TNPSC Thervupettagam

யோகா: ஆயுள் காக்கும்!

June 21 , 2019 1837 days 928 0
  • இன்று (ஜூன் 21) யோகா விழிப்புணர்வு தினம்.  உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் பாலமாக யோகாசனம் உள்ளது. மனித உயிரின் ஐந்து உபாயங்களாக உள்ள உடல், மூச்சு, மனம், அறிவு, ஆனந்தம் ஆகியவற்றின் மையமாக உள்ள மனம் தெளிவாக இருந்தால், ஒருவரது அறிவுத்திறன் கூர்மையாகி, வாழ்வது ஆனந்தமாகிறது.
யோகா
  • ஆனால், மனம் பாதிப்படைந்தால் மனதில் ஏற்படும் பல்வேறு எண்ணக் கிளர்ச்சிகளாலும், சிந்தனைகளாலும் நிம்மதி இல்லாத சூழல் உருவாகிறது. மன அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் சுவாசம் பாதிக்கப்பட்டு, நரம்புகளில் சமநிலையின்மையை உருவாக்கி உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உடலுக்கு எந்தவிதமான பயிற்சியும் தராததால் தசைகள் இறுகிப் போகியிருக்கும்.
  • இதனால் மூச்சின் அளவு பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். ஓடி ஆடி விளையாடும் நேரத்தில்கூட, பல எண்ணங்கள் அலைபாய்ந்து இடையூறாக மாறி எரிச்சல், கோபம், மன அழுத்தத்துக்கு தாராள இடம் தரும். இதனால், பல உறுப்புகள் சரியாக வேலை செய்யாது. சரியான தூக்கம் இருக்காது. ஆரோக்கியம் குறைந்து எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றங்கள் இருக்கும்.
  • உடல் மற்றும் மனதில் ஏற்படும் இறுக்கம் மற்றும் அழுத்தங்களைச் சரி செய்வதில் யோகாசனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மனது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு.
  • அவ்வாறு மனதைச் செம்மையாக்க உடலை ஒரு கருவியாக்கி சிறந்த யோகாசனங்கள் செய்யும்போது உடலானது வலுவடைந்து மனம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடலின் மிக முக்கியமான அங்கமாக உள்ளது சுவாசம்.
செயல்பாடுகள்
  • இது உடலின் அனைத்து செல்கள் மற்றும் திசுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது. மேலும், மூளையின் செயல்பாடுகளில் மிக முக்கிய தொடர்புடையது. ஒரு மனிதன் ஒரு நிமிஷத்துக்கு 15 முறையும் ஒரு நாளைக்கு 21,600 முறையும் சுவாசிக்கிறான். உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் தேவையான சக்தியை சுவாசம் அளிப்பதுடன், சுரப்பிகளும் தூண்டப்படுகின்றன.
  • நுரையீரலின் முழுக் கொள்ளளவையும் பயன்படுத்தி  பெரும்பாலானோர்  சுவாசிப்பதில்லை. ஆக, உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான முழு பிராண சக்தியும் கிடைப்பதில்லை. எனவே, சுவாசத்தின் மீதான உணர்திறனை அதிகரித்து அதன் முழுச் சக்தியையும் பயன்படுத்த வேண்டும். மெதுவான ஆழமான தீர்க்க சுவாசம் மன அமைதியையும் ஆறுதலையும் தருகிறது. முறையற்ற சுவாசம் மூளையின் செயல்பாடுகளை இடையூறு செய்து உடல், உணர்வு, மன ஓட்டங்களைத் தடை செய்கிறது.
சுவாசித்தல்
  • தரமான வாழ்க்கை, வாழ்க்கையின் தன்மை, ஆயுள்காலம் அனைத்தும் நம்முடைய சுவாசத்தின் தன்மையைப் பொருத்தே அமைகிறது. பண்டைய காலத்தில் யோகிகளும் ரிஷிகளும் இயற்கையை நன்கு உணர்ந்து ஆராய்ந்து வாழ்ந்தனர். அப்போது, அவர்கள் கவனித்த முக்கியமான விஷயம் விலங்குகளின் சுவாசமும் அவற்றின் வாழ்நாள்களும்.
  • மிகவும் மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிக்கக் கூடிய ஆமை, யானை, மலைப் பாம்புகள் நீண்ட ஆயுள்காலமும், வேகமாகவும் அதிகமாகவும் சுவாசிக்கக் கூடிய நாய், முயல், பறவைகளின் ஆயுள்காலம் குறைவாகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம் சீரான சுவாசத்தின் முக்கியத்துவத்தையும் அது மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் உணர்ந்தனர்.
  • நம்முடைய வாழ்க்கை முறையும் பிராண வாயு ஓட்டத்தில் அபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினசரி நடவடிக்கைகளான உடற்பயிற்சி, வேலை, உறக்கம், உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அனைத்தும் பிராண சக்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • தவறான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், தேவையில்லாத மன அழுத்தம் உள்ளிட்டவை பிராண வாயு ஓட்டத்தைத் தடை செய்கின்றன. இதன் விளைவு ஆற்றல் இழப்பு ஏற்படுகின்றது. குறிப்பிட்ட பிராணாக்களில் ஏற்படும் தடைபட்ட ஆற்றலால் உள்ளுறுப்புகள், மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டு நோய் ஏற்படுகின்றன. ஆனால், பிராணயாமம் பயிற்சியானது இவற்றை தலைகீழாக மாற்றுகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தில் யோகாசனம் என்றால் உடற்பயிற்சி என்றே பலராலும் அறியப்படுகிறது. ஆனால், அது தவறு. யோகாசனங்களுக்கும் உடற்பயிற்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதலில் யோகாசனம் என்பது உடற்பயிற்சியே அல்ல.
அன்றாட வாழ்கை
  • யோகாசனங்கள் உடலில் ஓய்வையும், விழிப்புணர்வையும், கவனத்தையும் அதிகரிக்கிறது. எனவே, உடற்பயிற்சிக்கு மாற்றாக  யோகாசனம்  உள்ளது. ஆக, தினசரி ஒரு மணி நேரம் யோகா மிகவும் அவசியம். நம் அன்றாட வாழ்க்கையில் வழக்கமாகச் செய்யும் செயல்கள்கூட தற்போது உடற்பயிற்சியாக மாறிவிட்டது. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவையெல்லாம் நாம் இயல்பாகச் செய்யக் கூடிய வேலைதான்.
  • ஆனால், இன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை அனைத்தையும் மறந்துவிட்டிருக்கிறோம். அதனாலேயே பல நோய்களுக்கும் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. ஆகையால், ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப யோகா பயிற்சிகளை வடிவமைக்க முடியும்.

நன்றி: தினமணி (21-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்