TNPSC Thervupettagam
April 4 , 2019 2108 days 3725 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று டிஆர்டிஓ-ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள் எதிர்ப்பு அமைப்பான A-SAT (Anti Satellite System) ஆனது புவி தாழ் சுற்றுவட்டப் பாதையில் செயல்பாட்டில் இருந்த செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
  • மிஷன் சக்தி எனப் பெயரிடப்பட்ட இந்த சோதனையின் மூலம் இந்தியாவானது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள நான்காவது நாடாக மாறியுள்ளது.

புவி தாழ் சுற்றுவட்டப் பாதை

  • தாக்கி அழிக்கப்பட்ட செயற்கைக் கோளானது இந்தியாவின் புவி தாழ் சுற்று வட்டப்பாதை செயற்கைக் கோளாகும்.
  • இவை பூமியில் இருந்து சுமார் 2000 கி.மீ உயரத்தில் உள்ள செயற்கைக் கோளாகும். மேலும் இப்பகுதியானது பெரும்பான்மையான செயற்கைக் கோள்கள் குவிந்திருக்கும் பகுதியாகும். இந்தியா பைசாட், ரிசோர்ஸ் சாட்-2, ரேடார் புகைப்பட செயற்கைக்கோள் 1 & 2 மற்றும் SRMசாட் ஆகிய 5 அறியப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் இப்பகுதியில் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான துறைசார் அறிவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் எதிர்ப்பு அமைப்பு

  • இது விண்ணில் வலம் வரும் செயற்கைக் கோள்களை தாக்கும் ஏவுகணை அடிப்படையிலான அமைப்பாகும்.
  • இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே தரையிலிருந்தோ அல்லது வான்வழி ஆதாரங்களிலிருந்தோ விண்வெளியில் உள்ள பொருட்களைச் சுட்டு வீழ்த்தும் திறன் உடையதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  • இத்தகைய அமைப்புகளின் வளர்ச்சியானது முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பனிப்போர் நடந்த கால கட்டங்களில் தொடங்கப்பட்டது.
  • தரையிலிருந்து ஏவுதல் மற்றும் விமானங்களிலிருந்து ஏவுதல் என இதில் இரண்டு வகையான அமைப்புகள் உள்ளன.

உலகளாவிய செயற்கைக்கோள் எதிர்ப்பு அமைப்பு

  • பனிப் போரின் விண்வெளி யுத்த காலத்தில் 1985 ஆம் ஆண்டில் கடைசியாக அமெரிக்காவானது சூரியக் கதிர்வீச்சினை ஆய்வு செய்யும் கருவிகளைக் கொண்டிருந்த அதன் செயற்கைக் கோளான P-781 என்ற ஒன்றை செயற்கைக் கோள் எதிர்ப்பு அமைப்பைப் பயன்படுத்தி அழித்தது.
  • 2007 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று சீனா அதன் செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனையை நடத்திய பின் மீண்டும் அது போன்ற ஆயுதங்கள் பிரபலமடையத் தொடங்கின.
  • பல அமெரிக்க ஊடகங்கள் இதனை வெளியிட்ட பின்னர் சீன அரசானது அதிகாரப் பூர்வமாக ஜனவரி 23 அன்று அதனை உறுதி செய்தது.
  • அதன் இலக்கானது சீனாவின் FY - 1C எனும் 865 கி.மீ. (537 மைல்) உயரத்தில் வலம் வரும் வானிலை செயற்கைக் கோள் ஆகும்.
  • ஒரு வருடம் கழித்து அமெரிக்காவானது, அமெரிக்க தேசியப் புனரமைப்பு அலுவலகத்தின் USA-193 எனும் பெயருடைய செயல்படாத செயற்கைக் கோளை இடைமறித்து அழிக்கும் “Operation Burnt Frost” எனும் குறியீட்டுப் பெயர் உடைய நடவடிக்கையை செயல்படுத்தியது.

இந்தியாவின் இதுவரையிலான திறமைகள்

  • மிஷன் சக்தியானது புற விண்வெளியில் உள்ள பொருட்களை இலக்காகக் கொண்டிருந்தாலும் உள்வரும் ஏவுகணைகளை இடைமறிக்கும் ஆயுதங்களை உருவாக்கும் திறனை இந்தியா நீண்டகாலமாகக் கொண்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட பிரித்திவி ஏவுகணையானது 600 கி.மீ தூர எல்லையைக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பயணப் பாதையை ஏமாற்றியது.
  • பல்வேறு இடங்களில் சுழன்று கொண்டிருக்கும் ரேடார் அமைப்புகள் எதிரிகளின் ஏவுகணைகளைக் கண்காணித்து அதன் போக்குகளை நிர்மாணித்து நிகழ்நேரத் தகவல்களைத் திட்டக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையை ஏவுவதற்காக அனுப்பும்.
  • இது எதிரியின் ஏவுகணை மீது வெடித்து சேதத்தை ஏற்படுத்தும் முன்னர் அதற்கு மிக நெருக்கமாக செல்லும் வகையில் திசைக் குறிப்புடைய வெடிபொருளைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் A-SAT

  • ஒடிசாவின் பாலசோர் அருகேயுள்ள டாக்டர் APJ அப்துல் கலாம் தீவு ஏவுதள வளாகத்திலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்த ஏவுகணையைச் செலுத்தினர்.
  • இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 300 கி.மீ. உயரத் தொலைவில் சுற்றி வந்த, முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கான ஒரு தேவையற்ற செயற்கைக் கோளைத் தாக்கியது.
  • இந்த ஆண்டு ஜனவரி 24-ம் நாள் DRDOஆல் தயாரிக்கப்பட்டு இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ஒரு சிறிய வகை செயற்கைக் கோளான மைக்ரோசாட்-R எனும் செயற்கைக் கோள் தாக்கி அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ASAT-ன் வரலாறு

  • மிஷன் சக்தி எனும் நடவடிக்கையானது செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோள்களைச் சுட்டு வீழ்த்தும் இந்தியாவின் செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணைத் திறனை விளக்கியது. இந்தியாவின் A-SAT வளர்ச்சியானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பொது இயக்குநரான டாக்டர் சரஸ்வத் உடன் நீண்ட வரலாற்றினை உடையது.
  • 2012-ல் இவர் இந்தியாவானது புவி தாழ் சுற்றுவட்டப் பாதை மற்றும் துருவ சுற்றுவட்டப் பாதை ஆகிய பாதைகளில் எதிரிகளின் செயற்கைக் கோள்களை சீர்குலைப்பதற்குத் தேவையான செயற்கைக் கோள் எதிர்ப்பு ஆயுதங்களை ஒருங்கிணைப்பதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்தார்.

இந்தியாவிற்கு ASAT-ன் அவசியம்

  • இந்தத் தொழில்நுட்பமானது எதிரி நாடுகளுக்குச் சொந்தமான செயற்கைக் கோள்களைத் தேவைப்பட்டால் தாக்கி அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏராளமான இன்றியமையாத பயன்பாடுகள் தற்போது செயற்கைக் கோள்களையேச் சார்ந்துள்ளன.
  • இவை வழிகாட்டும் அமைப்புகள், தொலைத் தொடர்பு பிணையங்கள், ஒளிபரப்பு, வங்கி அமைப்புகள், பங்குச் சந்தைகள், வானிலை முன்னறிவிப்புகள், பேரிடர் மேலாண்மை, நிலம் & கடல் வள வரைபடமிடல், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் இராணுவ பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • செயற்கைக் கோளை அழித்தல் என்பது இந்தச் செயல்பாடுகளை பயனற்றதாக்கும். இது எதிரிகளின் உள்கட்டமைப்பை முடக்கி மனித உயிர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தாமல் அந்த எதிரியை அடிபணிய வைக்க முடியும்.

ஏன் சில நாடுகள் மட்டுமே கொண்டுள்ளது?

  • இதற்கு பல நாடுகள் கொண்டிராத அளவிற்கு விண்வெளி மற்றும் ஏவுகணை ஆகிய 2 தொழில்நுட்பங்களில் மிகவும் மேம்பட்ட திறன் தேவைப்படுகிறது.
  • மேலும் செயற்கைக் கோள்கள் போன்ற விண்வெளி கட்டமைப்புகளை அழித்தல் சர்வதேசச் சமூகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
  • புற விண்வெளி மற்றும் சந்திரன் போன்ற வானியல் பொருட்களை அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமேப் பயன்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச அளவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புற விண்வெளி ஒப்பந்தம் - 1967

  • இந்தியாவானது புறவிண்வெளி தொடர்பான 1967 ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • இது பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் எந்தவொரு அணு ஆயுதங்களையும் அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வாகனங்கள் செலுத்தப்படுவதைத் தடை செய்கிறது.
  • மேலும் சந்திரன் போன்ற விண்வெளிக் கோள்கள் அல்லது புற விண்வெளி ஆகியவற்றில் இது போன்ற ஆயுதங்களை நிறுத்தி வைப்பதையும் இது தடை செய்கின்றது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, பிரத்தியேகமாக சந்திரனும் மற்ற வானுலகப் பொருட்களும் சமாதான நோக்கங்களுக்காக மட்டுமே அனைத்து நாடுகளாலும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் உள்ளது.

விண்வெளிக் குப்பைகள்/கழிவுகள்

  • விண்வெளிக் கழிவுகள் ஏற்படுத்தும் சிக்கலானது ஒருவர் மற்றொருவரின் செயற்கைக் கோள்களை அழிக்க விரும்பாமலிருப்பதற்கு வேண்டிய நிர்பந்தமாகவும் நடைமுறை காரணமாகவும் உள்ளது.
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் அறிக்கைப் படி, 1 செ.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் ஏறத்தாழ 7,50,000 பொருட்கள் விண்வெளியில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஏவுகணையால் அழிக்கப்பட்ட ஒரு செயற்கைக் கோளானது சிறுசிறு துண்டுகளாக சிதறி விண்வெளிக் கழிவுகளுடன் இணைகின்றன.
  • இந்த விண்வெளிக் கழிவுகளானது செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோள்களுடன் மோதி அவற்றின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கலாம்.
  • 2007 ஆம் ஆண்டில் சீனா தனது பெங்குயின் IC வானிலை ஆய்வு செயற்கைக் கோளை அழித்து தனது முதல் செயற்கைக் கோள் எதிர்ப்பு சோதனையை நடத்தியதன் மூலம் 2300-க்கும் மேற்பட்ட பெரிய சிதைவுகளையும் 1 செ.மீ. க்கும் அதிகமான அளவில் சுமார் 1.5 லட்சம் துண்டுகளை உருவாக்கியுள்ளது என மதிப்பிடப்பட்டது.
  • அவை ஒவ்வொன்றும் ஒரு செயற்கைக் கோள் மீது மோதுவதன் மூலம் அந்த செயற்கைக் கோள்கள் செயலிழந்து போகலாம்.

இந்திய சோதனையும் விண்வெளிக் கழிவுகளும்

  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது அதன் அறிக்கையில் இந்தியாவின் இந்த சோதனையானது விண்வெளிக் கழிவுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் செய்யப் படுவதை உறுதி செய்யும் வகையில் புவி தாழ் சுற்று வட்டப் பாதையில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளது.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்