TNPSC Thervupettagam

விடுதலைப் போரின் வீர மங்கைகள்

April 10 , 2019 1910 days 1130 0
  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். அகிம்சைப் போராட்டம் மட்டுமல்லாமல் ஆயுதமேந்திய போராட்டங்களிலும் பெண்கள் பலர் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்துள்ளனர். கொடுமையான தண்டனைகளையும் பெற்றுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான சிலர்:
உஷா மேத்தா
  • குஜராத்தில் பிறந்த இவர் 1928-ல் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்று ‘சைமன் வெளிய போ’ என்று முழக்கம் எழுப்பிய போது, இவருடைய வயது எட்டு. காந்திய வழியில் போராடிய இவர் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ‘காங்கிரஸ் ரேடியோ’ என்ற ரகசிய வானொலி ஒலிபரப்பைத் தொடங்கினார். இதற்காகச் சிறைக்குச் சென்றவர் 1946-ல் விடுதலையானார்.
துர்காவதி தேவி
  • 1907-ல் வங்கத்தில் பிறந்து விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடியவர். 1928-ல் பிரிட்டிஷ் அதிகாரி ஜான் பி.சாண்டர்ஸைக் கொன்றபின் பகத் சிங், ராஜகுரு ஆகியோர் காவல் துறையிடமிருந்து தப்பிக்க இவர் உதவினார். அதன் பிறகு ஹெய்லி பிரபுவைக் கொல்ல முயன்றதற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றார்.
சுனிதி செளத்ரி
  • இவரும் சாந்தி கோஷ் என்பவரும் வங்கத்தில் கொமில்லா மாவட்ட மாஜிஸ்திரேட் சார்லஸ் ஸ்டீவன்ஸை 1931-ல் சுட்டுக் கொன்றதற்காகச் சிறைக்குச் சென்றனர். அப்போது சுனிதிக்கு வயது 14, சாந்திக்கு ஆங்கிலேய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 1942-ல் இருவரையும் விடுவிக்கச் செய்தார் காந்தி.
பீனா தாஸ்
  • 1911-ல் கொல்கத்தா வில் பிறந்தவர். 1932 பிப்ரவரி 6 அன்று கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற ஆங்கிலேய அரசின் வங்க ஆளுநர் ஸ்டான்லி ஜாக்ஸனைச் சுட்டுக் கொல்ல முயன்றதற்காகச் சிறைத் தண்டனை கிடைத்தது. 1939-ல் விடுதலையான பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று 1942 முதல் 45 வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய அக்கா கல்யாணி தாஸும் விடுதலைப் போராட்ட வீராங்கனையே.
ராணி காயிதின்ல்யு
  • மணிப்பூரில் இருந்த ‘ஹெராகா’ என்ற மத அமைப்பில் சேர்ந்தார். அந்த அமைப்பு மணிப்பூர் உள்ளிட்ட நாகா பகுதிகளிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிப்பதற்கான அரசியல் இயக்கமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகப் பங்கேற்ற காயிதின்ல்யு, 1932-ல் தனது 16-வது வயதில் ஆயுள் தண்டனை பெற்றார். 1947-ல் நாடு விடுதலை பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டார். இவருக்கு ‘ராணி’ என்ற பட்டத்தை நேரு வழங்கினார்.
அக்கம்மா செரியன்
  • திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் பிறந்தவர். 1938-ல் தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 20,000 பேர் கொண்ட பேரணியை வழிநடத்தினார். ஆங்கிலேயக் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாரானபோது, “என்னை முதலில் சுடுங்கள்” என்று துணிச்சலாக முன்வந்தார். இதையறிந்த காந்தி, இவரை ‘திருவிதாங்கூரின் ஜான்சிராணி’ என்று புகழ்ந்தார்.
கமலாதேவி சட்டோபாத்யாயா
  • மங்களூருவில் பிறந்த இவர் 1919-ல் 16 வயதில் விதவையானார். அன்றைய சமுதாயத்தின் கடும் எதிர்ப்பை மீறி ஹரீந்திரநாத் என்ற கலைஞரை மணந்து அவருடன் லண்டனில் குடியேறினார். காந்தியின் ‘ஒத்துழை யாமை இயக்க’த்தால் ஈர்க்கப்பட்டுத் தாய்நாடு திரும்பி, சமூக முன்னேற் றத்துக்காக காந்தி தொடங்கிய ‘சேவா தள’த்தில் இணைந்தார். ‘உப்பு சத்தியாகிரக’த்தில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றார்.
அருணா ஆசஃப் அலி
  • 1909-ல் ஹரியாணா வில் பிறந்தவர். 1930-ல் உப்பு சத்தியா கிரகத்தில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்று இரண்டு ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதாயினர். மறுநாள் அதே மாநாட்டில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.
கனகலதா பரூவா
  • அசாமில் 1924-ல் பிறந்த வர். ‘வெள்ளை யனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒரு காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் முன்வரிசையில் சென்றார். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 வயதில் உயிர் நீத்தார்.
போகேஸ்வரி ஃபுக்கானனி
  • 1885-ல் அசாமில் பிறந்த இவர் எட்டுக் குழந்தைகளுக்குத் தாயாக இருந்தபோதும் அகிம்சைவழி விடுதலைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அப்போது ஒரு காவலர் தேசியக் கொடியை அவமதித்ததற்காகத் தன் கையிலிருந்த கொடிக்கம்பால் அவரைத் தாக்கினார் போகேஸ்வரி. இதையடுத்து, காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்