- வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு அரை நூற்றாண்டாகிறது. 1969-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி இந்தியாவின்14 முக்கிய வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் எடுக்கப்பட்ட அந்தத் துணிச்சலான முடிவுக்குப் பின்னால் அரசியல் இருந்தது என்றாலும், அடுத்த 20 ஆண்டுகால பொருளாதார மாற்றங்களுக்கு அந்த அதிரடி முடிவு காரணமாக இருந்தது
என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
- அதுவரை பெரும் தொழிலதிபர்களால் வங்கிகள் இயக்கப்பட்டு வந்தன. அந்த வங்கிகளில் போடப்பட்ட பொதுமக்களின் சேமிப்பு, வங்கிகளை நடத்திய தொழிலதிபர்களுக்கு உறுதுணையாக இருந்து வந்தது. வங்கிகள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே இயங்கி வந்தன. வங்கிகள் மூலம் வணிக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும்தான் பெரும்பாலும் பயன்பட்டனவே தவிர, விவசாயிகளும், சாமானிய பொதுமக்களும் பயன்பெறவில்லை.
வங்கி தேசியமயமாக்கல்
- வங்கி தேசியமயமாக்கலை எதிர்த்தவர்கள் பிற்போக்குவாதிகள் என்றும், ஆதரித்தவர்கள் முற்போக்குவாதிகள் என்றும் வர்ணிக்கப்பட்டனர். வங்கிகள் தேசியமயமாக்கலைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவசரநிலைச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டபோது, அன்றைய இந்திரா காந்தி அரசின் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்த அந்த அதிரடி முடிவு கைகொடுத்தது.
- வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்குப் பிறகுதான் இந்தியாவின் கிராமங்களில் எல்லாம் வங்கிக் கிளைகள் பரவலாக ஏற்படுத்தப்பட்டன. விவசாயக் கடன் வசதி என்பது மட்டுமல்லாமல், கிராமப்புற மக்களும் சிறு வணிகர்களும், சாமானியர்களும் வங்கியில் கணக்குகளைத் தொடங்கவும், கடன் உதவி பெறவும் முடிந்தது.
- அவசரநிலைச் சட்டத்தின்போது அன்றைய நிதித் துறை இணையமைச்சர் ஜனார்தன் பூஜாரி நடத்திய கடன் திருவிழாக்கள் ("லோன் மேளா') அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிசய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை, மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது என்று அறிவுஜீவிகள் வர்ணித்தார்கள்.
- அடித்தட்டு மக்கள் மத்தியில் பிரதமர் இந்திரா காந்திக்கு மிகப் பெரிய செல்வாக்கு ஏற்படுத்தித் தந்தது "கடன் திருவிழா'க்கள்தான் என்பதைக் காலம் நிரூபித்தது.
- ஒருவகையில் பார்த்தால், பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற "ஜன் தன்' திட்டம், பெரும் வெற்றி அடைந்ததற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னால் இந்திரா காந்தி அரசு துணிந்து மேற்கொண்ட வங்கிகள் தேசியமயமாக்கல் என்கிற முடிவும், அதைத் தொடர்ந்து பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததும்தான். இப்போது வங்கிக் கிளை இல்லாத ஊராட்சியே இந்தியாவில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்துக்கு பிரதமர் இந்திரா காந்திக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்.
- 1969-இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோது, அதற்கான அவசியம் கட்டாயம் இருந்தது. இப்போது அரைநூற்றாண்டு காலத்துக்குப் பிறகு 2019-இல் வங்கிகள் இனியும் பொதுத் துறை நிறுவனங்களாக தொடரத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமயம் என்கிற பெயரில் தனியார் வங்கிகளை இயங்க அனுமதித்திருப்பதும், அரசு வங்கிகள் அரசு நிறுவனங்களாக மாறி அதன் ஊழியர்கள் அரசு ஊழியர் மனோபாவத்துடன் இயங்க முற்பட்டிருப்பதும்தான் அதற்குக் காரணம்.
- தனியார் வங்கிகளின் செயல்பாடுகளைப்போல, அரசு வங்கிகள் செயல்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை. அதே நேரத்தில் அரசுத் துறை வங்கிகளைப்போல, வேளாண் கடன், கல்விக் கடன், சிறு தொழில்முனைவோருக்கான கடன் ஆகியவற்றை தனியார் வங்கிகள் வழங்குவதில்லை. இப்போதும்கூட பன்னாட்டு வங்கிகளோ, ஏனைய தனியார் வங்கிகளோ கிராமப்புறங்களில் கிளைகளைத் தொடங்கி செயல்படுவதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
வங்கிகளின் தனியார்மயம்
- அதிக மதிப்பு செலாவணிகள் 2016-இல் செல்லாததாக்கப்பட்ட நேரத்தில், தனியார் வங்கிகள் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும்போது வங்கிகளின் தனியார்மயம் ஆபத்தில் முடியுமோ என்கிறஅச்சம் மேலிடுகிறது. அண்மையில் ஐசிஐசிஐ வங்கி தொடர்பான முறைகேடுகள், அரசு வங்கிகளை மட்டுமே குற்றப்படுத்திவிட முடியாது என்பதை உணர்த்துகிறது.
- கடந்த 2017-18-ஆம் நிதியாண்டின்படி வங்கிகளின் மொத்த வாராக் கடன் 2 லட்சம் கோடி. அரசுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்புக்கு வேளாண் கடனோ, கல்விக் கடனோ, சிறு-குறு தொழில் துறையினருக்கு வழங்கப்படும் கடனோ அல்ல காரணம். பெரும் கார்ப்பரேட் மோசடிகள்தான் வாராக் கடன்பிரச்னையின் அடிப்படை. இந்தப் பின்னணியில் வங்கிகள் தனியார்மயம் என்பது பொதுமக்களின் முதலீடு மாயமாய் மறைந்துவிடக் காரணமாகக் கூடும். அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத அரசு நிறுவனங்களாக வங்கிகள் செயல்படுவதும், அரசு ஊழியர் மனோபாவத்திலிருந்து வங்கி ஊழியர்கள் விடுபடுவதும்தான் தீர்வே தவிர, வங்கிகளைத் தனியார்மயமாக்குவது விபரீதத்துக்கு வழிகோலக்கூடும்.
- தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வங்கிச் சேமிப்புக்கான வட்டி கடுமையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சேமிப்பு ஊக்குவிக்கப்படுவதற்குப் பதிலாக, பங்குச் சந்தை ஊக்குவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் சேவைக்காக வங்கிகள் செயல்படுவது என்கிற நிலை மாறி, லாபம் ஈட்டும் வணிக நிறுவனங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், இந்திய வங்கிகளின் செயல்பாடு குறித்து பரவலான பொதுவிவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது என்னவோ உண்மை.
நன்றி: தினமணி (22-07-2019)