TNPSC Thervupettagam

வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு வலுப்படுத்த வேண்டும்

February 12 , 2019 1965 days 1198 0
  • எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலின்போது ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை மேம்படுத்தினால் போதுமானது என்று எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
வாக்குப் பதிவு முறை
  • வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய வாய்ப்புள்ளதால், மீண்டும் வாக்குப் பதிவு முறையையே கொண்டுவர வேண்டும் என்று கோரிவந்த எதிர்க்கட்சிகள், தற்போது தங்களது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டிருக்கின்றன. வாக்குச்சீட்டு இயந்திரங்களின் மீதான நம்பிக்கைத் தன்மையை வலுப்படுத்தும்வகையில் ஒப்புகைச் சீட்டு முறையை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.
  • வாக்குப் பதிவு இயந்திரங்களின் வருகைக்குப் பிறகு, தேர்தல் நடைமுறைகள் விரைவாக நடந்துவருகின்றன என்பதை மறுக்க முடியாது. இயந்திரங்களில் தில்லுமுல்லுகள் செய்ததற்கான தடயங்களோ, நிரூபணங்களோ இல்லை. எனினும், அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக, வாக்களிக்கும்போதே அது எந்தச் சின்னத்தில் பதிவாகிறது என்று வாக்காளருக்குக் காட்டுவதற்கும், அப்படியே ஒப்புகைச் சீட்டில் பதிவாவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒப்புகைச் சீட்டு முறை
  • அனைத்து மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், ஏதாவது ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட அந்த வாக்குச் சாவடியில், சீட்டில் பதிவான வாக்குகளும் இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு ஒப்பிடப்படுகின்றன. இது அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது என்பதற்காக. இதை ஒவ்வொரு தொகுதியிலும் 50% வாக்குகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன.
  • இயந்திர உற்பத்தியாளர்களும் அதிகாரிகளும் மோசடிக்கு உடந்தையாகக்கூடும் என்ற அச்சத்தால், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அவசியம் என்று கருதினால், கூடுதலாகச் சில வாக்குச் சாவடிகளில் வேண்டுமானால் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய இயந்திரத்தைப் பயன்படுத்துமாறு கேட்பதே சரியானதாக இருக்கும்.
  • 2018-ல் உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களில் நடந்த மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலின்போது 20% அளவிலும், கர்நாடக சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலின்போது 4% அளவுக்கும் ‘விவிபாட்’ இயந்திரங்களில் தடங்கல்கள் ஏற்பட்டன. பருவநிலையில் ஏற்படும் சிறு மாறுதல்கள்கூட ஒப்புகைச் சீட்டுடன் இணைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பாதிப்பதே அத்தடங்கல்களுக்குக் காரணம். எனினும், சத்தீஸ்கரில் நடந்த தேர்தலின்போது ‘விவிபாட்’ இயந்திரத்தில் 89% அளவுக்கே குறைகள் இருந்தன.
  • ஒப்புகைச் சீட்டு முறையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் பயன்படுத்த வழி இருக்கிறதா என்று இந்தியப் புள்ளிவிவர நிறுவனத்திடம் ஆலோசனை கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் நடைமுறைகள் எளிதாக மாறுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வாக்குப் பதிவுகள் மீதான நம்பகத் தன்மையும் முக்கியம். ஒப்புகைச் சீட்டு முறையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு அந்த நம்பிக்கை வாய்க்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்