ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி வீதம் (ரெபோ ரேட்) 50%-லிருந்து 6.25% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னால், வட்டி வீதத்தை மாற்ற வேண்டாம் என்று தீர்மானித்த ரிசர்வ் வங்கியின் ‘பணக் கொள்கைக் குழு’, பணவீக்க விகிதம் குறைவாக இருப்பதால் இம்முடிவை எடுத்திருக்கிறது. மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால வரவு-செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்புகளுக்கு இசையவும் இந்த முடிவு அமைந்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றை வங்கிகள் குறைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வட்டி வீதம் குறைப்பு
நுகர்வோர் விலை குறியீட்டெண், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இடைக்கால இலக்கான 4%-ஐ விடக் குறைவாக இருக்கிறது. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக வட்டி வீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி உண்மையில் 7.2% அல்லது 7.4% ஆகத்தான் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது. உலக அளவிலும் பொருளாதார வளர்ச்சி மிதமாக இருப்பதால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவின் பொருட்களை வாங்குவதும் மந்தமாகி வருகிறது. உள்நாட்டிலேயே வெவ்வேறு துறைகளுக்கிடையே சமமின்மை நிலவுகிறது.
நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மூலதனமாகக் கருதப்படும் பொருட்களின் உற்பத்தியும் இறக்குமதியும் சுருங்கிவிட்டன. தொழில் துறைக்குக் கடன் கிடைப்பதும் உற்சாகமாக இல்லை.
பயிர்ச் சாகுபடி
ராபி பருவத்தில் பயிர்ச் சாகுபடி பரப்பு 4% குறைந்திருக்கிறது. விவசாயத் துறையில் வளர்ச்சிவீதமும் தொடர்ந்து குறைவாக இருக்கிறது, இது மேலும் சில காலம் நீடிக்கும் என்று தெரிகிறது. டிசம்பர் மாதத்தில் மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் விற்பனை குறைந்தது. உணவு தானியங்கள், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களின் விலை சரிவு, உணவுத் துறையின் நலனுக்கு நல்லதல்ல. டிசம்பர் மாத விலைவாசி குறியீட்டெண் தொடர்பான தரவுகளும் இதை உணர்த்துகின்றன. ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த அளவுக்கு பணவீக்க விகிதம் உயரவில்லை. இந்த ஆண்டு பருவமழைப் பொழிவு வழக்கமான அளவுக்குக் குறையாது என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனால், அது பணவீக்க விகிதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அரசின் செலவைக் கட்டுப்படுத்தி, வருவாயைப் பெருக்கி பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி, இம்முறை அதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பட்ஜெட் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ள பல சலுகைகள் இதற்குக் காரணம். சந்தையில் அதிகக் கடன்களை அரசு வாங்கினால் அதன் விளைவு தனியார் முதலீட்டில் எதிரொலிக்கும். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.