பயன்பாடு இந்தச் சூழல் மாசைக் குறைக்கும் என்று அரசு நம்புகிறது.
  • வெளியே அதிகம் பேசப்படாத மூன்றாவது காரணம், எதிர்காலச் சந்தை. உலக அளவிலும் ஆசியாவிலும் நமக்குப் பெரிய பொருளாதாரப் போட்டியாளராக இருக்கும் சீனா, 2018 வரையில் 3 கோடி மின் கார்களை விற்றுவிட்டது. 2021-ல் உலகின் 70% மின்சார கார்களை நாமே தயாரித்துவிட வேண்டும் என்று சீனா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. வளர்ந்துகொண்டேயிருக்கும் இந்தத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை உறுதிசெய்வதை அரசின் முடிவு உத்வேகப்படுத்தும். இப்போது இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் 0.01% அளவுக்கே மின் வாகனங்கள் ஓடுகின்றன.
  • மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் அரிதான பெட்ரோலியப் பண்டங்களை வரம்பின்றி இறக்குமதி செய்வதால் ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்புகளைத் தவிர்க்கவும் மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் மின்சார பேட்டரிகளால் இயங்கும் வாகனங்களின் தயாரிப்புக்கு மாறியாக வேண்டும் என்று மத்திய அரசின் திட்டமிடலுக்கான அமைப்பான ‘நிதி ஆயோக்’ கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி இப்போதிருக்கும் நிறுவனங்கள் மாறுவதற்குத் தயக்கம் காட்டினால், புதிய தொழில்நுட்பங்களையும் தயாரிப்பு முறைகளையும் கையாளும் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு மின்சார பேட்டரி வாகனத் துறை மாறிவிடும் என்றும் அது எச்சரித்திருக்கிறது. இந்த மாறுதலையும்கூட முதல் கட்டமாக ஆட்டோ ரிக்‌ஷாக்கள், பைக்குகள் – ஸ்கூட்டர்களைக் கொண்ட மூன்று சக்கர, இரு சக்கர வாகனத் துறையில் கொண்டுவர அரசு விரும்புகிறது. இதற்கு உத்தேசமாக 2023, 2025-வது ஆண்டுகளைத் தேர்வுசெய்திருக்கிறது.
நிதி ஆயோக் எச்சரிக்கை
  • இதுகுறித்து விவாதிக்க ‘ஹீரோ’, ‘டிவிஎஸ்’, ‘ஹோண்டா’, ‘பஜாஜ்’ போன்ற மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்குகொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றைச் சமீபத்தில் ‘நிதி ஆயோக்’ நடத்தியது. “நல்ல யோசனைதான்; ஆனால், உடனே செய்ய முடியாது; பல விஷயங்களையும் யோசிக்க வேண்டும்” என்றார்கள் மோட்டார் வாகனத் துறையினர். இதனால், சூடான ‘நிதி ஆயோக்’ தலைமை நிர்வாகி அமிதாப் காந்த், “எத்தனை ஆண்டுகள் உங்களுக்கு வேண்டும், 25 ஆண்டுகள்? 50 ஆண்டுகள்?” என்று குத்தலாகக் கேட்டதாகத் தெரிகிறது. ராஜீவ் பஜாஜ், வேணு ஸ்ரீனிவாசன், மினோரு காடோ, விஷ்ணு மாத்துர், வின்னி மேத்தா போன்ற நாட்டின் முக்கியமான மோட்டார் வாகன உற்பத்தித் துறை ஜாம்பவான்கள் எல்லோருமே “2025 என்ற காலக்கெடு சாத்தியமில்லை” என்றே கூறியதாகச் சொல்லப்படுகிறது.
  • உள்ளபடி, இந்த விவகாரத்தில் மோட்டார் வாகனத் தயாரிப்புத் துறையில் இதுவரை ஈடுபட்டு வருவோர் ஒரு பிரிவாகவும், புதிதாகக் கால் பதிக்க வந்திருப்போர் இன்னொரு பிரிவாகவும் முரண்பட்டு நிற்கின்றனர். ‘டோர்க்’, ‘ரிவோல்ட்’, ‘ஆத்தர்’, ‘கைனடிக்’, ‘ஸ்மார்ட் இ’ ஆகிய புதிய நிறுவனங்கள். மின் வாகனங்களுக்கு விரைவாக மாற வேண்டும் என்று துடிக்கின்றன. துறையில் ஏற்கெனவே காலூன்றி ஜாம்பவானாக இருப்பவர்கள் கால அவகாசம் தேவை என்கின்றனர்.
  • அரசின் ஒத்துழைப்பும் தெளிவான கொள்கையும் இல்லாமல் இந்திய வாகன உற்பத்தித் துறை மின்சார வாகனங்களுக்கு மாற முடியாது. மோட்டார் வாகனத் தயாரிப்பில் இதுவரை ஈடுபட்டுவரும் முன்னணி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியம். அவர்களுடைய தரப்பிலும் சில ஒதுக்க முடியாத நியாயங்கள் இருக்கின்றன. அரசு அவற்றைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனத் தயாரிப்பை 2023 முதலும் ஸ்கூட்டர் – பைக் போன்ற வாகனத் தயாரிப்பை 2025 முதலும் மின்சார பேட்டரிகளுடன் தொடங்கிவிட வேண்டும் என்பது அரசின் விழைவாக இருக்கிறது.
  • இந்தியாவில் மோட்டார் வாகனத் தயாரிப்பு இப்போது நல்ல தரத்தை எட்டியிருக்கிறது. இங்கு தயாராகும் வாகனங்கள் உலகச் சந்தையில் எளிதாக விற்பனையாகின்றன. இதற்கென ஏற்கெனவே பல நூறு கோடிகளில் பெரும் உள்கட்டமைப்புகளை உண்டாக்கிவைத்திருக்கின்றன பழைய நிறுவனங்கள். அவையெல்லாம் ஒன்றுமில்லாதுபோவதுடன் புதிய கட்டமைப்புகளையும் அந்நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இந்தக் கட்டமைப்புகள் அத்தனையையும் நிறுவனங்களே உருவாக்கிவிட முடியாது.
  • மின்சார வாகனங்கள் எடை குறைவானவை, அதிக ஓசை எழுப்பாதவை, காற்றில் புகை மாசு, ஒலி மாசு அதிகரிக்காது. எளிதாக இயக்க முடியும். பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே எல்லா இடங்களுக்கும் ஓட்டிச் செல்ல முடியும். மின்சாரத்தையும் மின்சார பேட்டரியையும் உள்நாட்டிலேயே தயாரித்துவிடலாம். வெளிநாடுகளை நம்பியிருக்கத் தேவையில்லை. அந்நியச் செலாவணி பயன்பாடு குறையும். மின்சார பேட்டரிகளுக்கு வீட்டிலும் சார்ஜ் ஏற்ற முடியும். பெட்ரோல், டீசல் விலையுடன் ஒப்பிடுகையில் மின் கட்டணம் குறைவு, அத்துடன் அடிக்கடி மாறாது. இவையெல்லாம் அனுகூலங்கள்.
ஒருங்கிணைந்த கொள்கை வேண்டும்
  • மின் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்க முடியாது என்பதோடு, ஒரே மூச்சில் நெடுந்தொலைவுக்கும் ஓட்ட முடியாது. மாற்று பேட்டரிகள் இருந்தால் மட்டுமே சாத்தியம். வாகனங்களுக்கு மின்சாரத்தை ‘சார்ஜ்’ ஏற்ற நிறைய நிலையங்கள் தேவை. வீடுகளில் ‘சார்ஜ்’ செய்வதானால் நிறைய நேரம் பிடிக்கும். எல்லா ஊர்களிலும், எல்லா நேரங்களிலும் மின்சாரம் ஒரே சீராக, ஒரே அழுத்தத்தில் இருப்பதில்லை. நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சாலைகள் மின் வாகனங்களை இயக்கத்தக்க அளவுக்குத் தரமானவை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுமையை இழுப்பதில் மோட்டார் இரு சக்கர வாகனங்களோடு மின் இரு சக்கர வாகனங்களை ஒப்பிட முடியாது; அப்படிச் சமமான இழுதிறன் கொண்டவற்றை உருவாக்க வேண்டும் என்றால், மோட்டார் வாகனங்களுடன் ஒப்பிட நிறைய விலை கொண்டதாக மின் வாகனங்கள் ஆகும். சீனாவுடன் ஒப்பிட்டு உற்பத்தியை மட்டும் தொடங்கிவிடுவது சந்தையை வெற்றிகரமாக வழிநடத்தாது, உள்கட்டமைப்பையும் சீனா அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று மோட்டார் வாகனத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
  • எப்படியும் அரசின் முனைப்பு பாராட்டுக்குரியது. ஆனால், முன்னெச்சரிக்கையும் உரிய முன்னேற்பாடுகளும் அவசியம். ஏனென்றால், சந்தையில் மின் வாகனங்கள் அதிருப்தியை உண்டாக்கினால், பெரும் பொருளாதாரச் சீரழிவு நடக்கும். இந்தியாவில் மோட்டார் வாகனத் தொழிலை நேரடியாக நம்பி ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். புதிய வகை வாகனத் தயாரிப்புக்கு மாறினால், இவர்களில் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். மோட்டார் வாகனப் பழுதுபார்ப்பைச் சார்ந்து மட்டும் 50 லட்சம் பேர் வாழ்கின்றனர். பணமதிப்புநீக்கம் கொண்டுவந்த துயரங்களை நாம் மறந்துவிட முடியாது. அதேபோல, அரசு நிர்வாகத்திலும் பெரும் சவால்கள் இருக்கின்றன. இன்னொரு விஷயம் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, விற்பனை வரி, கூடுதல் தீர்வை மூலம் மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் வருவாய் பெறுகின்றன. இந்த வருவாய் இழப்பு ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்றெல்லாமும் யோசிக்க வேண்டும்.
  • உள்கட்டமைப்பில் மட்டும் அல்ல; வாகனப் பயன்பாட்டிலும் சீனத்தோடு நாம் இந்தியாவை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும். சீனத்தில் தனியார் வாகனங்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆகையால், நல்ல திட்டம் என்றாலும் அதைச் செயலாக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது. அது சாத்தியமாகும்போது 2025-லேயேகூட இந்தியச் சாலைகள் எங்கும் மின் வாகனங்கள் ஓடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை(04-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்