1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரவுலட் சட்டத்திற்கு எதிராக போராடுவதற்காக அவர் பம்பாயில் சத்தியாக்கிரக சபாவைத் தொடங்கினார்.
1919 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற முதலாவது அனைத்திந்திய கிலாஃபத் மாநாட்டின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் 1920 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் முழு பொறுப்பும் காந்தியிடம் வந்தடைந்தது.
1920 ஆம் அண்டுகளில் கிலாஃபத் இயக்கத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமானது ஆங்கிலேயருக்கெதிரான காந்தியின் போராட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
1921 ஆம் ஆண்டு மே மாதத்தில் காந்திக்கும் அப்போதைய வைசிராய் ஆன ரீடிங்-பிரபுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1921 ஆம்ஆண்டு நவம்பர் மாதம், ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்தி வழங்கிய அறிவுரையின் அடிப்படையில், வேல்ஸ் நாட்டு இளவரசர் எட்டாம் எட்வர்ட்கிற்கு மக்கள் கருப்புக் கொடி காட்டினர்.
ஆனால் 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ஆம் நாள் உத்திரப் பிரதேசத்தின் சௌரி சௌராவில் நடைபெற்ற வன்முறையானது இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காரணமானது.
1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று பர்தோலியில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் பர்தோலி தீர்மானத்தின் வழியாக ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற காந்தி முடிவெடுத்தார்.
1922 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 124-Aன் கீழ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு 6 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் 2 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருந்தார்.
காந்தி தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாக 1924 ஆம் ஆண்டு பெல்காமில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டிற்கு மட்டுமே காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார்.
1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் ஆங்கிலேயரை இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கக் கோரி ஒரு தீர்மானத்தை காந்தி நிறைவேற்றினார்.
உப்பு சத்தியாக்கிரகம்
1930 ஆம் ஆண்டு உப்பு மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் தண்டியிலிருந்து நடைபயணத்தை காந்தி தொடங்கினார்.
இந்த நடைபயணமானது 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று அகமதாபாத்தின் அருகில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கி 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 அன்று தண்டியில் நிறைவு பெற்றது.
இந்தப் போராட்டமானது வெற்றியடைந்து 1931 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் நாள் ஏற்பட்ட காந்தி- இர்வின் உடன்படிக்கையில் முடிவடைந்தது.
இந்த உடன்படிக்கைக்குப் பின்னர் ஆங்கில அரசால் வட்டமேசை மாநாட்டிற்கு காந்தி அழைக்கப்பட்டார்.
பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று லாகூர் சிறையில் தூக்கிலடப்பட்டனர்.
1931 ஆம் ஆண்டு கராச்சி காங்கிரஸ் மாநாடானது சர்தார் படேல் தலைமையில் கராச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மார்ச் 29 அன்று அங்கு சென்ற காந்தி எதிர்ப்பு கோஷங்கள் மற்றும் கருப்பு கொடிகள் காட்டி வரவேற்கப்பட்டார்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான நிபந்தனையாக பகத்சிங் மற்றும் அவரின் கூட்டாளிகளின் விடுதலையை காந்தி விதிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் காந்தி குற்றஞ்சாட்டப்பட்டார்.
1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 அன்று இரண்டாம் வட்டமேசை மாநாடு தொடங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரசு சார்பில் காந்தியும் இந்தியப் பெண்களின் சார்பில் சரோஜினி நாயுடுவும் கலந்துக் கொண்டனர்.
அங்கு வின்ஸ்டன் சர்ச்சில் “அரை நிர்வாண தேசத் துரோக பக்கரி” என காந்தியைக் குறிப்பிட்டார்.
இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் ஆங்கில அரசின் உண்மையான நோக்கத்தினை அறிந்து கொண்டு இந்தியா திரும்பிய காந்தி மற்றொரு சத்தியாக்கிரகத்தினைத் தொடங்கினார். இதனால் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பூனா ஒப்பந்தம்
இரண்டாம் வட்ட மேசை மாநாட்டிற்குப் பின்னர், 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று பிரித்தானியப் பிரதமரான ராம்சே மெக்டொனால்ட் தீண்டத் தகாதவர்களுக்கென தனி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை அறிவித்தார்.
இது மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் கலந்து கொண்ட டாக்டர் அம்பேத்கரால் தொடர்ந்து கோரப்பட்டு வந்தது.
பூனா ஒப்பந்தமானது காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோருக்கு இடையே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக பூனாவில் உள்ள எரவாடா சிறையில் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று கையெழுத்தானது.
காந்தி இந்த நாட்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை உருவாக்கிப் பிரபலப்படுத்தினார்.
சமுதாயத்தில் உள்ள தீண்டாமையை ஒழிக்க “அனைத்திந்திய தீண்டாமை எதிர்ப்புக் குழுவை” 1932 ஆம் ஆண்டு அவர் தொடங்கினார்.
இது 1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் “ஹரிஜன் சேவக் சங்கம்” (தீண்டத்தகாத சமூகத்தின் தொண்டன்) என மறுபெயரிடப்பட்டது.
1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் “ஹரிஜன்” எனும் வாரந்திரப் பத்திரிக்கையை எரவாடா சிறையில் காந்தி வெளியிடத் தொடங்கினார்.
இவர் ஆங்கிலத்தில் ஹரிஜன் (1933லிருந்து 1948 வரை), குஜராத்தி மொழியில் “ஹரிஜன் பந்து” மற்றும் இந்தி மொழியில் “ஹரிஜன் சேவக்” ஆகிய 3 பதிப்புகளைத் தொடங்கினார்.
1934 ஆம் ஆண்டு மகாராஸ்டிராவில் உள்ள வார்தாவில் “அனைத்திந்திய கிராமப்புற தொழிலகங்கள் சங்கத்தினை” அவர் தொடங்கினார்.
“இந்தியாவின் எதிர்காலம் என்பது அதன் கிராமங்களிலேயே உள்ளது” எனவும் இவர் கூறினார்.
1934 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியைத் துறந்த அவர் மீண்டும் 1936 ஆம் ஆண்டில் தீவிர அரசியலுக்கு வந்தார்.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திற்குப் பிறகு, தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்துகாந்தி மற்றும் நேரு ஆகியோருக்கு இடையே விவாதம் நடைபெற்றது. இது S-T-S (காந்தியால் குறிப்பிடப்பட்ட போராட்டம் -சமாதானம்- போராட்டம்) மற்றும் S-V (நேருவால் குறிப்பிடப்பட்ட போராட்டம்- வெற்றி) என்ற மூலோபாய விவாதமாக அறியப்பட்டது.
1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வார்தாவின் புறநகர் பகுதியில் “சேகயோன்” எனும் கிராமத்தில் குடியிருப்பு ஒன்றை அவர் தொடங்கினார். இது பின்னர் சேவாகிராம் (சேவைகளுக்கான கிராமம்) என மறுபெயரிடப்பட்டது.
1939 ஆம் ஆண்டில் திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி பரிந்துரை செய்த பட்டாபி சித்தாராமையாவைத் தோற்கடித்து சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதிக் கட்டம்
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், போரில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக ஆங்கிலேய வைசிராய் லின்லித்கோ 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் கொடையை அறிவித்தார்.
ஆகஸ்ட் கொடையை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு பேச்சுரிமையை ஊக்குவிக்கும் பொருட்டு "டெல்லி செல்க" என்றறியப்படும்தனிநபர் சத்தியாக்கிரகத்தினை காந்தி தொடங்குவதற்கு வலியுறுத்தினார்.
கிரிப்ஸ் தூதுக் குழுவானது இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் முழு ஒத்துழைப்பைப் பெறுவதற்காக 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலேய அரசால் அனுப்பப்பட்டது. ஆனால் இது தோல்வியடைந்தது.
கிரிப்ஸ் தூதுக் குழுவின் அறிவிப்புகளை “திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என காந்தி குறிப்பிட்டார்.
இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் நாள் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியானது “வெள்ளையனே வெளியேறு” அல்லது “பாரத் சோடோ அந்தோலன்” எனும் போராட்டத்தினைத் தொடங்கியது.
இந்த சமயத்தில் பம்பாயில் உள்ள குவாலியா நீர்த் தொட்டி மைதானத்தில் “செய் அல்லது செத்து மடி” என்ற அறைகூவலை காந்தி விடுத்தார்.
1942 ஆம் ஆண்டு காந்தி, அவரது மனைவி மற்றும் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் புனேவின் ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 15, 1942 அன்று ஆகா கான்மாளிகையில் காந்தியின் தனிப்பட்ட உதவியாளரான மஹாதேவ் தேசாய் மாரடைப்பால் இறந்தார்.
1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று உடல்நலக் குறைவினால் கஸ்தூரிபாய் ஆகா கான் மாளிகையிலேயே காலமானார்.
1944 ஆம் ஆண்டு ஜுலை 06 அன்று சிங்கப்பூர் வானொலியில் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியை “தேசத் தந்தை” என குறிப்பிட்டார்.
காந்தியின் ஆலோசனைக்கு மாற்றாக 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மவுண்ட்பேட்டன் திட்டத்தால் (ஜூன் 3 ஆம் தேதி திட்டம் என்றும் அறியப்படும்) அளிக்கப்பட்ட முன்மொழிவான பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.
இச்சமயத்தில் மவுண்பேட்டன் பிரபு காந்தியை “தனி மனித இராணுவம்” எனக் குறிப்பிட்டார்.
1947 ஆம் அண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியிலிருந்து கல்கத்தாவின் நெளகாலியில் உள்ள இருதரப்பு மக்களையும் அமைதிப் படுத்துவதற்காகவும் வன்முறையைக் கைவிடுமாறுக் கேட்டுக் கொள்வதற்காகவும் காந்தி நேரில் சென்று வேண்டுகோள் விடுத்தார்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரமடைந்தது.
நினைவுகளில்
மிகப்பெரிய ஆங்கிலேயப் பேரரசை உண்மை மற்றும் அகிம்சை எனும் மிகவும் புதியதும் மற்றும் வித்தியாசமுமான ஆயுதங்களைக் கொண்டு காந்தி வீழ்த்தினார்.
1940 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் பண்டித நேருவை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார்.
இவ்வாறு ஊக்கமளிக்கும் காந்தியின் வாழ்க்கையானது 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று டெல்லியில் உள்ள பிர்லா இல்லம் என்னுமிடத்தில் நாதுராம் கோட்சே என்பவரால் சுடப்பட்டு முடிவுக்கு வந்தது.
காந்தி சுடப்பட்ட அந்த பிர்லா இல்லமானது தற்போது “காந்தி ஸ்மிரிதி” எனும் பெயரில் டெல்லியில் நினைவு மண்டபமாக உள்ளது.
புது டெல்லியில் யமுனை ஆற்றின் அருகே அவரின் உடல் எரியூட்டப்பட்ட இடமானது “ராஜ்காட் நினைவகமாக “உள்ளது.
1937 ஆம் ஆண்டிலிருந்து நோபல் பரிசிற்கு காந்தி 5 முறை பரிந்துரை செய்யப்பட்டார்.
ஆனால் இவருக்கான பரிந்துரையானது 1948 ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த இவரின் மறைவிற்கு சில வாரங்களுக்குப் பின்னரே இறுதி செய்யப்பட்டது.
நோபல் பரிசின் அக்கால வரலாற்றில் நோபல் பரிசுக் குழுவானது காலமானவர்களுக்கு அப்பரிசினை வழங்குவதில்லை.
எனவே, மறைவிற்குப் பின்னர் அப்பரிசை வழங்க விருப்பமில்லாமல் இருந்தாலும் அகிம்சைக்கான காந்தியின் வாழ்நாள் பணியினை அங்கீகரிப்பதற்காக அவ்வருட (1948) அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது.
2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் ஐ.நா. பொதுச் சபையானது அக்டோபர் 02-ஐ சர்வதேச அகிம்சைக்கான தினமாக உருவாக்கியது.
இலக்கியப் படைப்புகள் மற்றும் கொள்கைகள்
1909 ஆம் “இந்து ஸ்வராஜ்” அல்லது “இந்திய தன்னாட்சி” என்ற நூலை காந்தி தென்னாப்பிரிக்காவில் எழுதினார்.
சத்திய சோதனை எனும் காந்தியின் சுயசரிதையானது அவரின் சிறுவயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கின்றது.
“சுகாதாரம் என்பது சுதந்திரத்தை விட முக்கியமானது” என காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தூய்மை மற்றும் சுகாதாரத்தினை வாழும் முறையின் உள்ளடங்கிய ஒரு பகுதியாக அவர் கொண்டிருந்தார்.
இதனால் தான், காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரின் மரபுகளை முன்னிலைப் படுத்துவதற்காக தூய்மை இந்தியா திட்டம் அனுசரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
கீழ்க்காணும் முக்கியமான கொள்கைகளை காந்தி தனது வாழ்நாளில் பின்பற்றினார்.
உண்மை – தனது சொந்தப் பிழைகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் தனக்குள்ளேயேப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
அகிம்சை – மதத்தைப் பின்பற்றும் பாதையுடன் இணைந்த அகிம்சையை கடைபிடித்தல்.
புலால் உண்ணாமை – இது இந்திய சமண மற்றும் இந்து மதப் பின்னணியிலிருந்து வந்தவை.
பிரம்மச்சாரியம் – ஆன்மீக மற்றும் நடைமுறை செயல்பாடுகளில் உள்ள தூய்மை
எளிமை – தேவையற்ற செலவுகளைக் கைவிடுதல்
நம்பிக்கை – மிக உயர்ந்த சக்தியின் மீது நம்பிக்கை கொள்ளல் மற்றும் அனைத்து மதங்களும் உண்மை மற்றும் சமம் எனக் கருதுதல்.