TNPSC Thervupettagam

வளர்ச்சிக்குக் காத்திருக்கிறது தென்னாப்பிரிக்கா

May 20 , 2019 2060 days 1072 0
  • தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சிரில் ரமபோசா வெற்றி பெற்றிருக்கிறார்; ஜேகப் சுமாவிடமிருந்து 2018-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நேரடியாக அதிபர் பதவியில் அமர்ந்த ரமபோசா, இம்முறை தேர்தல் மூலம் பதவிக்கு வருகிறார். பொருளாதாரத்தைச் சீர்திருத்துவது, அரசின் நிறுவனங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது, அரசியல் ஊழல்களுக்கு விடைகொடுப்பது என்ற மிகப் பெரிய சவால்கள் அவருக்காகக் காத்திருக்கின்றன. அரசியல் ஊழல்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன.
  • அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 58% ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) கட்சிக்குக் கிடைத்தது. முக்கிய எதிர்த்தரப்பான ஜனநாயகக் கூட்டணி 21%, பொருளாதார சுதந்திரப் போராட்ட வீரர்கள் கட்சி 11% மற்றும் சிறிய கட்சிகள் 11% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. பதிவான வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மையை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றிருந்தாலும், கடந்த சில தேர்தல்களாக அதன் வாக்குகள் தொடர்ந்து குறைந்துவருவதையும் இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது. 2004-ல் 69%, 2009-ல் 66%, 2014-ல் 62% ஆக இது இருந்தது. நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 1994-ல் மக்களின் அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் பெற்ற வெற்றியானது படிப்படியாகக் குறைவதும், கட்சியின் உயர் நிலையில் உள்ளவர்கள் ஊழலில் ஊறித் திளைப்பது அதிகரிப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அதிபர் பதவியிலிருந்து ஜேகப் சுமா பதவி விலகினார். அவர் ஆட்சியின்போது ஊழலில் தொடர்புள்ளவர்களைக் களையெடுக்கும் வேலையை ரமபோசா மேற்கொள்வது அவசியம்.
பிரச்சனைகள்
  • தென்னாப்பிரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27% ஆக இருக்கிறது. அரசின் நிதி நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. சமூகநலத் திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கப்படாமல் வாடுகின்றன. 7 கோடி மக்கள் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் திறமையற்ற நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ‘சிலருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ... ஊழலை ஒழிப்பேன்’ என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு அறிவித்தார் ரமபோசா.
  • அதை நிறைவேற்ற வேண்டும். கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்றால் உரிய பயனாளிகளுக்கு நிதி நேராகப் போய்ச் சேருவதை உறுதிசெய்ய வேண்டும். வேலைவாய்ப்பில்லாமல் வாடும் இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சித் திறனை அளிக்க வேண்டும். நல்ல நிர்வாகத்தை அளிக்கவும் பொருளாதாரத்தைச் செம்மைப்படுத்தவும் முதலில் கட்சியில் களையெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ரமபோசா தயங்கக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை(20-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்