TNPSC Thervupettagam

வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டமும் ஆளுநரின் அபாய யோசனையும்!

February 27 , 2019 2143 days 1197 0
  • சென்னை மாநகராட்சிப் பள்ளியின் மூலம் காலை உணவுத் திட்டத்தில் காலடி எடுத்துவைத்திருக்கிறது தமிழக அரசு.
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு இது; அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகவும் இது இடம்பெற்றிருந்தது.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம் கொண்டாடத்தக்கது.
  • இத்திட்டத்தைத் தொடக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாநிலம் முழுமைக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட வேண்டும்; இதில் தமிழக அரசு, கொடையாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது என்பதோடு, மக்கள் மனதைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
  • கூடவே ஆளுநர் இன்னொரு யோசனையையும் தமிழக அரசுக்கு முன்வைத்திருக்கிறார்.
  • இந்தக் காலை உணவுத் திட்டத்தைச் சம்பந்தப்பட்ட பள்ளியில் வழங்க பொறுப்பேற்றிருக்கும் ‘அக்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்திடமே தமிழகத்தின் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் ஒப்படைக்கக் கோரியிருக்கிறார்.
  • இது மிக அபாயகரமான யோசனை; மதிய உணவுத் திட்டத்திலிருந்து மாநில அரசை விடுவிக்க வழிவகுப்பதாக அமையும் இந்த யோசனையைத் தமிழக அரசு முற்றிலுமாக ஒதுக்கித்தள்ள வேண்டும்.
  • மதிய உணவுத் திட்டத்தைப் பொருத்த அளவில், தமிழ்நாட்டுக்கு அதில் நீண்ட வரலாறு உண்டு.
  • 1923-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இத்திட்டத்தை சென்னை மாகாண அரசு தொடங்கிவைத்தது.
  • மக்கள் பங்களிப்புடன் மதிய உணவுத் திட்டத்தை முழுமையடையச் செய்தவர் காமராஜர்.
  • பின்னர் அதைச் சத்துணவுத் திட்டமாக எம்ஜிஆர் விஸ்தரித்தார்.
  • தொடர்ந்து கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதை மேலும் மேம்படுத்தினர்.
  • வாரத்தில் ஐந்து முட்டைகளோடு சத்துணவை வழங்கும் தமிழ்நாட்டு அரசின் இத்திட்டம் கடந்த காலத் தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்திருப்பதோடு, நாட்டுக்கே முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறது.
  • இத்தகைய சூழலில், மதிய உணவுத் திட்டத்தை ஒரு தொண்டு நிறுவனத்திடம் – தனியார் அமைப்பிடம் வழங்க வேண்டிய தேவை என்ன?
  • மேலும், ஆளுநரின் யோசனையில் சம்பந்தப்பட்டிருக்கும் தொண்டு நிறுவனம் பல மாநிலங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், அதன் மீது பல்வேறு புகார்களும் உள்ளன.
  • இந்நிறுவனம் தரமற்ற உணவை வழங்குவதாகக் கர்நாடக அரசே குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சைவக் கொள்கையை மாணவர்கள் மீது திணிக்கும் அமைப்பு இது என்ற பெயரும் அதற்கு உண்டு.
  • இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இன்று சத்துணவில் முட்டைக்கு இடம் இல்லை;
  • அதே சூழலைத் தமிழ்நாட்டிலும் உருவாக்கும் நோக்கத்தோடு இந்த யோசனை பேசப்படுகிறதா என்று எழும் சந்தேகம் புறக்கணிக்கத் தக்கதல்ல.
  • ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடுவது இரக்கமற்றது.
  • காலை உணவுத் திட்டத்தில் தமிழகத்துக்குள்ளேயே ஏற்கெனவே நல்ல முன்னுதாரணங்கள் உண்டு.
  • திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில், ஆசிரியர்களின் பங்களிப்புடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலை உணவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
  • திருச்சி மாவட்டத்தில் பல பள்ளிகளில் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் எல்லாப் பள்ளிகளுக்குமான பொறுப்பையும் வழங்குவதைக் காட்டிலும் திருச்சி முன்மாதிரியே சிறந்த மாதிரியாக அரசுக்கு இருக்கக் கூடும்.
  • தமிழகம் முழுக்க இத்திட்டத்தை அரசு விஸ்தரிக்கட்டும்; அரசின் பொறுப்பிலேயே சத்துணவுத் திட்டம் தொடரட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்