விமானப் படைத் தாக்குதலுக்கு பழமையான போர் விமானம் மிராஜ்-2000ஐ தேர்வு செய்தது ஏன்?
February 26 , 2019 2098 days 1242 0
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்திய எல்லையில் இருந்து புறப்பட்ட பனிரெண்டு மிராஜ் - 2000 போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை தாக்கி அழித்துவிட்டு திரும்பின.
இந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியாகத் தொடங்கியதும், சிலர், இந்திய விமானப் படையில் பல அதிநவீன போர் விமானங்கள் இருக்கும் நிலையில், மிகப் பழமையான மிராஜ் ரக போர் விமானம், இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பினர்.
இந்திய விமானப் படையில் அதி நவீன போர் விமானங்களாக சு-30எம்கேஐ மற்றும் மிக்-29 என ஏராளமான புதிய ரக விமானங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு மிகவும் பழமையான மிராஜ்-2000 போர் விமானத்தையே இந்திய விமானப் படை விமானிகள் தேர்வு செய்துள்ளனர்.
இந்தியர்களுக்கு மிராஜ் போர் விமானம் ஒன்றும் புதியதல்ல.
இந்த போர் விமானத்தைத் தயாரித்த டிஸஸால்ட் அவியேஷன் நிறுவனமும் இந்தியர்களுக்கு புதிதல்ல.
ரஃபேல் ஃபைட்டர் உள்ளிட்ட போர் விமானங்களையும் இந்த நிறுவனமே தயாரித்தது.
1999ம் ஆண்டு கார்கில் போரின் போது, எதிரிகளின் பல பங்குகளை குறிவைத்து துல்லியமாகத் தாக்கிய அழித்த பெருமை மிராஜ்-2000 போர் விமானத்தையே சாரும்.
இந்தியாவின் படைப்பலங்களில் மிக பயங்கரத் தாக்குதலுக்கு பெயர் போனதாக மிராஜ் விளங்குகிறது.
இந்த போர் விமானம் இந்திய விமானப் படையில் 1985ம் ஆண்டு இணைக்கப்பட்டது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 ரக போர் விமானங்களை தனது படையில் இணைத்துக் கொண்டதன் மூலம் பாகிஸ்தான் பலத்தை அதிகரித்த போது, இந்தியா தனது படையில் ஒரே ஒரு விமானி இயக்கும் 36 மிராஜ் 2000 போர் விமானங்கள் இணைத்துக் கொண்டது.
இது 1982ம் ஆண்டு 4 பேர் அமரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
2004ம் ஆண்டு மேலும் 10 மிராஜ் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.
அப்போது மொத்தம் 50 மிராஜ் விமானங்கள் இந்திய விமானப் படையில் இருந்தன.
சரி.. அதிரடித் தாக்குதலுக்கு மிராஜ் போர் விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பதை பார்க்கலாம்.
அதாவது கில்லர் ஜெட் எனப்படும் மிராஜ் போர் விமானம் ஒரு எஞ்ஜினில் இயக்கப்படும் குறைந்த எடைகொண்ட விமானமாகும்.
இது அதிகபட்சமாக மணிக்கு 2,336 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
மேலும், தரையில் இருந்து 59 ஆயிரம் அடி உயரத்தில், 1,550 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தபடிய விமானத்தில் இருந்து குண்டுகளை எறியும் வல்லமை பெற்றது.
அது மட்டுமா? லேசர் முறையில் துல்லியமாக இலக்கைக் குறி வைத்து வெடிகுண்டுகளை வீசும் திறனும், விமானத்தில் இருந்து தரைப் பகுதியையும், தரைப் பகுதியில் இருந்து வானத்தில் பறக்கும் இலக்கையும் துல்லியமாக குறி வைத்துத் தாக்கும் வல்லமையும் பெற்றுள்ளது.
பிரான்ஸ், எகிப்து, ஐக்கிய அரபு நாடுகள், பிரேசில், தைவான், க்ரீஸ் மற்றும் பெரு ஆகிய நாடுகளும் இந்த வகை போர் விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன.
2011ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிராஜ் போர் விமானம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு மிராஜ் 2000-5 எம்கேவாக மாற்றப்பட்டதால் அதன் பணிக்காலம் 2030 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.