TNPSC Thervupettagam
March 28 , 2019 2100 days 13481 0
  • லோக்பால் (மக்களை கவனிப்பவர் என பொருள்படும்) என்பது இந்தியக் குடியரசின் பொது மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஊழல் எதிர்ப்பு ஆணையம் அல்லது குறைதீர்க்கும் அமைப்பு ஆகும்.
  • குறைதீர்ப்பாளர் அமைப்பை உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஸ்வீடன் நாட்டிடம் இருந்து இந்தக் கருத்துருவானது பெறப்பட்டது.
  • லோக்பால் ஆனது மத்திய அரசின் பொதுப் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழலுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்கும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டமானது பிரதமர் உட்பட பொதுப் பணியாளர்களின் பதவிப் பொறுப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் ஆயுதப் படைகளுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிப்பது போன்ற சில விதிவிலக்குகளையும் இது கொண்டுள்ளது.
லோக்பால் வரலாறு
  • லோக்பால் எனும் வார்த்தையானது 1963-ல் டாக்டர் L.M. சிங்க்வியால் உருவாக்கப்பட்டது.
  • இந்த அரசியலமைப்பு குறைதீர்ப்பாளர் கருத்தானது 1960-ன் முற்பகுதிகளில் சட்ட அமைச்சரான அசோக் குமார் சென் என்பவரால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
  • 1968-ல் வழக்கறிஞர் சாந்தி பூஷனால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் லோக்பால் மசோதாவானது 1969-ல் 4-வது மக்களவையால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையால் அது நிறைவேற்றப்படவில்லை.

  • முதல் அறிமுகம் மற்றும் அதனையடுத்த 10 தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து இறுதியாக 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று லோக்பால் மசோதா இந்தியாவில் இயற்றப்பட்டது.
  • இந்தச் சட்டமானது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சில வகை பொதுப் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க மத்திய அளவில் லோக்பால் அமைப்பையும் மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பையும் உருவாக்கும் நோக்கமுடையது.
  • இந்த லோக்பால் சட்டமானது அமலுக்கு வந்த ஒரு வருடத்திற்குள் அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வேண்டும் என அச்சட்டம் வலியுறுத்துகிறது.
உள்ளடக்கம்
  • லோக்பால் ஒரு தலைவரையும் அதிகபட்சமாக 8 உறுப்பினர்களையும் கீழ்க்காணும் கலவையில் கொண்டிருக்கும்.
    • 50 சதவீத உறுப்பினர்கள் கட்டாயமாக நீதித் துறையைச் சார்ந்திருத்தல்.
    • மீதமுள்ள 50 சதவீத உறுப்பினர்கள் SC/ST/OBCs, சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய வகுப்பினராயிருத்தல்.
தகுதி
  • தலைவர் பதவிக்கு நியமிக்க தகுதிவுடைய விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முன்னாள் இந்திய தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஊழல் எதிர்ப்புக் கொள்கை, பொது நிர்வாகம், ஊழல் கண்காணிப்பு, நிதி, சட்டம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் 25 வருடத்திற்கு குறைவில்லாத அனுபவம் மற்றும் சிறப்பு அறிவினைப் பெற்றிருக்கும் நீதித்துறை சார்ந்த வல்லுநராகவும் இருத்தல் வேண்டும்.
  • லோக்பாலின் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பதாரர் கண்டிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும்.
  • ஊழல் எதிர்ப்புக் கொள்கை, பொது நிர்வாகம், ஊழல் கண்காணிப்பு, நிதி, சட்டம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் 25 வருடத்திற்கு குறைவில்லாத அனுபவம் மற்றும் சிறப்பு அறிவினைப் பெற்றிருக்கும் நீதித்துறை சார்ந்த வல்லுநராகவும் இருப்பவர் லோக்பாலின் மற்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவராவார்.
தேர்வுக் குழு
  • லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வுக் குழுவானது பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படுகின்ற பதவியிலிருக்கும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை உள்ளடக்கியது ஆகும்.

  • தேர்வுக் குழுவின் முதல் நான்கு நபர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான பரிந்துரையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் சிறப்பு நீதித்துறை நீதிபதி நியமிக்கப்படுவார்.
    • 2018 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி லோக்பாலின் தேர்வுக் குழுவில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தேடல் குழு
  • தேடல் குழுவால் முன்மொழியப்பட்ட பெயர்கள் தேர்வுக் குழுவால் பரிசோதிக்கப்படும்.
  • 2018 செப்டம்பர் 27 அன்று மத்திய அரசானது லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரை செய்வதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட தேடல் குழுவினை உருவாக்கியது.
நியமனம்
  • 2019 மார்ச் 19 அன்று நீதிபதி பினாகி சந்திர கோஷ் இந்தியாவின் முதல் லோக்பால் ஆக நியமிக்கப்பட்டார்.
  • இந்த அறிவிப்பானது லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் (2013) நிறைவேற்றப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.

எல்லை வரம்பு
  • லோக்பாலின் அதிகார வரம்பு அனைத்து பொதுப் பணியாளர்களையும் உள்ளடக்கியது.
  • மேலும் இது லோக்பாலால் மற்ற அமைப்புகளுக்கு மாற்றப்பட்ட வழக்குகளில் CBI உள்ளிட்ட எந்த ஒரு விசாரணை அமைப்பையும் கண்காணிக்கவும் வழிநடத்தவும் தேவையான அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
  • வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கூறுகளின் படி வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமாக வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் லோக்பாலின் அதிகார வரம்பிற்குள் உள்ளன.
 சட்டத்தால் உள்ளடக்கப்பட்ட பொதுப்பணியாளர்கள்
  • லோக்பால் ஆனது தற்போதைய மற்றும் முன்னாள் பிரதமர் அல்லது மத்திய அரசு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் A, B, C, D பிரிவு பணியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகார எல்லையைக் கொண்டுள்ளது.
  • மேலும் இது நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மற்றும் முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ மத்திய அரசால் நிதியளிக்கப்படும் எந்தவொரு வாரியத்தின் தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள், கழகம், சங்கம், அறக்கட்டளை அல்லது தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது ஆகும்.
பிரமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான எல்லை
  • சர்வதேச உறவுகள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகியவை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் பிரதமருக்கு எதிராக சுமத்தப்பட்டால் அவ்வழக்கை லோக்பால் விசாரிக்க இயலாது.
பிரதமரை விசாரிக்க முடிந்த வழக்குகள்
  • குற்றச்சாட்டின் விசாரணையின் தொடக்கத்திற்கு லோக்பாலின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் அடங்கிய முழு அமர்வின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டால் பிரதமரை விசாரிக்கலாம்.
  • இத்தகைய விசாரணையானது ஒளிப்பதிவுக் கருவியின் முன்னர் நடைபெற வேண்டும். மேலும் இந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் அதன் பதிவுகள் வெளியிடப்படவோ அல்லது யாருக்கும் கிடைக்கும் வகையிலோ இருத்தல் கூடாது.
வழக்குப் பதிவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை
  • லோக்பால் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகாரானது பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் இருக்க வேண்டும். மேலும் அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்பட்டதாகவும் பொதுப் பணியாளருக்கு எதிரான குற்றமாகவும் இருத்தல் வேண்டும்.
  • யார் புகார் அளிக்க வேண்டும் என்பதில் எவ்வித தடையுமில்லை.
  • மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை லோக்பால் ஆனது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு (CVC) புகாரைப் பரிந்துரை செய்யலாம்.
  • அந்த ஆணையமானது குரூப் A மற்றும் B யின் கீழ் வரும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் அறிக்கையை லோக்பாலுக்கு அனுப்பும் மற்றும் குரூப் C மற்றும் D பிரிவில் உள்ளவர்களுக்கு எதிராக CVC சட்டத்தின்படி லோக்பால் ஆனது தன் நடவடிக்கையைத் தொடங்கும்.
முதல் கட்ட விசாரணையின் நடைமுறை
  • விசாரணைப் பிரிவு அல்லது மற்ற விசாரணை அமைப்புகளானது முதற்கட்ட விசாரணையை முடித்து 60 நாட்களுக்குள் அதன் அறிக்கையை லோக்பாலுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
  • இது தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் பொதுப் பணியாளர் மற்றும் ஒரு தகுதி வாய்ந்த அதிகாரி ஆகிய இருவரின் கருத்துகளையும் கேட்டல் வேண்டும்.
  • ஒவ்வொரு பொதுத் துறை ஊழியர்களின் பிரிவிற்கும் ஒரு தகுதி வாய்ந்த அதிகாரி இருப்பார்.
தகுதி வாய்ந்த அதிகாரி
  • உதாரணமாக பிரதமருக்கு மக்களவையும் மற்ற அமைச்சர்களுக்கு பிரதமரும் தகுதி வாய்ந்த அதிகாரியாக செயல்படுவர்.
  • ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் அந்தந்த அமைச்சர் பொறுப்பாவார்.
  • மூன்று உறுப்பினர்களுக்கு குறையாத லோக்பால் அமர்வானது முதல்கட்ட விசாரணை அறிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த அமர்வானது பொதுப் பணியாளருக்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்ட பிறகு விசாரணையைத் தொடர வேண்டுமா என தீர்மானிக்கும்.
  • குற்றச்சாட்டுகள் தவறானவை எனில் புகாரளித்தவருக்கு எதிராக அது விசாரணை செய்யலாம்.
  • புகார்கள் பெறப்பட்ட 90 நாட்களுக்குள் பொதுவாக முதல் கட்ட விசாரணை கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்.
லோக்பாலின் நிர்வாகிகள்
  • லோக்பால் ஆனது மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் அலுவலர்கள் குழுவில் இருந்து லோக்பால் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு செயலரைக் கொண்டிருக்கும்.
  • இந்த செயலர் இந்திய அரசின் செயலருக்கு நிகர் நிலை பதவியில் இருப்பவர் ஆவார்.
சொத்துக்களை பொதுவெளியில் அறிவிப்பதற்கான முறை
  • பொதுப் பணியாளர்கள் தங்கள் சொத்துக்களையும் தங்கள் கடன்களையும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அறிவிக்க வேண்டும்.
  • ஒருவேளை அறிவிக்கப்படாத சொத்துகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தாலோ அல்லது தவறான தகவல்களை அளித்திருந்தாலோ அந்த சொத்துக்கள் ஊழல் வழிமுறையால் வாங்கப்பட்டதாக அனுமானம் செய்ய அது வழி வகுக்கும்.
  • மாநில அரசுகளின் கீழ் உள்ள பொதுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அந்தந்த மாநில அரசுகள் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும்.

 

- - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்