TNPSC Thervupettagam

லிச்சி நச்சுவும் குழந்தைகள் இறப்பும்

June 29 , 2019 2022 days 1954 0
  • பீகாரின் முசாபர்பூர், வைசாலி, சியோஹர் மற்றும் கிழக்கு சம்பாரன் மாவட்டங்களில் தீவிர மூளையழற்சி (என்செபாலிடிஸ்) நோய்க் கூட்டறிகுறியானது (Acute encephalitis syndrome -AES) இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.
  • 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
தீவிர மூளையழற்சி நோய்க் கூட்டறிகுறி என்றால் என்ன?
  • சுருக்கமாகக் கூறினால், மனக் குழப்பம், வலிப்பு, சுயநினைவிழத்தல், உணர்விழந்த முழு மயக்கநிலை (கோமா) ஆகியவை உள்ளிட்ட மருத்துவ நரம்பியல் வெளிப்பாடுகளைக் கொண்ட குழந்தைகளை மருத்துவமனையில் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுச் சொல் இதுவாகும்.
  • வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் மூளைக் காய்ச்சல், வைரஸால் ஏற்படும் என்செபாலிடிஸ் (பெரும்பாலும் ஜப்பானிய என்செபாலிடிஸ்), பாக்டீரியாவால் ஏற்படும் என்செபாலோபதி, மூளையைத் தாக்கும் மலேரியா மற்றும் ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் ஆகியவை ஒட்டு மொத்தமாக தீவிர மூளையழற்சி நோய்க் கூட்டறிகுறி என அழைக்கப்படுகின்றது.
  • மற்ற அனைத்து நோய்களும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் வேளையில் என்செபாலோபதி மட்டும் உயிர் வேதியியலால் உருவாகின்றது. எனவே இது மட்டும் மற்றவையிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும்.
  • என்செபாலோபதியில் பல்வேறு வகைகள் உள்ளன.
  • தற்போதுள்ள நிகழ்வில் உள்ள என்செபாலோபதியானது குருதிச் சர்க்கரைக் குறைவுடன் தொடர்புடையதாகும். எனவே அது குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதி என்றழைக்கப்படுகின்றது.
மூளையழற்சிக்கும் குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதிக்கும் உள்ள வேறுபாடுகள்
  • இவை இரண்டும், இரண்டு மிகவும் மாறுபட்ட அறிகுறிகளையும் மருத்துவ வெளிப்பாடுகளையும் கொண்டுள்ளன.
  • மூளை செயலிழப்பு / அழற்சி தொடங்குவதற்கு முதல் நாளில் ஏற்படும் காய்ச்சல் என்செபாலிடிஸின் அறிகுறியாகும்.
  • குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதி பாதிப்பில் மூளைச் செயலிழப்பு தொடங்கிய பின்னரே (மூளைச் செயலிழப்பின் காரணமாக) காய்ச்சல் ஏற்படுகின்றது. மேலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் காய்ச்சல் வெளிப்படுவதில்லை.
  • சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு லேசான அல்லது அதிக காய்ச்சல் இருக்கலாம்.
  • என்செபாலிடிஸ் உள்ள குழந்தைகளுக்கு இரத்தச் சர்க்கரை அளவு இயல்பாகவே இருக்கும். ஆனால் குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதி உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரையின் அளவு குறைவாகவே இருக்கும்.
  • என்செபாலிடிஸ் பாதிப்பில் மூளை பாதிப்படையத் தொடங்குவதன் அறிகுறிகளாக தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் (வைரஸ் தொற்றுக் காரணமாக) காணப்படும்.
  • இருப்பினும் குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதியில் குழந்தைகள் எவ்வித நோயும் இன்றி இரவு உறங்கச் செல்கின்றனர். ஆனால் அதிகாலையில் (4 முதல் 7 மணி வரை) வாந்தி, வலிப்பு, அரை மயக்கம் போன்ற வெளிப்பாடுகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
  • அதே நேரத்தில் இரத்ததில் சர்க்கரையின் அளவும் குறைவாக உள்ளது. எனவே இதற்கு குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதி என்று பெயர்.
  • இவை இரண்டிற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு மூளைத் தண்டுவட திரவத்தில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் அளவே ஆகும்.
  • என்செபாலடிஸ் பாதிப்பில், ஒரு தொகுதி மூளைத் தண்டுவட திரவத்தில் அதிகமான அளவில் இரத்த வெள்ளையணுக்கள் உள்ளன. இது மூளையில் ஏற்படும் அழற்சியின் பிரதிபலிப்பாகும்.
  • இதற்கு மாறாக குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதியில் மூளையில் அழற்சி/கட்டி ஏதுமில்லாததால் இரத்த வெள்ளையணுக்களின் அதிகரிப்பு ஏற்படுவதில்லை.
பீகாரில் அதிக குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்ன?
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதி காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
  • பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தின் வெளியீட்டின்படி முசாபர்பூரில் இறந்த குழந்தைகளில் அதிக சதவீத குழந்தைகளுக்குக் குறைந்த இரத்தச் சர்க்கரை அளவு (ஹைபோக்ளைகேமியா) பதிவாகியுள்ளது.
  • குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதியைப் போலல்லாமல் என்செபாலிடிஸானது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கு காரணமாகாது. எனவே அதிக சதவீத குழந்தைகளின் இறப்பிற்கு என்செபாலிடிஸ் காரணமாக இருக்க முடியாது.
இளம் குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம்?
  • இரண்டு முதல் பத்து வயது வரையிலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளே குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்க உண்மையாகும்.
  • வயதான குழந்தைகள் அல்லது பெரியவர் இதே முறையில் ஏன் பாதிக்கப்படுவதில்லை எனத் தெரியவில்லை.
  • வயதின் அடிப்படையிலான இந்தத் தெளிவான பாகுபாடானது இந்த நோய்க்கு வைரஸ் ஒரு காரணமாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு சான்றாகும்.
  • வைரஸானது வயது அடிப்படையில் பாகுபாடுகளை கவனிக்காது. மேலும் இரண்டு வயதிற்குக் குறைவான குழந்தைகளும் ஜப்பானிய என்செபாலிடிஸால் பாதிக்கப்படுகின்றனர்.
  • மேலும் நோய்வாய்ப்பட்டக் குழந்தைகளில் பெரும்பாலோனோர் பழங்களை அறுவடை செய்வதற்காக பழத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குழந்தைகள் தரையில் விழுந்த பழங்களைச் சேகரித்து சாப்பிட முனைகின்றனர்.
இந்நோய்க்கு லிச்சிப் பழம் தான் காரணமா?
  • 2012 – 2013 ஆம் ஆண்டுகளில் நச்சு உயிரியல் நிபுணரான டாக்டர். T. ஜேக்கப் ஜான் தலைமையிலான இரண்டு நபர் குழுவானது லிச்சிப் பழத்தில் காணப்படும் ஒரு நச்சுவானது குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதி நோயை உருவாக்குகின்றது என சந்தேகித்து அடுத்த ஆண்டு அதனை உறுதி செய்தது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்திய – அமெரிக்கக் குழுவானது மெத்திலீன் சைக்ளோ ப்ரோபில் கிளைசின் (Methylene Cyclo Propyl Glycine- MCPG) எனப்படும் நச்சின் பங்கினை உறுதி செய்தது.
  • உணவு உட்கொள்ளாத பல மணி நேரங்களுக்குப் பிறகு அதிகாலை வேளையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது இயல்பாகும்.
  • இரவு உணவு உண்ணாமல் தூங்கச் செல்லும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குருதிச் சர்க்கரைக் குறைபாட்டை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
  • இரத்தத்தில் இயல்பான அளவில் சர்க்கரை இருப்பது மூளைக்கு அவசியமாகும்.
  • ஆனால் கல்லீரலால் போதுமான அளவு சர்க்கரையை வழங்க முடிவதில்லை.

  • எனவே கொழுப்பு அமில ஆக்ஸிஜனேற்றம் எனப்படும் குளுக்கோஸ் தொகுப்பின் மாற்றுப் பாதை இயக்கப்படுகிறது. இந்தப் பாதையானது MCPG ஆல் தடுக்கப்படுகின்றது.
  • நன்கு ஊட்டச்சத்துடைய குழந்தைகளில் லிச்சிப் பழமானது எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. ஆனால் முந்தைய நாளில் லிச்சிப் பழத்தை சாப்பிட்டு விட்டு வெறும் வயிற்றுடன் உறங்கச் செல்லும் ஊட்டச்சத்து குறைபாடுகளுள்ள குழந்தைகளை மட்டுமே அது பாதிக்கின்றது.
ஏன் குறை ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு மட்டும் அதிக பாதிப்பு?
  • நன்கு ஊட்டச்சத்துடன் வளர்க்கப்பட்ட குழந்தைகளில் குளுக்கோஸ் இருப்பானது கல்லீரலில் கிளைக்கோஜென் ஆக (குளுக்கோஸ் பாலிசாக்ரைடு) சேமிக்கப்படுகின்றது.
  • குளுக்கோஸ் அளவு குறையும் போதெல்லாம் கிளைக்கோஜன் குளுக்கோஸாக உடைக்கப்பட்டு இரத்தத்தின் வழியாக அனுப்பப்படுகிறது.
  • ஆனால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் குளுக்கோஸாக மாற்றக்கூடிய கிளைக்கோஜன் போதுமான அளவு இருப்பு இருப்பதில்லை.
  • எனவே, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் உள்ள இயற்கை செயல்பாட்டு முறைகளால் இரத்தத்தில் உள்ள குறைந்த குளுக்கோஸ் அளவை சரி செய்ய முடிவதில்லை. எனவே இது குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதிக்கு வழிவகுக்கின்றது.
  • பொதுவாக, கல்லீரலில் உள்ள கிளைக்கோஜன் இருப்பு தீர்ந்து விடல் அல்லது போதுமானதாக இல்லாத போது, உடலானது கொழுப்பு அமிலத்தை (கார்போஹைட்ரேட் அல்லாத ஆற்றல் மூலத்தை) குளுக்கோஸாக மாற்றுகின்றது.
  • ஆனால், கொழுப்பு அமிலத்தை குளுக்கோஸாக மாற்றும் செயல்பாடானது லிச்சிப் பழத்தின் நச்சுவால் நடுப்பகுதியில் நிறுத்தப்படுகின்றது.
  • இதன் விளைவாக குளுக்கோஸ் எதுவும் உருவாக்கப்படுவதில்லை. எனவே குறைந்த சர்க்கரையின் அளவும் உடலால் சரி செய்யப்படுவதில்லை.
குழந்தைகளின் கோமா மற்றும் இறப்பில் நச்சின் செயல்பாடு
  • இந்த நச்சானது இரண்டு வகைகளில் மூளைக்குத் தீங்கு விளைவிக்கும். மேலும் அது உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
  • நச்சின் காரணமாக குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவை சரி செய்யும் உடலின் இயற்கையான செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. இதனால் மூளைக்கு எரிபொருள் வழங்குதல் குறைகின்றது.
  • இது மயக்கம், தன்னிலையிழத்தல் மற்றும் சுயநினைவிழத்தலுக்கும் வழிவகுக்கின்றது.
  • இந்த நச்சானது கொழுப்பு அமில மாற்றத்தை நடுவழியில் நிறுத்தும் போது மூளைச் செல்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுத் தன்மையுடைய அமினோ அமிலங்கள் வெளியிடப்படுகின்றன.
  • இந்த அமினோ அமிலங்கள் மூளையின் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக மூளையில் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன.
  • இதனால் குழந்தைகளுக்குத் தசை வலிப்பு, ஆழ்ந்த கோமா மற்றும் உயிரிழப்பு ஆகியனவும் ஏற்படலாம்.
இந்நோயைத் தடுக்க முடியுமா?
  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகமான லிச்சிப் பழங்களை சாப்பிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலமும் வெறும் வயிற்றுடன் உறங்கச் செல்லாமல் சிறிதேனும் உணவு உண்பதை உறுதி செய்வதன் மூலம் நிச்சயமாக இந்நோயைத் தடுக்கலாம்.
  • 2017 ஆம் ஆண்டு இந்திய அமெரிக்கக் குழுவானது இந்த கண்டுபிடிப்புகளையும் பரிந்துரைகளையும் வெளியிட்டது.
இந்நோய்க்குச் சிகிச்சையளிக்க இயலுமா?
  • ஆம், குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதிக்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும்.
  • அறிகுறிகள் தோன்றிய 4 மணி நேரத்திற்குள் இந்நோய் பாதிப்புடையக் குழந்தைகளுக்கு 10% டெக்ஸ்ட்ரோஸ் செலுத்தப்பட்டால் முழுமையான மீட்சியை அக்குழந்தைகள் அடைய முடியும்.
  • 10% டெக்ட்ரோஸை உட்செலுத்துவது இரத்தச் சர்க்கரையைப் பாதுகாப்பான நிலைக்கு மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு அமிலத்தை குளுக்கோஸாக மாற்றுவதற்கான உடலின் முயற்சியை நிறுத்துவதன் மூலம் மூளைச் செல்களுக்கு நச்சுத் தன்மையுடைய அமினோ அமிலத்தின் உற்பத்தியையும் நிறுத்துகின்றது.
  • டெக்ஸ்ரோஸ் உட்செலுத்தலுடன் சேர்த்து 3% உப்பு கலந்த கரைசலை (Saline) செலுத்துவது மூளைச் செல்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  • மூளைச் செல்களின் வெளியே உள்ள திரவத்தில் உள்ள அயனிகளின் செறிவானது மூளையின் உள்ளே இருப்பதை விட அதிகமாகிறது.
  • இதனால் மூளைச் செல்களிலிருந்துத் திரவமானது வெளியேறுவதால் வீக்கம் ஏற்பட்டு மூளைச் செல்கள் சேதமடைகின்றன.
  • 5% டெக்ஸ்ட்ரோஸைப் பயன்படுத்தும்போது பொதுவான இரத்தச் சர்க்கரை குறைபாட்டைக் கொண்டிருப்பவருக்கு உதவுவது போல் குருதிச் சர்க்கரைக் குறைபாட்டு என்செபாலோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அக்குறைபாட்டிலிருந்து மீள அது உதவும். ஆனால் அமினோ அமிலத்தின் குவிப்பை நிறுத்த முடிவதில்லை
  • இதனால் குழந்தைகள் உயிர் பிழைத்தாலும் மூளைப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
  • அறிகுறிகள் தோன்றி 4 மணி நேரத்திற்குள் டெக்ஸ்ட்ரோஸ் உட்செலுத்துதல் தொடங்கப்படாவிடில் மூளைச் செல்கள் மீட்கப்படாமல் இறக்க நேரிடும்.
  • இதன் விளைவாக அவர்கள் உயிர் பிழைத்தாலும் பேச்சுப் பாதிக்கப்படுதல், மனநலம் குன்றுதல், தசை விறைப்பு/பலவீனம் போன்ற மூளைச் சேத பாதிப்புகளால் பாதிக்கப்படுவர்.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்